ஸ்பெயின்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற பிரதமர் பதவி நீக்கம் » Sri Lanka Muslim

ஸ்பெயின்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற பிரதமர் பதவி நீக்கம்

_101835867_a6d1b794-b4f8-4e12-bc61-8817ffd7650a

Contributors
author image

BBC

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் வலுக்கட்டாயமாக அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயினின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ள சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான சாஞ்சாவுக்கு மரியானோ ரஜோய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரஜோயின் மக்கள் கட்சி ஊழலில் ஈடுபட்டதாக கூறி சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் சாஞ்சா குற்றச்சாட்டு எழுப்பியதோடு, அந்நாட்டு அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் போதிய வாக்குகளை பெற தவறிய மரியானோ ரஜோய், பிரதமர் பதவிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டுள்ளார்.

பழமைவாத கட்சியின் தலைவரான ரஜோய் 2011ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெயினின் பிரதமராக செயல்பட்டு வந்தார்.

நவீன ஸ்பெயினின் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று பதவி இழக்கும் முதல் பிரதமர் மரியானோ ரஜோய் ஆவார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று இரண்டாவது நாளாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பேசிய ரஜோய், தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். மேலும் தான் கண்டதைவிட சிறந்த ஸ்பெயினை விட்டுச்செல்வதில் பெருமையடைவதாகவும், சாஞ்சாவும் அதையே உணருவார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 180உறுப்பினர்களும், எதிராக 169 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

Web Design by The Design Lanka