ஹெரோயின் கொள்கலன் தொடர்பில் பிரதமரின் மகனிடம் தீவிர விசாரணை - Sri Lanka Muslim

ஹெரோயின் கொள்கலன் தொடர்பில் பிரதமரின் மகனிடம் தீவிர விசாரணை

Contributors

அண்மையில் மீட்கப்பட்ட பாரிய அளவிலான ஹெரோயின் அடங்கிய கொள்கலன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் புதல்வரும் மாகாண சபை உறுப்பினருமான அனுராத ஜயரத்னவிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 
ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பாகிஸ்தானியருக்கும் பிரதமரின் மகனுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனவே அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளும் முகமாகவே அனுராத ஜயரத்னவிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் அந்த விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அனுராத ஜயரத்னவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக குறித்த போதைப் பொருள் வர்த்தகரான பாகிஸ்தானியர் பணம் வழங்கினாரா? அத்தோடு அந்த சந்தேக நபர் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டமை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 262 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய கொள்கலனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர். அத்தோடு அந்த கொள்கலனை விடுவிக்குமாறு பிரதமரின் செயலாளர் ஒருவர் வழங்கிய கடிதம் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

அதேவேளை குறித்தபோதைப் பொருள் கொள்கலனை விடுவிக்குமாறு கடிதம் அனுப்பியதாக கூறப்பட்ட பிரதமரின் செயலாளர் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். அத்தோடு அந்த பிரச்சினை தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியாகத் தொடங்கின.

 

குறிப்பாக ஜாதிக ஹெல உறுமய போன்ற அரசியல் கட்சிகள் பிரதமர் டி.எம்.ஜயவர்தன பதவி விலக வேண்டும் என வலியுறுத்தின. அத்தோடு இந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பாகிஸ்தானியருக்கும் பிரதமருக்கும் இடையிலான தொடர்பு பற்றி நாட்டு மக்களுக்கு பிரதமர் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

அத்தோடு ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து மோதல்களும் தீவிரமடைந்தன. இவ்வாறான நிலையிலேயே பிரதமரின் மகனான அனுராத ஹேரத்திடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொடுள்ளனர்.

 

இந்த போதைப்பொருள் கொள்கலன் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பிரதான சந்தேக நபரான பாகிஸ்தானியரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை நாடியுள்ளனர்.(வீரகேசரி)

Web Design by Srilanka Muslims Web Team