13ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த இடம்! - Sri Lanka Muslim

13ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த இடம்!

Contributors


mainpic

(லோரன்ஸ் செல்வநாயகம்)

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு சிறந்த இடம் பாராளுமன்றமே எனவும் இந்த தெரிவுக்குழுவில் கலந்துரையாடி மக்கள் தேவைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வை பேச்சுவார்த்தை மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தம்மைச் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு மிடையிலான நல்லுறவினைப் பலப்படுத் துவது தொடர்பிலும் நெருக்கமாக செயற்படு வது தொடர்பான மூலோபாயங்களை அதிகரித்துக்கொள்வது தொடர்பிலும் கலந்து ரையாடப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் பற்றியும் இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது அண்மையில் நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாராளுமன்றமே சிறந்த இடம் என்பதையும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துரையாடி மக்கள் தேவைகளை கவனத்திற்கொண்ட தீர்வொன்றை பெற்றுக்கொள்வதே சிறந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண சபைத் தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அமைச்சர் குர்ஷித், பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று ள்ளதைப் பாராட்டினார். இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் முக்கிய எதிர்கால திருப்பமாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர்களுக் கிடையிலான பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களும் இந்திய அமைச்சர் குர்ஷித்தும் கலந்துரையாடியுள்ளனர். அவர்களது பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வு பெற்றுக்கொள்ளும் வகையில் இருநாட்டு மீனவர்களுக்கிடையிலும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பொன்றை உருவாக்கிக் கொடுப்பது தொடர்பில் இருவரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இலங்கை – இந்திய வர்த்தகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருதரப்பு வர்த்தக சமூகங்களுக்குமிடையிலும் இது போன்ற அணுகுமுறை சிறந்தது எனவும் யோசனைகள் முன்வைக் கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹாவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, திருமதி பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team