ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆற்றிய உரை » Sri Lanka Muslim

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆற்றிய உரை

ameen

Contributors
author image

M.S.M.ஸாகிர்

பேருவளை சமூக மேம்பாட்டிற்கான மைய அறிமுக நிகழ்வில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆற்றிய உரை….

இயக்க மோதல் காரணமாக இரு மரணங்கள் இடம்பெற்ற இப்பிரதேசத்தில் இங்குள்ள சகல தஃவா மற்றும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள பேருவளை சமூக மேம்பாட்டிற்கான மைய அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுரையாற்றும் வாய்ப்புக் கிடைத்ததனைப் பெரும் பேராகக் கருதுகிறேன்.

இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் நடுச்சந்தியிலிருக்கின்ற ஒரு கால கட்டத்தில் அரசியலுக்கு அப்பால் சிந்திக்கின்ற ஒரு சக்திமிகு அமைப்பு முஸ்லிம் சமூகத்திற்கு இன்று அவசியமாக இருக்கின்றது. என்றுமில்லாதளவுக்கு முஸ்லிம் சமூகத்தில் அரசியல்ரீதியாக, இயக்கரீதியாக ஏற்பட்டுள்ள பிளவு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட இயக்க மோதல் காரணமாக இடம்பெற்ற மரணங்கள் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் வளர்கின்றது என்ற குற்றச்சாட்டை சுமத்துமளவிற்கு மோசமான நிலையை ஏற்படுத்தியது.

அதேபிரதேசத்தில் காலம் தாமதித்தேனும் சகல விடயங்கள் பற்றியும் செயற்படும் பேருவளை சமூக மேம்பாட்டிற்கான மையம் உருவாகியிருக்கின்றது. இந்த இயக்கத்தை உருவாக்குவதற்கு முன்னோடிகளாகச் செயற்பட்டோரின் பெயர் எதிர்காலத்தில் வரலாற்றில் இடம்பெறும். இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட செய்தி நாட்டின் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மகிழ்ச்சியானதொரு செய்தியாகும்.

உலகில் 15 கோடி யூதர்கள் வாழ்கின்றனர். அதேநேரம் 150 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
ஒரு யூதனுக்கு 170 முஸ்லிம்கள் இருக்கின்றனர். உலகில் வாழும் நான்கு மனிதர்களில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். யூதர்களும், கிறிஸ்தவர்களும் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதன் காரணமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டாததனாலேயே இன்று பின்னிலையிலே இருக்கின்றனர். கல்விக்கு நாம் முக்கியத்துவமளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காகவே நான் இந்தப் புள்ளி விபரங்களைச் சுட்டிக் காட்டுகிறேன். கிறிஸ்தவர்களில் 90 சதவீதமானோர் கல்வி அறிவுமிக்கவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்களில் 40 சதவீதமானோரே கல்வி அறிவு மிக்கவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் 5758 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.

57 முஸ்லிம் நாடுகளில் 500 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 8407 பல்கலைக்கழகங்கள் உள்ளன. முஸ்லிம் நாடுகளில் 50 சதவீதமானோர் மட்டுமே கல்வியைப் பூர்த்தி செய்கிறார்கள். கிறிஸ்தவர்களில் 40 சதவீதமானோர் பல்கலைக்கழகம் செல்கின்றனர். உலக முஸ்லிம்களில் இரண்டு சதவீதமானவர்களே பல்கலைக்கழகம் வரை செல்கின்றனர். அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிறிஸ்வர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் நாடுகளில் பத்து இலட்சம் முஸ்லிம்களுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் 5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடுகள் 0.2 சதவீதம் மட்டுமே ஒதுக்குகின்றன.

உலகில் வாழும் 150 கோடி முஸ்லிம்களில் மூன்று முஸ்லிம்கள் மட்டுமே நோபல் பரிசை வென்றுள்ளனர்.
நாம் இவற்றைக் கூறுவது முஸ்லிம்கள் கல்விக்கு முக்கியத்துவமளிக்க வேண்டுமென்பதற்காகவே முஸ்லிம்கள் வர்த்தகர் சமுதாயம் என்று கூறப்படுகின்றது. இதன் உண்மையென்ன? 2016இல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இலங்கையில் முஸ்லிம்களில் மூன்று சதவீதமானோர் கையிலே வர்த்தக நிலையங்கள் இருக்கின்றன.

முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதியில் அண்மைக்காலத்தில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுகின்றது. இப்போது 7 சதவீதமான முஸ்லிம்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். அதில் 70 சதவீதமானோர் கலை, வர்த்தகப் பிரிவுகளுக்குத் தெரிவாகின்றனர்.

விஞ்ஞானத்துறைக்கு சிறிய எண்ணிக்கையானோரே தெரிவாகின்றனர். முஸ்லிம் பாடசாலைகள் கல்வி நிலையில் அண்மைக்காலமாக வீழ்ச்சிப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. பல மாவட்டங்களில் பரீட்சைப் பெறுபேறுகளில் வீழ்ச்சி காணப்படுகின்றது. கிண்ணியா கல்வி வலயத்தில் 40 சதவீதமான மாணவர்கள் தமிழ் மொழிப்பாடத்தில் சித்தி பெறத் தவறியுள்ளனர். இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன? ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த இயக்கத்தின் ஒரு நோக்கம் ஆய்வுகள் நடத்தப்படுவதாகும். எமது சமூகத்தின் தற்காலப் போக்கு பற்றி ஆய்வுகள் நடத்தி எடுக்கும் முடிவுகள் மூலம் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

நான் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத் தலைவராகப் பணிபுரியும் போது கொழும்பு முஸ்லிம்களது கல்வி நிலை பற்றி முஸ்லிம் பாடசாலைகளை மையமாக வைத்து பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸுதுடன் இணைந்து ஓர் ஆய்வை நடத்தினோம். இந்த ஆய்வுதான் கொழும்பு முஸ்லிம்களது கல்விநிலை பற்றி வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அதற்கு முன் கொழும்பின் முஸ்லிம்களது கல்வி நிலை ஏனைய இனங்களைப் போன்று சிறப்பாக உள்ளது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அந்த ஆய்வில்தான் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பத்து சதவீதத்துக்கு குறைந்தவர்களே சித்தி பெறுகிறார்கள். பல்கலைக்கழகத்திற்கு ஓரிருமுஸ்லிம்களே தெரிவாகின்றனர் என்ற உண்மை வெளிவந்தது.
அந்த ஆய்வின் பின் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த முடிந்தது. எனவே சகல துறைகளிலும் ஆய்வுகள் நடத்தப்படுவது முக்கியமாகும்.

முஸ்லிம்களின் உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் எற்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் தொற்றா நோய்கள் கூடுதலாக முஸ்லிம்களுக்கு ஏற்படுவதாக வைத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் சட்ட வைத்திய நிபுணர் டாக்டர் கே.எஸ். தஹநாயக்க தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

இலங்கையில் அதிகமான நோய்களுக்கு உட்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களில் 43 சதவீதமானோரும் சிங்களவர்களில் 23 சதவீதமானோரும் தமிழர்களில் 20 சதவீதமானோரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களில் அநேகருக்கு இளவயதிலே தொற்றா நோய்கள் வருவதனால் அவர்களால் நாடும் சமூகமும் பெறக்கூடிய பயன்களைப் பெறமுடியாதுள்ளது. எனவே நோய்த் தவிர்ப்புக்கு என்ன செய்யவேண்டுமென்பதனை அறிவூட்டுவதற்கு இந்த இயக்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது சமூகத்தின் இருப்பு, முன்னேற்றம் என்பன சகவாழ்வுக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலே தங்கியிருக்கின்றது. சிலவருடங்களுக்கு முன் அளுத்கமையில் நடந்த இனக்கலவரம் போன்ற ஒன்று மீண்டும் ஏற்படாதிருப்பதனைத் தடுப்பதற்கு முஸ்லிம்கள் தரப்பில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுதல் வேண்டும்.

இந்த இயக்கத்திலுள்ள மற்றொரு சிறப்பம்சம் பெண் சகோதரிகளது பங்களிப்பாகும். சமூகத்தில் அநேக இயக்கங்கள் ஆண்களைக் கொண்ட இயக்கங்களாகவே இருக்கின்றன. ஆணும் பெண்ணும் இணைந்து செயற்படுவது முக்கியம். இதனை உணர்ந்து இந்த சமூக மேம்பாட்டிற்கான மையம் பெண் சகோதரிகளை உள்வாங்கியிருப்பது முக்கியமானது.

பேருவளையில் நான்கு கிராமங்களை உள்ளடக்கி ஆரம்பித்துள்ள இந்த அமைப்பு, சீனன்கோட்டைக்கும் ஏன் தர்காநகருக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் இழந்துள்ள கல்வியைப் பெறவேண்டும். இன்று பெண்களே கூடுதலாகக் கல்வியைக் கற்கிறார்கள். ஆண்கள் ஜீ.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை தேறியவுடன் வெளிநாடுகளில் சாதாரண தொழில்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் குடும்பச் சுமைகளைத் தூக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். படிப்பை இடைநிறுத்திவிட்டு வெளிநாட்டுத் தொழில்களுக்குச் செல்வதன் மூலம் சமூகத்திற்குத் தேவையான அறிவாளிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும் படிப்பினை முடித்த பின்பே வெளிநாடுகளுக்குச் செல்லும்முறை உருவாக்கப்பட வேண்டும்.

இன்று அரச தொழில் துறையில் 3 சதவீதத்துக்கும் குறைந்த முஸ்லிம்களே இருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். எந்த நாளும் வெளிநாட்டுத் தொழில்களில் நம்பியிருக்க முடியாத நிலை வரலாம்.

Web Design by The Design Lanka