ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கடந்த காலத்தை மீட்டிப்பார்க்க வேண்டும் - திலும் அமுனுகம - Sri Lanka Muslim

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கடந்த காலத்தை மீட்டிப்பார்க்க வேண்டும் – திலும் அமுனுகம

Contributors

இராஜதுரை ஹஷான்)

இடம் பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் வெற்றி பெறுவதற்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கடந்த காலத்தை மீட்டிப்பார்க்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பொல்காவெல பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலவச போக்குவரத்து சேவையினை பயனுடையதாக மாற்றியமைக்கும் திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சேவையில் 5 வருட காலத்திற்கும் அதிகமாக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுபவர்களுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சாரதிகள் சேவை ஒழுங்கு முறையற்றதாக காணப்படுகிறது. சாரதி ஆலோசனை பதவி வெற்றிடம் தொடர்பில் இதுவரை காலமும் கவனம் செலுத்தப்படவில்லை. ஆகவே சாரதி ஆலோசனை பதவிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சையை இம்மாதம் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவையினை பாதுகாப்பானதாகவும், பயனுடையதபாகவும் மாற்றியமைப்பது பிரதான இலக்காகும்.

மாகாண சபை தேர்தல் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் வெற்றி பெறுவதற்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. அனைத்து மாகாணங்களிலும் பொதுஜன பெரமுன வெற்றி பெறும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக குறிப்பிடுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி ஊடாக ஒன்றினைந்து பயணிக்க எதிர்பார்க்கிறோம். சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவதால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டதால் பொதுத் தேர்தலில் 13 ஆசனங்களை பெற்றுக் கொண்டது. ஆகவே கிடைக்கப் பெற்ற மக்களாணை குறித்து சுதந்திர கட்சி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team