ஹக்கீம் இரண்டு ராக்காத் தொழுது விட்டு கிழக்கு மகனுக்கு கொடுத்து ஏமாற்றிய சல்மானின் இராஜினாமா கடிதம் » Sri Lanka Muslim

ஹக்கீம் இரண்டு ராக்காத் தொழுது விட்டு கிழக்கு மகனுக்கு கொடுத்து ஏமாற்றிய சல்மானின் இராஜினாமா கடிதம்

bb

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அமீர் மௌலானா


ஏ.ஆர்.எம். மன்சூரைத் தொடர்ந்து பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் கெபினெட் அமைச்சராக கொடி கட்டிப் பறந்த காலத்தில் அம்பாறையில் கல்முனையை மையமாகக் கொண்டு அரசியல் சித்தார்ந்தத்தில் கிழக்கு மக்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்தனர் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. இக் காலப்பகுதியில் அதிகாரங்களும், அபிவிருத்திகளும் இக்கிழக்கு மண்ணுக்குரிய கௌரவத்தோடு மேலோங்கி காணப்பட்டன. ஆனால் பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவினைத் தொடர்ந்து முஸ்லீம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன். கிழக்கிற்கு சொந்தமான கெபினெட் அமைச்ச்சினையும் சேர்த்து ஹக்கீமுக்கு தாரை வார்த்ததை அக்காலந்தொட்டு ஏற்றுக் கொள்ளாத அதிகமான அதிருப்தியாளர்கள் தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கின்றார்கள்.

கெபினெட் அமைச்ச்சினை கிழக்கு மக்கள் வைத்திருக்க, முஸ்லீம் காங்கிரஸின் தலைமையினை மாத்திரம் ஹக்கீமிடம் கொடுத்திருக்க வேண்டும் என விவாதிக்காத, குறைகூறாத மக்களே கிழக்கில் கிடையாது, இன்று நரியின் கையில் குடல் கழுவக் கொடுத்த கதையாகவே மக்கள் ஹக்கீமை பார்க்கிறார்கள். ஹக்கீம் கட்சிப் போராளிகளை பல பிரிவுகளாக கூறு போட்டதுடன், பிரதேச, ஊர் வாதத்தினையும் தூண்டி, கட்சி ரீதியாக உள்ளக முரண்பாடுகளை ஊக்குவித்து கட்சிப் போராளிகளை வெளியேற்றியதுடன், தனது தனி நலன் வழியில் பெருந் தேசியவாதிகளுடன் கூட்டிணைந்து கிழக்கு முஸ்லீம்களின் உரிமைகளை விட்டுக் கொடுப்புச் செய்ததன் மூலமாக தன்னையும் வளர்த்து, தனது தலைமையினையும் தக்க வைத்துக் கொண்டு, கிழக்கு மக்களை ஏமாற்றுகிறார்.

வெளியூர் அழகனை விட உள்ளூர் முடவன் எவ்வளவோ மேல் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 17 வருடங்களாக ஹக்கீம் சொன்ன பொய்களும், செய்த ஏமாற்றங்களும், தில்லுமுல்லுகளும் கொஞ்சமல்ல. ஆங்கிலேயரினால் இலங்கை சுரண்டப்பட்டதையும் விட ஹக்கீமால் கிழக்கு மாகாணம் அதிகமாகவே சுரண்டப்படுகிறது. சமூகத்துக்கு நடக்கின்ற அநியாயங்களை தட்டிக் கேட்கும் திராணியற்ற முண்டங்களாகவே கிழக்கு மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மக்களுக்காக உருவாக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன், கிழக்கு மக்களின் வாக்குப் பலத்துக்கு பகரமாக கிடைக்கப் பெற்ற கெபினெட் அமைச்ச்சினையும் சேர்த்து நாம் கை தவற விட்டுள்ளோம். அதிகாரத்துக்கும், அபிவிருத்திக்கும் எமது நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், அடுத்து அந்த அரசின் கெபினெட் அமைச்சு. எங்களிடமும் கெபினெட் அமைச்சு இருந்திருந்தால், கிழக்குக்கு எவ்வளவோ செய்திருக்கலாம் இன்னும் செய்யலாம்.

ஹக்கீமின் தலைமையில் முஸ்லீம் காங்கிரசுக்கு கிடைக்கின்ற கெபினெட் அமைச்சு அல்லது மேலதிகமாக கிடைக்கின்ற கெபினெட் அமைச்சு அல்லது மேலதிகமாக கெபினெட் அமைச்சு ஒன்று பெறப்பட்டு கிழக்குக்கு தர வேண்டும் என அன்வர் இஸ்மாயில், ஹரீஸ், அதாவுல்லா போன்றவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சாத்தியப்பட வழியிருந்தும், ஹக்கீமினால் “ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது” எனக் கூறி நிராகரிக்கப் பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு மக்களின் அபிவிருத்தியை ஹக்கீம் விரும்பாததை இனம் கண்டு, சுயநலமுள்ள பிழையான தலைவரை தெரிவு செய்து விட்டோம், ஹக்கீம் எமது சமூகத்துக்கு பொருத்தமானவரல்ல, ஹக்கீமை தலைமைத்துவத்தில் இருந்து மாற்ற வேண்டும். என்ற கோஷத்துடன், கிழக்குக்குரிய கெபினெட் அமைச்சு ஹக்கீமால் மறுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில் ஹக்கீமை விட்டு இவர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.

மீண்டும் ஹக்கீம் அமைச்சராக 9 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த காலத்தில் இன்னொரு கெபினெட் அமைச்சுக்கான கேள்வி உருவாகி, பெறக் கூடிய வாய்ப்பு கண் திறந்த வேளையில், இதுவும் ஹக்கீமினால் மறுக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பத்தில் வேறு சில பிரச்சனைகளுமாக சேர்ந்து அரைவாசிக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஹக்கீமை விட்டு வெளியேறினார்கள்.

மேலும் 18 வது திருத்தச்சட்டமூலம், சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான சட்டமூலம், திவிநெகும சட்டமூலம் போன்றவற்றிக்கு மஹிந்த அரசுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கை உயர்த்தியதற்கும், கிழக்கு மாகாண சபை முதலமைச்சரை மஹிந்த அரசுக்கு கொடுத்ததற்கும் சேர்த்து, முஸ்லீம் காங்கிரஸுக்கு மேலுமொரு கெபினெட் அமைச்சினை வழங்க மஹிந்த அரசு முன்வந்த வேளையில், மறைமுகமாக ஹக்கீம் மறுத்த மூன்றாவது சந்தர்ப்பத்தில், ஹக்கீம் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கிடைக்கின்ற கெபினெட்டுக்களை எல்லாம் தடுக்கின்றார்,

இம்முறை இதை நாங்கள் இழந்து விடக்கூடாது என்ற உறுதியுடன் செயற்பட்ட பாராளுமன்ற, மாகாணசபை, ஏனைய சபைகள், மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் துணிவு அதிகமாக காணப்பட்ட பஷீர் சேகுதாவூத்தினை தெரிவு செய்து, தைரியமூட்டி எடுக்கும் படி ஊக்கப்படுத்தியதன் காரணமாக, மூன்றாவது சந்தர்ப்பத்தில் கிடைத்த கிழக்கிற்கான கெபினெட் அமைச்சு பஷீர் சேகுதாவூதினால் ஹக்கீமுக்கு தெரிந்தே பெறப்பட்டது. ஆனால் இதை ஹக்கீம் விரும்பவில்லை. இருந்தும் ஹக்கீமால் தொடர்ந்து தடுக்கப்பட்டு வந்த கிழக்கு மண்ணுக்கான கெபினெட் அமைச்சு பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஹக்கீமின் தடையையும் மீறி வெற்றிகரமாக கிழக்குக்கு பெறப்பட்டது ஒரு சாதனை என்று தான் கூற வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு சாதகமாக செயற்பட்ட ஹக்கீம் தபால் வாக்குப் பதிவின் பின்பே ஹஸனலி போன்றோருடன் சேர்ந்து மைத்திரிக்கு ஆதரவு என வழமையான நடிப்பினை வெளிப்படுத்தினார். ஆனால் நடந்த உண்மைகளை தெளிவாக தெரிந்திருந்த ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா, ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய போன்றோர்கள் அவர்களின் புதிய அரசில் ஹஸனலிக்கே கெபினெட் அமைச்சினை வழங்க தீர்மானித்திருந்தனர். அங்கு ஹக்கீமின் பெயர் இருக்க வில்லை, ஆனால் ஹக்கீமின் மன உளைச்சலையும், அழுகையையும், ஹக்கீமின் முகவர்களின், தரகர்களின் தொல்லையையும் பொறுக்க முடியாத ஹஸனலி கட்சியை நினைவு கூர்ந்து பேசவேண்டியவர்களுடன் பேசி அவரது பெயரை நீக்கி விட்டு நான்காவது சந்தர்ப்பத்தில் கிழக்குக்கு வந்த கெபினெட் அமைச்சு ஹக்கீமுக்கு மீண்டும் மாற்றிக் கொடுக்கப் படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி வட்டத்தினால் நடை பெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலின் பின் புதிய அரசில் ஹஸனலிக்கும் சேர்த்தே கெபினெட் அமைச்சு வழங்கப்படுமென சொன்னதைத் தொடர்ந்தே பாராளுமன்றத் தேர்தலில் ஹஸனலி போட்டியிடாது திட்டமிட்டு ஹக்கீமால் தடுக்கப்பட்டார். அதே போன்று தான் பஷீர் சேகுதாவூதும் தேர்தலில் வென்றால் கெபினெட் அமைச்சு கொடுக்க வேண்டி வருமென தேர்தலில் போட்டியிடாது திட்டமிட்டு தடுக்கப்பட்டார். காரணம் இருவரும் கிழக்கை சேர்ந்தவர்கள். ஹஸனலியோ, பஷீர் சேகுதாவூதோ எந்த சந்தர்ப்பத்திலும் தேசியப்பட்டியல் கேட்க வில்லை தேர்தலில் போட்டியிடவே தயாராக இருந்தார்கள்,

ஹஸனலி இறுதியாக கலந்து கொண்ட உயர் பீடக் கூட்டத்தில் ‘நான் அதிகாரமுள்ள பொதுச் செயலாளராக இருப்பதால் தான் அதை குறிப்பிட்ட சில நபர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு தடையாக நினைத்து என்னையும் தடை செய்வதாக இப்பதவியின் அதிகாரங்களை குறைத்தீர்கள், என்னை தொடர்ந்து வைத்திருந்தால் எதிர்கால சுயநலத் திட்டங்களை மேற்கொள்ள தடையாக இருக்கும் என உணர்ந்து தற்போது என்னை அகற்றுவதாக நினைத்து இச் செயலாளர் பதவியினை அகற்றுகிறீர்கள், அப்படி செய்ய வேண்டாம் தலைவர் வடகிழக்குக்கு வெளியில் என்பதால் வடகிழக்குக்கு உள்ளே இப்பதவியினை எனக்கு தரா விட்டாலும் பரவாயில்லை.

வேறு பொருத்தமான நபருக்கு வழங்குங்கள் என்றதோடு, பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும் போது இன்னொரு கெபினெட் அமைச்ச்சினைப் பெற்று அதனை கிழக்குக்கு வழங்கி கிழக்கை அபிவிருத்தி செய்யுங்கள், என்ற ஹஸனலியின் பேச்சுக்கு ஹக்கீம் பதிலளிக்கும் போது “இந்தக் கட்சிக்குள் நீண்ட காலமாக இதுதான் பிரச்சனை, இப்படி இந்த இரண்டு அதிகார மையங்களை உருவாக்க அல்லது உருவாக்க எடுக்கும் முயற்ச்சிக்கு நான் தலைவராக இருக்கும் வரை உடன்படமாட்டேன்.” என ஹக்கீம் சொல்லும் போது கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்கள் ஆதரவளித்து, வாய் செத்த பாம்பாக, கிழக்கை தாரை வார்த்ததை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலை நீடிப்பது கிழக்கு மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல, அலைகளை பிடித்துக் கொண்டு யாரும் கரை சேர்வதில்லை, அலைகளையும் விட பலவீனமானவர் இந்த ஹக்கீம், முதலில் ஹக்கீமிடமிருந்து கிழக்கு சுதந்திரம் பெற வேண்டும். கிழக்கின் மண்வாசனை உணரப்பட வேண்டும், எம்மை நாமே ஆளவேண்டும். அதன் பின் பேரினவாதிகளிடம் இருந்து வருகின்ற ஆபத்துக்கள் குறைவடைந்து, கிழக்குக்கு கிடைக்க வேண்டிய அதிகாரமும், அபிவிருத்திகளும் தானாகவே கிடைக்கும்.

முஸ்லீம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற அரசியல்வாதிகளும், கட்சிகளும் ஒன்றிணைந்து கிழக்கின் சுதந்திரத்துக்காக உழைக்க வேண்டும். இல்லா விட்டால் வடக்கினையும் கிழக்கினையும் டயஸ் போறா எனும் தரப்பினரின் விருப்பத்திக் கேற்ப ஹக்கீம் இணைத்து விட்டு, ஒன்றைக் காட்டி ஒன்றை செய்து என்னை ஏமாற்றி விட்டார்கள் என ஹக்கீம் புதிய கதை ஒன்றை கிளப்பிவிட்டு அவரும் கிளம்பிவிடுவார்.

நாங்கள் தான் மாட்டிக் கொண்டு முழுச வேண்டும். எனவே எங்களை நாங்கள் ஆள வேண்டுமெனில், எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டுமெனில் ஹக்கீமை கிழக்கில் இருந்து அகற்ற வேண்டும், அதற்கு நாங்கள் பெருந் தலைவர் அஷ்ரபின் வழியில் சென்று, அவர் சொன்னதன் பிரகாரம் இக்கட்சியால் எமது (கிழக்கு) சமூகத்துக்கு எந்தப் பிரயோசனமும் இல்லையெனில் (பாதகமெனின்) இக்கட்சியினை அழித்துவிடும் படி செய்த துஆ வின் பிரகாரம், ஹக்கீமை கிழக்கினை விட்டு துரத்த, முஸ்லீம் காங்கிரஸுக்கோ அல்லது அதன் இணைவுக் கட்சிக்கோ வாக்களிப்பதனை தவிர்த்து, சகல தேர்தல்களிலும் தோற்கடித்து, ஹக்கீமை கிழக்கில் கால் வைக்காது தடுத்தால், கிழக்கிற்கு சுதந்திரமும் கிடைக்கும், கெபினெட் அமைச்சும் கிடைக்கும், அதிகாரமும் கிடைக்கும், அபிவிருத்திகளும் நடக்கும், கிழக்கினை பிடித்திருக்கும் இருளும் நீங்கும். எங்களை நாங்களே ஆளலாம்.
bb

Web Design by The Design Lanka