ஹஜ் மானியம் தொடர்பில் ஸ்டாலின் வலியுறுத்தல் » Sri Lanka Muslim

ஹஜ் மானியம் தொடர்பில் ஸ்டாலின் வலியுறுத்தல்

stalin

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

சென்னை

பிரதமர் நரேந்திரமோடி, இஸ்லாமிய பெருமக்களின் ஹஜ் புனித பயணத்திற்கு மானியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்யக்கூடாது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இஸ்லாமிய பெருமக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அசுர வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருவதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்ற உத்தரவு என்ற காரணத்தை காட்டி, ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசனை வழங்க முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, அந்த கமிட்டியின் பரிந்துரையை அவசர அவசரமாக பெற்று, 2018-ம் ஆண்டு முதல் மானியத்தை ரத்து செய்யப் போவதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்திருப்பது அந்த துறையின் அடிப்படை நோக்கத்திற்கே எதிராக அமைந்திருக்கிறது.

உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பு அளித்தும் ஆதாரை வலுக்கட்டாயமாக திணித்ததும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஏற்க மறுத்து, இன்றுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தட்டிக்கழிப்பதும் இதே மத்திய பா.ஜ.க. அரசுதான் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது சாலப் பொருத்தமானது என்று கருதுகிறேன்.

ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்வது மட்டுமின்றி, ஹஜ் பயணிகள் சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டுச் செல்வதற்காக இருந்த 21 இடங்களை 9 ஆக குறைத்து இருப்பது முற்றிலும் இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்தில் மூர்க்கத்தனமாக குறுக்கிடும் போக்காக அமைந்திருப்பது கவலையளிக்கிறது.

ஆகவே ஹஜ் புனித பயணத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்யும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், அனைவரையும் அரவணைத்துச் சென்று வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் பணியாற்ற வேண்டிய பொறுப்புள்ள பிரதமர் நரேந்திரமோடி, இஸ்லாமிய பெருமக்களின் ஹஜ் புனித பயணத்திற்கு மானியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka