ஹஜ் ஓர் அறிமுகம்..! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றே ஹஜ் ஆகும். பொருளாதார வசதிபடைத்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு தடவை நிறைவேற்ற வேண்டிய கடமை இது. அதேநேரம் வருடத்திற்கு ஒரு தடவை குறிக்கப்பட்ட காலத்தில் நிறைவேற்றப்படும் கடமையாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது ஹஜ். அதுதான் துல் ஹஜ் மாதமாகும்.

ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் கடமையாக்கப்பட்ட இக்கடமையானது, கடமைகளின் ஒழுங்கில் இறுதியாக விதியாக்கப்பட்டதாகும். சத்தியம் செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் உள்ள பூமிக்கு உடலாலும் உள்ளத்தாலும் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு பயணமே ஹஜ். இது ஒற்றுமையினதும் சமத்துவத்தினதும் குறிகாட்டியாகவும் மாத்திரமல்லாமல் உலகலாவிய முஸ்லிம்களின் ஐக்கிய மாநாடாகவும் திகழுகின்றது.

இங்கு அமைந்துள்ள கஃபாவை முன்நோக்கி நாளாந்தம் தொழுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. இது உலகில் அமைக்கப்பட்ட முதல் பள்ளிவாசலாகும்.

ஹஜ் கடமையின் செயல்பாடுகள் ‘மீகாத்’ எனப்படும் எல்லையிலிருந்து ஆரம்பமாகும். அந்த எல்லையிலே இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும் அல்லது ஹஜ் செய்வதற்கான (நிய்யத்) எண்ணம் கொண்டு அதனை மொழிந்து கொள்ள வேண்டும். இஹ்ராம் என்பது ஆடம்பரமற்ற சாதாரண வெண்ணிற ஆடையாகும். இது மரணமடைந்த பின்னர் அணிவிக்கப்படும் ‘கபன்’ ஆடைக்கு சமனானது. இவ்வாடையை அணிந்ததன் பின்னர் சாதாரண நிலையில் தனக்கு அனுமதிக்கப்பட்ட விடயங்கள் தனக்கு தடுக்கப்பட்டுள்ளது என்று கருதுவார்கள்.

இதனை தொடர்ந்து ஹஜ் காலம் முழுமையாக ‘இறைவா உனக்கு பதிலளித்து விட்டேன். உனக்கு நிகராக எதுவுமில்லை. புகழும், அருள்களும், அதிகாரமும் உனக்கேயுரியன. உனக்கு நிகராக எதுவுமில்லை‘ என்ற வார்த்தையை மொழிந்தவர்களாக இருப்பார்கள்.

ஹஜ்ஜின் அடுத்த செயல்பாடு ‘தவாப்’ ஆகும். இது கஃபா என்ற இறையில்லத்தை சுற்றி வருவதை குறிக்கும். தொடராக ‘ஸபா’, ‘மர்வா’ என்ற இரு மலைத்தொடரில் வேகமாக நடந்து கடக்க வேண்டும். அத்தோடு துல்ஹஜ் பிறை ஒன்பதில் பகல் நேரத்தில் ‘அரபா’ மைதானத்தில் தரித்திருக்க வேண்டும். அத்தோடு ‘ஜம்ரா’ எனப்படும் இடங்களில் ஷைத்தானுக்கு கல்லெறிதல், ‘மினா’ என்ற மைதானத்தில் இரவை களித்தல், ‘ஹத்யு’ எனப்படும் பலியிடல் போன்றவற்றுடன் ஸுன்னத்தான பல விடயங்களும் காணப்படுகின்றன.

இஹ்ராம் முதல் கிரியையாக அமைந்திருப்பதோடல்லாமல் மனோ இச்சைகளுக்கு அடிமையாகும் நிலையிலிருந்து விடுபட்டு உள்ளத்தையும் சிந்தனையையும் ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த பயிற்சியாகவும் விளங்குகிறது. ‘தல்பியா’ என்பது இறைவனுக்கு கட்டுப்படுவேன் என்ற பிரகடனமாகவும் ‘தவாப்’ என்பது மானுட உள்ளத்தையும் இறைவனின் புனிதத்தையும் சங்கமிக்கச் செய்கின்ற உயர்ந்த ஆன்மீக செயல்பாடாகவும் உள்ளது. ‘ஸஃயு’ என்ற தொங்கோட்டம் இறைதிருப்தியையும் மன்னிப்பையும் அடைந்து கொள்வதற்கான சிறப்பான ஏற்பாடாகும்.

‘அரபா’, ‘மினா’ போன்ற இடங்களில் தரிப்பதென்பது உள்ளத்திலே இறையச்சத்தை நிரப்பிக் கொண்டு இரு கரங்களையும் அவனை நோக்கி உயர்த்தி மிக்க எதிர்பார்ப்புடன் அவனிடம் பிராத்தனை புரிவதாகும். ‘ஜம்ரா’ க்களில் கல்லெறிதல் என்பது உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் தீய ஷைத்தானிய சக்திகளை இழிவுபடுத்தவதாகும். ‘ஹத்யு’ என்ற பழியிடல் என்பது தியாகம், அர்ப்பணம் போன்றவற்றின் குறியீடாக அமைந்திருக்கின்றது.

மேலும் அனைத்து வணக்க வழிபாடுகளினதும் பிரதான பொதுநோக்கம் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவனாக இருப்பதும் அவன் சொன்னபடி அவனுக்கு கட்டுப்படுவதுமாகும். ஹஜ்ஜின் பிரதான நோக்கமும் அதுதான். எனினும் இதுவல்லாத இன்னும் பல நோக்கங்களும் ஹஜ்ஜுக்கு உள்ளன.

அது தனியாளின் உள்ளத்திலும், சிந்தனையிலும், வாழ்விலும், சமூகத்திலும் பல தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

இதனை அல்லாஹ் ‘ஹஜ் செய்யுமாறு மக்களுக்கு பொது அறிவிப்பு செய்வீராக. அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வருவார்கள். அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர்கூறி அறுத்திட வேண்டும். அவற்றிலிருந்து அவர்களும் சாப்பிட்டு தேவையான வறியவர்களுக்கும் கொடுத்து விடுங்கள்.’ (ஹஜ் 27, 28) என்று குறிப்பிடுகிறான்.

ஹஜ் கிரியை மூலம் பலவிதமான பயன்களை அடைந்து கொள்ளலாம். அவற்றில் பிரதானமானது ஆன்மா போஷிக்கப்படுவதாகும். அதாவது ஆன்மாவை பலப்படுத்துவதில் ஹஜ்ஜுக்கு பெரும் பங்கு உண்டு. அதனால் ஒரு முஸ்லிம் ஹஜ்ஜை சிறந்த கட்டுச்சாதனமாக பயன்படுத்திக் கொள்வான். இறையச்சத்தால் தன்னை நிரப்பிக்கொள்ளவும்இ அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுவதற்கு உறுதிபூணவும், பாவச்செயல்களுக்காக கவலைப்பட்டு அதிலிருந்து நீங்கி தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ளவும் ஹஜ் துணை நிற்ககூடியதாகும்.

அதேநேரம் ஹஜ் யாத்திரையானது, மனிதனின் அறிவுக் கண்களை திறந்து விடக்கூடியதாகவும் உள்ளது. தன்னை சூழவுள்ள பாரிய பிரபஞ்சத்தை பார்க்கவும் வித்தியாசமான கலாசாரங்கள், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றை அறிந்து புது அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் அறிவை விரிவாக்கி கொள்ளவும் ஹஜ் துணைநிற்கிறது.

மேலும் ஹஜ்ஜில் வியாபார நலன்களும் காணப்படுகின்றன. நபி(ஸல்) அவர்களது காலத்துக்கு முன்பிருந்தே இருந்து வருகின்ற ஒரு நடைமுறை இது. உலக விடயங்களான இலாபம் பெறுதல், வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதை சில ஸஹாபா தோழர்கள் சங்கடமான ஒன்றாகக் கருதினார்கள். இது வணக்க வழிபாடுகளில் ஒரு குறைவை ஏற்படுத்தும்.

நன்மைகள் குறைவடைந்த விடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அல்லாஹ் இதனை அங்கீகரித்தான். நிய்யத் என்ற எண்ணம் சீராக இருந்தால், பிரதான இலக்கு ஹஜ்ஜை நிறைவேற்றுதல் என்றும் இருக்கும்போது இது சரியானதே என்பது அல்குர்ஆனின் கருத்தாகும். ‘உக்காழ், மஜன்னா, துல் மஜாஸ் போன்றவை ஜாஹிலிய்யா கால சந்தைகளாக காணப்படடன. அங்கு வியாபாரம் செய்தவர்கள் ஹஜ் காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட தயக்கம் காட்டினார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அச்சமயம், அல் குர்ஆனின் ‘ஹஜ் பிரயாணத்தின் போது நீங்கள் வியாபாரம் செய்து உங்கள் இரட்சகனிடமிருந்து பேரருளை தேடுவது உங்கள் மீது குற்றமாகாது’ (பகரா 198) என்ற வசனம் அருளப்பட்டது.
(ஆதாரம்: புகாரி)

அதேவேளை, இஸ்லாமானது அடிப்படையான சில விடயங்களை போதனைகளாக மாத்திரம் முன்வைக்காது வணக்க வழிபாடுகளுடன் இணைத்தே வைத்துள்ளது. இதன் மூலம் ஒரு முஸ்லிமின் அறிவிலும் சிந்தனையிலும் உணர்விலும் நடத்தையிலும் அதனை கொண்டு வர அது எதிர்பார்க்கிறது. உதாரணமாக கூட்டுத் தொழுகையில் நாம் காணுகின்ற சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் போன்ற பண்புகளை ஹஜ்ஜில் இன்னும் ஆழமாக அவதானிக்கலாம்.

இங்கு பிரதேச, பிராந்திய, மொழி, இன, தர, பதவி என்ற வித்தியாசங்களை மறந்து ஒரே வித ஆடை அணிந்து, ஒரே விதமான வணக்கங்களில் ஈடுபட்டு ஒரே கோஷத்தை மொழிந்தவர்களாக ஒரே நோக்கத்தோடு ஒன்றுகூடி இருப்பதை காணலாம். அனைவரும் ஏகன் அல்லாஹ்வை நம்பி ஒரே கஃபாவை சுற்றி வந்து ஒரே வேதத்தை ஓதி ஒரே நபியை பின்பற்றி ஒரே செயல்களை செய்வதென்பது எத்துணை ஆழமான ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஹஜ் என்பது சமாதான காலத்தில் சமாதான பூமியை நோக்கிய சமாதான பயணமாகும். அது பாதுகாக்கப்பட்ட சமாதான பூமியாகும். ‘அங்கு நுழைபவர் அச்சம் தீர்ந்து பாதுகாக்கப்படுவார்’
(ஆல இம்ரான் 97).

எனது தந்தையைக் கொலை செய்தவரை அங்கு கண்டாலும் அவருக்கு நான் எதனையும் செய்ய மாட்டேன் என்று உமர் (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த நிலத்தில் வாழ்கின்ற பறவைகள் மிருகங்கள் வேட்டையாடக் கூடாது. தாவரங்கள் வெட்டப்பட கூடாது என்ற கட்டளை மனிதன் மாத்திரமன்று ஏனைய படைப்புகள் கூட நிம்மதியாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை காட்டுகிறது.

யூ.கே. றமீஸ்
ஆயு சமூகவியல்

Web Design by Srilanka Muslims Web Team