ஹஜ் பெருநாளை முன்னிட்டு அக்கரைப்பற்று முதல்வர் வர்தகர்களுடன் விசேட கலந்துரையாடல்.. !! - Sri Lanka Muslim

ஹஜ் பெருநாளை முன்னிட்டு அக்கரைப்பற்று முதல்வர் வர்தகர்களுடன் விசேட கலந்துரையாடல்.. !!

Contributors

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் ஹஜ்ஜுப்பெருநாள் வியாபாரம் களை கட்டி வருகின்ற நிலையில், ஆடை விற்பனை நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக குறித்த ஆடையக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் இன்று (14) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் மாநகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர், பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேசத்தின் ஆடையக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். எதிர்வரும் 21 ஆம் திகதி தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில் பொதுமக்கள் ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் இதர வர்த்தக ஸ்தாபனங்களில் மும்முரமாக கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று நாட்டு மக்களை ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எதிர்வரும் ஹஜ் பெருநாள் பண்டிகைக் கால வியாபார நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் எவ்வாறு முன் கொண்டு செல்வது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குட்பட்ட ஆடையகங்கள் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் நள்ளிரவு வரை திறந்திருக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இப்பிராந்திய வாழ் பொது மக்கள் முண்டியடித்து கொண்டு ஆடைக் கொள்வனவில் ஈடுபடுதலை தவிர்த்து, நிகழும் அசாதாரண சூழலை கருத்திற் கொண்டு பொறுமையாக செயற்படுமாறும் இவ்விடயங்களை மிக நேர்த்தியாக, இறுக்கமாக செயற்படுத்துமாறும் மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் பிரதேச சுகாதார பணிமனையினருக்கும், வர்த்தகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team