அமைச்சர் ஹக்கீம் நிராகரிப்பு; யாழில் பரபரப்பு! - Sri Lanka Muslim

அமைச்சர் ஹக்கீம் நிராகரிப்பு; யாழில் பரபரப்பு!

Contributors

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி, மல்லாகம் , ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்கள், எதிர்வரும் 09 ஆம் திகதி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திறப்புவிழாவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரனையும் அழைக்க வேண்டுமென நீதியமைச்சிடம் யாழ்.மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீதியமைச்சருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை அழைக்க முடியாது என நீதி அமைச்சு அறிவித்துள்ளதால் யாழ். சட்டத்தரணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

முதலில் சாவகச்சேரி நீதிமன்றமும் பின்னர் மல்லாகம் நீதிமன்றமும் அதன் பின்னர் அன்று பிற்பகலே ஊர்காவற்றுறை நீதிமன்றமும் திறக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா ஒழுங்குகள் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள சட்டத்தரணிகள் சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாக சட்டத்தரணிகள் சங்கநூலகக் கூட்டத்தில் கலந்துரையாடியுள்ளனர்.பெருமளவிலான சட்டத்தரணிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் சிலர் இந்த வைபவத்திற்கு வடமாகாண முதலமைச்சர் அழைக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுப்பினர்.

 

இந்த நிகழ்வுகள் மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் நடைபெறுகிறது என்றும் இதில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது என்பதால் நீதி அமைச்சரும் நீதி அமைச்சின் அதிகாரிகளும் மட்டுமே பங்குபற்றவுள்ளார்கள் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது. இதை ஆட்சேபித்து முதலமைச்சரை அரசியல்வாதியாக கணிக்கக்கூடாதென்றும் அவர் மக்களால் வடமாகாண சபைக்குத் தெரிவான முதலமைச்சர் என்பதால் வடமாகாணத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் அழைக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

இதுபற்றி நீதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும் வட மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு அனுப்புமாறும் நீதி அமைச்சிடம் கோரவேண்டும் என்றும் பிரேரணை ஒன்றை சட்டத் தரணி வி.ரி. சிவலிங்கம் முன்மொழிய அதனை சட்டத்தரணி ஆர்.ரி.விக்னராஜா வழி மொழிந்ததற்கமைய அப் பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 

இது சம்பந்தமான கடிதம் மின்னஞ்சல் மூலம் உடனடியாக நீதி அமைச்சுக்கு அனுப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவரை அழைக்க முடியாது என நீதி அமைச்சு அறிவித்துள்ளதால் யாழ். சட்டத்தரணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team