ஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்..! - Sri Lanka Muslim

ஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்..!

Contributors

(சுவனப் பிரியன்)

அமெரிக்காவிலிருந்து இந்த வருட ஹஜ்ஜூக்காக வந்துள்ள ஜமீல் வாகர் தனது கருத்தாக ‘முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களை அன்போடு அணுகி இஸ்லாத்தின் மேல் உள்ள தவறான கருத்துக்களை களைய முற்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்துள்ளார். நியூயார்க் சிடியில் வசிக்கும் இவர் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் பிஸினஸூம் பார்த்து வருகிறார்.

இந்த வருடம் அமெரிக்காவிலிருந்தும் கனடாவிலிருந்தும் 2000 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் வருகை புரிந்துள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து வந்த ஹாஜிகள் மொத்தம் 1.6 மில்லியன்கள் ஆகும். இதில் அதிகமான ஹாஜிகள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மினாவில் ஒரு அமெரிக்க ஹாஜிகள் குரூப் ‘ஹஜ்ஜூக்குப் பிறகு நமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்’ என்று புதிய முஸ்லிம்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தது. புதிய முஸ்லிம்கள் இந்த சொற்பொழிவுகளை மிக ஆர்வத்தோடு கேட்டு குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

‘என்னைக் கேட்டால் மாற்று மதத்தவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு பயம் இருக்கிறது. இது ஒரு வன்முறை மார்க்கம் என்ற தோற்றம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுவதே நம்முன் உள்ள தலையாய பணி. 35 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொழுவதற்கு பள்ளிகளை தேடி வெகு தூரம் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அமெரிக்காவில் திரும்பிய இடமெல்லாம் மசூதிகளாக இருக்கின்றன. மசூதிகளில் கூட்டமும் நிரம்பி வழிகிறது. நிரம்பி வழியும் அந்த கூட்டமும் இளைஞர்களாக இருப்பது மேலும் ஆச்சரியப்பட வைக்கிறது’ என்கிறார் ஜமீல்.

‘எனது மகன் ஷான் அல்பேனி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறான். இன்று வரை ஹலால் உணவங்களையே தேடி செல்கிறான். அவனது மாற்று மத நண்பர்களும் இவனை பின் பற்றி ஹலால் உணவகங்களையே அதிகம் நாடுகின்றனர். முஸ்லிம்களாகிய நம்மை விட சில நல்ல பழக்கங்களை மாற்று மதத்தவர்களும் கொண்டுள்ளதை இங்கு நாம் மறுக்க முடியாது. அவர்களது நம்பிக்கைகளை கேலி செய்வது: கிண்டல் செய்வது: அவர்கள் மனம் புண்படும்படி வார்த்தைகளை வீசுவது என்ற பல செயல்களை நாம் குறைத்துக் கொண்டு அவர்களை அன்போடு அணுக வேண்டும். அவர்களுக்கும் நமக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை குறைக்க முயற்சிக்க வேண்டும். இது போனற நல்ல செயல்கள் அவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இன்முகத்தோடு அணுக வழி வகுக்கும். இதனால் குறைந்த பட்சம் இஸ்லாத்தைப பற்றிய தவறான பிம்பம் விலக வாய்ப்புள்ளது’ என்கிறார் ஜமீல் வாகர்.

‘2000 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் அமெரிக்காவிலிருந்தும் கனடாவிலிருந்தும் வருகை புரிந்துள்ளோம். ஹஜ் எங்களுக்கு சிறந்த வழி காட்டிகளின் உதவியால் மிக சிறப்பாகவும் சிரமமில்லாமலும் முடிந்தது. நான் முதல் வகுப்பு பயணம் என்பதால் 14 ஆயிரம் டாலர் கட்டி வந்துள்ளேன். இரண்டாம் வகுப்பு பயணக் கட்டணமாக 10000 டாலர் பணம் கட்டியும் பலர் வந்துள்ளனர். எங்களின் இந்த பயணம் மிக சிறப்பாக அமைய உறு துணை புரிந்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.’ என்கிறார் ஜமீல் வகார்.

தகவல உதவி

அரப் நியூஸ்

Web Design by Srilanka Muslims Web Team