ஹெம்மாதகம பிரதேச மக்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் முன்னாள் அதிபர் யூசுப்! - Sri Lanka Muslim

ஹெம்மாதகம பிரதேச மக்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் முன்னாள் அதிபர் யூசுப்!

Contributors

தும்புலுவாவ பள்ளி பரிபாலனசபைத் தலைவரும் ஹெம்மாதகம பள்ளிவாயல்கள் சம்மேலனத்தின் தலைவருமான ஓய்வு பெற்ற அதிபர் யூசுப் 2022/05/10 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானார்.

அன்னார் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி தும்புலுவாவ கிராமத்தில் மொஹமட் ஹனீபா மற்றும் திருமதி சுலைஹா உம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை தும்புலுவாவை அல் அரஃபா பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் ஹிஜ்ராகம – ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை மாவனல்ல சாஹிரா கல்லூரியிலும் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான அவர், அங்கு தமிழ்மொழியை விஷேட கற்கையாகத் தெரிவு செய்து கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 1975 ஜூலை 24 அன்றுஆசிரிய நியமனத்தைப் பெற்ற அவர், 2002 ஜுன் 22 ஆம் திகதி ஓய்வு பெறும்வரை ஆசிரியராகவும் அதிபராகவும் பல்வேறு பாடசலைகளில் நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றி உள்ளார்.

அவர் அரச சேவையில் தனது பணியை முடித்து 2009/06/22ம் திகதி ஓய்வு பெற்றார். அவர் சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் சமூகத்தில் பல பொறுப்புகளை வகித்ததுடன் சமூக ஆர்வலராக இருந்தார்.

2014 முதல் ஹெம்மாதகம மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற அவர் 2018 ஆம் ஆண்டு முதல் ஹெம்மாதகம மருத்துவ நிதியத்தின் தலைவர் பொறுப்பையும் ஏற்று அப்பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றினார். ஹெம்மாதகம பொலிஸ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்த காலத்தில் ஹெம்மாதகம வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். தனது இறுதிமூச்சு வரைஅப்பதவிகளை வகித்த அவர் தும்புலுவாவாவ பள்ளிப்பரிபாலன சபைத்தலைவராக மற்றும் உறுப்பினராக இருந்து வந்தார்.

அவர் சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டிருந்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ் புதிய பள்ளிவாயல் கட்டுமானப் பணிகள் மற்றும் ஹெம்மாதகம நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாக கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.எத்தகைய நெருக்கடி மிக்க சூழலையும், எந்த நிலையிலும் கையாளும் தனித்திறமையும் ஆளுமையும் அவரிடம் இருந்தன. அவர் எப்போதும் முகத்தில் புன்னகையுடன் அனைத்து தரப்பினருடனும் நன்றாகப் பழகக் கூடியவராக இருந்தார். உதவிக்காக அணுகும் அனைவருக்கும் அவர் தனது அறிவுத்திறன் மற்றும் அனுபவம் மூலமாக பூரனமாக வழிகாட்டி உதவினார்.

அவர் ஏககாலத்தில் தும்புளுவாவ பள்ளிப்பரிபாலன சபை, ஹெம்மாதகம கல்வி மேம்பாட்டு சங்கம்(HEDS) மற்றும் ஹெம்மாதகம பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியவற்றிக்கு தலைமை தாங்கிய மிகவும் திறமையான ஆளுமைகளில் ஒருவராக இருந்தார். மடுல்போவ பாதிபியா பாடசாலை, அல் அஸ்ஹர் கல்லூரி உட்பட பல்வேறு பாடசாலைகளில் சிறந்த அதிபராக கடமையாற்றினார்.

மக்களை திறமையாக வழி நடத்துதல்மற்றும் பல்வேறுபட்ட அமைப்புகளை திறம்பட செயற்பட செய்தல் போன்றவற்றில் அவருடைய அறிவு மற்றும் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை அவரிடம் நிறையவே இருக்கின்றன. பௌத்த மக்களுடன் சிறந்த உறவைப் பேணி இரு சமூகங்களுக்கிடையில் இணைப்பு பாலமாக செயற்பட்டு வந்தார். நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக ஹெம்மாதகம பிரதேசத்திற்கு அம்புலன்ஸ் வாகனம் வாங்குவதற்கு ஏற்பாடு செய்ததில் அவர் செய்த பங்களிப்பு மகத்தானது. அவர் கலந்துகொள்ளும் கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் உரையாடும் திறன் அவரிடம் இருந்தது.

ஹெம்மாதகமை பிரதேசத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை அவர் விட்டுச் செல்கிறார். பிரச்சினைகளை விவாதிக்கவும், கருத்துகளைப் பரிமாறவும், சேர்ந்து பணியாற்றவும், நகைச்சுவை உணர்வோடு பழகவும் அவர் ஓர் அற்புதமான மனிதர். யூசுஃப் ஆசிரியர்/அதிபர் அவர்கள் சிறந்த ஒரு ஆளுமையாக எம்மத்தியில் சுமார் எழுபது வருடங்கள் வாழ்ந்து பெரும் சமூகப்பணிகளை செய்து விட்டு நம்மை விட்டுச் சென்றுள்ளார்.

அவர் தனது மறுமை வாழ்வுக்காக நிறையவே சம்பாதித்திருக்கிறார். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு மறுமையில் உயர்ந்த அந்தஸ்தை வழங்க வேண்டுமென பிரார்த்திப்போம்.

என்.எம்.அமீன்

Web Design by Srilanka Muslims Web Team