ஸ்பெயினுடன் கேட்டலோனியா இணைந்திருக்க வலியுறுத்தி மக்கள் பேரணி » Sri Lanka Muslim

ஸ்பெயினுடன் கேட்டலோனியா இணைந்திருக்க வலியுறுத்தி மக்கள் பேரணி

keddalonia

Contributors
author image

BBC

ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணத்தில் கடந்த ஞாயிறன்று நடந்த சர்ச்சைக்குரிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் அம்மாகாணம் ஸ்பெயினிடம் இருந்து பிரிந்துபோய் தனி நாடாகவேண்டும் என்பதற்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது. இந்நிலையில் ஸ்பெயினுடன் கேட்டலோனியா இணைந்திருக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் தலைநகரில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மாட்ரிட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் கேட்டலோனிய நகரமான பார்சிலோனாவில் இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை வலியுறுத்தி மக்கள் போராட்டம் செய்தனர்.

“ஸ்பெயின் அதன் தலைவர்களை விட சிறந்தது” மற்றும் “நாம் பேசுவோம்” என்று குறிப்பிடும் பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தார்கள்.

தற்போது நிலவும் அரசியல் நிச்சயமற்ற நிலையில் கேட்டலோன் பிராந்தியத்தில் இருந்து வெளியேறுவதாக வணிக நிறுவனங்கள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்து வருகின்றன.

ஸ்பெயினின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றைக் கட்டுப்படுத்தும் கைக்சா அறக்கட்டளை, அங்கு நெருக்கடி நிலை தொடர்வதால் அதன் தலைமையகத்தை பால்மா டி மல்லோர்காவிற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது.

கேட்டலோனின் சுதந்திரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், காட்டலான் அதிபர் சார்லஸ் பூஜ்டியமோன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஆற்றவுள்ள உரைக்காக அப்பிராந்தியமே காத்திருக்கிறது.

கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் சுதந்திரம் வேண்டுமென்று வாக்களித்திருந்தனர்.

Web Design by The Design Lanka