ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களும் அதன் பின்னணியும் - Sri Lanka Muslim

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களும் அதன் பின்னணியும்

Contributors
author image

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

எல்லா ஊடகங்களிலும் மேடைகளிலும் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் அரசியல் நிறுவனம் பல கோணங்களில்  விமர்சிக்கப்படுகிறது. இவ்வாறு விமர்சிக்கப்படுவது, அதன் இயக்கவிதியில் இன்னும் அது இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக நாம் புரிந்துகொள்ள போதுமான அத்தாட்சியாகும். அந்தவகையில், ஏன் இந்த நிறுவனம் இவ்வாறு விமர்சிக்கப்படுகிறது என்பதை சற்று விரிவாக ஆராயும் நோக்கிலேயே இந்தக் கட்டுரை வரையப்படுகிறது. இக்கட்டுரையின் நீளம் குறித்து பாகம் பாகமாக வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

என்னைப் பொறுத்தவரை. இவ்வாறு விமர்சிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது
1. இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது
2. இந்த நிறுவனத்தை இந்தக் காலகட்டத்தில் பலவீனப்படுத்த வேண்டிய தேவை பலரால் உணரப்பட்டுள்ளமை

 

முதலாவது காரணத்தைப் பொறுத்தவரை, முஸ்லிம் காங்கிரஸ், ஏலவே மிகத்தெளிவாக ‘’கண்ணைத் திறந்து கொண்டு அதளபாதாளத்தில் விழுந்திருக்கிறோம்’’ என்ற தனது தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்திருகிறது. ஆகவே, தன் விருப்பத்திற்கு மாறான  ஒரு அழுத்தத்தின் பேரிலேயே இவ்விணைவு நடந்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவ்வளுத்தத்தை ஏற்படுத்தக் காரணமானவர்கள், வெளியில் இல்லை. உள்ளேதான் இருந்தார்கள் என்பதும் இந்த நாடு அறிந்த விடயம். அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொள்ள, கட்சியை உடைத்துக்கொண்டு போவதற்கு தயாரானவர்களால், இந்தக்கட்சி உடைக்கப்படுவதை தடுப்பதற்காகவே, அரசாங்கத்தில் இணைந்தார்கள் என சிறுபிள்ளையும் கூறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், இவ்விணைவு அவ்வளவு பரபரப்பை அந்த நேரம் ஏற்படுத்தி இருந்தது.

 

பயங்கரவாதத்தை முற்றாக அழித்து, பலமான எதிரணியினரான ஐக்கிய தேசிய கட்சியை கட்டம் கட்டமாக உடைத்து பலவீனப்படுத்தி, தனக்கு சவாலாக இருந்த இரண்டு விடயங்களிலும் வெற்றி கண்டிருந்த இந்த அரசாங்கம், மிகச்சிறிய முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியை உடைப்பதற்கு அதிக பிரயத்தனம் எடுக்கத் தேவையில்லாத வண்ணம், கட்சிக்கு உள்ளே இருந்தவர்கள் அதுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளோடும் தயாராக இருந்ததை உணர்ந்துதான், முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தோடு சேர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது என முஸ்லிம் காங்கிரஸின் கடைமட்ட தொண்டனும் சொல்லுகிறான். சம்மந்தப்பட்டவர்கள் அதே பதவியை கட்சிக்கு தெரியாமல், பின்கதவால் சென்று தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது வேறு கதையாக இருக்கின்ற போதிலும், கட்சி இன்னுமொரு உடைவிலிருந்து காப்பாற்றப்பட்டது.  

 

இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்குள் சென்ற போதிலும், முழுமையான ஒரு சரணடைதலை செய்யவில்லை என்பதற்கு, கடந்த காலங்களில் அரசாங்கத்தினதும், இக்கட்சியின் செயற்பாடுகளிலிருந்து  நிறைய  விடயங்களை நாம் அவதானிக்கலாம்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைந்து கொண்டபோதிலும் இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை, இவர்கள் நமது கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு வரவில்லை, மாறாக தமது கட்சியை பாதுகாக்கவே வந்துள்ளனர் என்பதும் – கடந்த காலங்களில் நடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் தனக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும் –  அதேபோலே, கடந்த பாராளுமன்ற, மாகாண சபை தேர்தல்களிலும் தன்னோடு இருக்கவில்லை என்பதும் மனதை உறுதிக்கொண்டிருக்கின்ற  அதேநேரம் – கடந்த காலங்களில் ஒரு தடவை சந்திரிகாவின் காலத்திலும், இன்னுமொரு தடவை தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவின் காலத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய அனுபவமும் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் வேற்றுக்கண் கொண்டு பார்க்கும் நிலைமையே தோற்றுவித்துள்ளது.

 

அதனால், இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள வாய்ப்பளிப்பதில்லை என்பதிலும் – முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறி எதிர் அரசியல் செய்வோரை பலப்படுத்தி, தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதனூடாக, தனக்கு தேவையான முஸ்லிம் வாக்குகளை பெற்றுகொள்ள முடியும் என்பதையும் கணித்து – வன்னி மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாரை மாவட்டத்திலும், அதிகாரம் பொருந்திய அமைச்சரவை அமைச்சு மற்றும் பிரதியமைச்சுக்களை வழங்கி, அவர்களுக்கு அபிவிருத்திக்காக தாராளமாக நிதியினை வழங்கிக் கொண்டிருப்பதோடு – உரிமை சார் அரசியலை மையப்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் இயங்குவதிலிருந்து மக்களை திசைதிருப்பி, அபிவிருத்தி அரசியலுக்கு மதிமயக்கும் தந்திர முறையை இந்த அரசு  கையாள்கிறது.

 

அதேபோன்று, மாவட்ட மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் நிருவாக மற்றும் நிறைவேற்றுத் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவிகள், பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பதவிகள் என்பவற்றை வழங்காமல் மறுத்து, தனது விசுவாசிகளான மாற்று அரசியல் செய்யும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கி, அவர்களைப் பலப்படுத்தும் யுக்தியையும் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.

 

அதேபோன்றுதான், இனப் பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிக்கும் நோக்கில் இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ள பாராளுமன்ற தெரிவுக் குளுவில், ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொண்டிருக்கின்ற விமல் வீரவன்சவின் கட்சி போன்றவற்றை உள்வாங்கியுள்ள போதிலும் , இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் சுதந்திர கட்சிக்கு அடுத்த படியாக அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஓரே ஒரு சிறுபான்மைக்  கட்சியான முஸ்லிம் காங்கிரஸ்யை உள்வாங்கவில்லை. அவ்வாறு உள்வாங்கினால் முஸ்லிம்களின் பிரச்சனைகளை முஸ்லிம் காங்கிரஸ் பேசும், அப்படி பேசினால் அது முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்தி விடும் என்ற எண்ணத்தில், தங்களுக்கு விசுவாசமான எதிர் அரசியல் செய்யும் முஸ்லிம் அமைச்சர்களை மட்டும் உள்வாங்கியுள்ளது.

 

மேலும், அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அரச விரோத கருத்துக்களாலும், அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்ற அழுத்தத்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் தன்னை விட்டு வெளியிறங்கலாம் என்ற கணிப்பீட்டால், முஸ்லிம் காங்கிரசை உடைப்பதினூடாக தனக்கு விசுவாசமான புதிய அணியொன்றை உருவாக்கும் எண்ணத்திலும், அக்கட்சிக்கு உள்ளேயே தனக்கு ஆதரவான அணியை உருவாக்கும் எண்ணத்திலும், அக்கட்சிக்கோ அல்லது அதன் தலைமைக்கோ எந்த விதமான முன்னறிவிப்புமின்றி அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளது.     

 

முன்பு கூறியதைப் போன்று, ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொண்டிருக்கின்ற விமல் வீரவன்சவை பாராளுமன்றத்தில் ஒரு கட்சியின் தலைவர் அந்தஸ்து கொடுத்திருக்கிறபோதும், ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொண்டிருக்கின்ற அதாஉல்லாவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு கட்சியின் தலைவர் அந்தஸ்து கொடுத்திருக்கிறபோதும், இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் சுதந்திர கட்சிக்கு அடுத்த படியாக அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஓரே ஒரு கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு ஒரு கட்சியின் தலைவர் என்ற அந்தஸ்து கொடுக்கப் படவில்லை, அவ்வாறு கொடுக்கப்பட்டால், அரசுக்கு தர்மசங்கடமான சூழலில், அரசுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் பேசினால், அதனுடாக முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் பலப்பட்டுவிடும் என்ற காரணத்தால், அரசு அந்த அந்தஸ்தை கொடுக்காமல் வைத்திருக்கிறது.
                                        தொடரும்……….

Web Design by Srilanka Muslims Web Team