ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களும் அதன் பின்னணியும் – பாகம் ௦2 - Sri Lanka Muslim

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களும் அதன் பின்னணியும் – பாகம் ௦2

Contributors
author image

ஏ. எல் தவம்

மேலும், அரச ஊடகங்களில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்தவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. அவற்றை வெளிக்கொணர்வதும் இல்லை. ஒன்றிரண்டு செய்திகளை தவிர்க்க முடியாமல் வெளிக்கொணர்ந்தாலும், அவை அரசாங்க சார்பு கருத்துடையதாக மட்டும் இருக்கும். ஆனால், மாற்று முஸ்லிம் அணியினரின் செய்திகளை தலைப்புச் செய்திகளாக வெளிக்கொணர்வார்கள்.

 

வேலை வாய்ப்பு, பதவி உயர்வு போன்ற விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்தவர்கள் புறக்கணிக்கப் படுகின்ற அதேநேரம் மாற்று முஸ்லிம் அணியினருக்கு அள்ளிக் கொடுக்கப்படுகிறது. அவற்றை எங்களுக்கும் தாருங்கள் என்று முஸ்லிம் காங்கிரஸ்யை சேர்ந்தவர்கள் ஒரே பிடியில் நின்றால், ஏனோதானோ என்று ஒரு சிலது வழங்கப்பட்டாலும், அவை கீழ்மட்ட உத்தியோகங்களாக மட்டுமே இருக்கின்றன. அதே நேரம், பதயுயர்வை பொறுத்த மட்டில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்தவர்கள் திட்டமிட்டே இதுவரை புறக்கணிக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.

 

அரச பொது நிகழ்வுகளில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்தவர்கள் அதிகமாக அழைக்கப்படுவதில்லை. அவ்வாறு அழைக்கப்பட்டாலும், அவர்களுக்கான முக்கியத்துவம் சரியான வகையில் வழங்கப்படுவதுமில்லை. அதே நேரம் மாற்று முஸ்லிம் அணியினருக்கான கௌரவமும் உபசரிப்பும் மிகச்சிறப்பாக வழங்கப்படுவதோடு, அங்கு உரையாற்றவும் சந்தர்ப்பம் வழங்கப்பப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைந்திருக்கின்ற போதிலும், இரண்டறக் கலந்து சரணாகதி அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதற்கு, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இருந்து, இன்னும் எத்தனையோ விடயங்களை மேற்கோள் காட்டலாம். இருப்பினும், இத்தோடு நிறுத்திக் கொண்டு, முஸ்லிம் காங்கிரஸின் புறத்திலிருந்து சில விடயங்களை பார்க்கலாம்.

 

அரசாங்கம் நாடு நகர அபிவிருத்தி கட்டளை சட்டத்தை கொண்டு வந்த போது, இந்தச் சட்டம், பிரதேச செயலாளர்களையும், மாகாணக் காணி ஆணையாளர்களையும் மீறி, நிலங்களை கையாளும் அதிகாரத்தை, வேறு அபாயகரமானவர்கள் கையேற்கும் ஒரு ஏற்பாடு என மிக உறுதியாக முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்தது. இச்சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், சிறுபான்மையினருக்கு சொந்தமான நிலங்களில் பெரும்பான்மை ஆதிக்க அடையாளங்கள் நிறுவப்பட வழிவகுக்கும் என முஸ்லிம் காங்கிரஸ் மிக மூர்க்கத்தனமாக எதிர்த்து நின்றது. அதனால், அரசாங்கத்தால் அச்சட்டத்தை நிறைவேற்ற முடியாமலே போய்விட்டது.

 

அதேபோன்று, சிறுபான்மையினருக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கும் ஒரே ஒரு யாப்பு ரீதியிலான ஏற்பாடாக இருக்கின்ற பதின்மூன்றாவது சரத்தில், கொஞ்ச நஞ்சம்  மிச்சமிருக்கின்ற சாரத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் திருத்தம், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போது, அரசின் பங்காளிக் கட்சிகளான எத்தனையோ சிறுபான்மைக் கட்சிகள் மௌனமாக இருந்த போதும், முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தைரியமாக எதிர்த்து நின்றது.

 

மத்திய அரசாங்கத்தில் தற்போதைய சூழலில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செய்ய முடியாமல் இருக்கின்ற போதிலும், மாகாண [மாநில] அரசாங்கங்களை தீர்மானிக்கின்ற சக்திகளாக இருப்பதனால். சிறுபான்மை இனத்தினரின் அரசியலுக்கு பெறுமானம் சேர்க்கும் விடயமாக, குறிப்பாக கிழக்கில் முஸ்லிங்களுக்கு பெறுமானம் சேர்க்கும் விடயமாக இருக்கும் பதின்மூன்றாவது சரத்தை, பலவீனமாக்குவதற்கு இடமளிப்பதில்லை என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் மிக உறுதியாக நின்று அதில் வெற்றியும் கண்டது.

 

எல்லை நிர்ணய ஆணைக் குழு உருவாக்கப்பட்டு, அதில், சிறுபான்மையினரின் ஆதிக்கமுள்ள பகுதிகளை திட்டமிட்டு பிரித்து, பெரும்பான்மையினர்கள் வாழும் அண்டைய பிரதேசங்களோடு சேர்த்து, சிறுபான்மையினரின் அரசியல் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்வதற்கான திட்டத்தோடு செயற்பாடுகள் தொடங்கப்பட்ட போது, அதனை  பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் கேள்விக்குட்படுத்தி, அத்திட்டத்தை இடைநிறுத்துமளவு முஸ்லிம் காங்கிரஸ் தனது பங்களிப்பைச் செய்தது. குறிப்பாக, வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பெரும்பான்மை கூட்டல் கழித்தல் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் நிறுத்தியது.

 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு, புத்தளத்திலும் நாட்டின் வேறு பாகங்களிலும் சிதறி வாழுகின்ற முஸ்லிம்களின் அரசியல் முக்கியத்துவம், அவர்களின் திரட்சியான வாக்குகளிலேயே தங்கி இருப்பதாலும், இருப்பினும் அவர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களில் வாழாத காரணத்தினால், அதை அவர்கள் இழந்திருப்பதையும் கவனத்தில் கொண்டு, அவர்களை சொந்த மாவட்டங்களில் வாக்களிக்க வாய்ப்பளிக்கும் சட்டத் திருத்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் முன்கொண்டு வந்தது.

 

இச்சட்டம் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் பொருந்தும் என்பதால்,புலி ஆதரவு சட்டமாக இதனை வர்னித்து, அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் போர்க்கொடி தூக்கிய போதும், எங்களுடைய சமூகத்திற்கு அனுகூலமான இதனை நிறைவேற்றியேயாகுவோம் என துணிந்து நின்று நிறைவேற்றியும் காட்டியது.

 

கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தன்னோடு சேர்ந்து தேர்தல் கேட்காது விட்டால், கிழக்கில் தான் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாது எனக் கருதிய அரசாங்கம், தன்னோடு சேர்ந்து களமிறங்குமாறு எவ்வளவு வற்புறுத்தியும், முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு வளைந்து கொடுக்காமல், அத்தேர்தலில் தனித்துக் களமிறங்கி, அரசாங்கத்தை, தனது தயவில் தங்கி இருக்கும் நிலைக்கு தள்ளிவிட்டு, தான் அரசாங்கத்தில் இருந்த போதிலும், அரசாங்கம் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபட்டு செல்லாது என்பதை மிகப்பகிரங்கமான சவாலாக எடுத்து செய்து காட்டியது.
தொடரும்……….

Web Design by Srilanka Muslims Web Team