தீகவாபி பிரதேச சபையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் - பஹீஜ் » Sri Lanka Muslim

தீகவாபி பிரதேச சபையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் – பஹீஜ்

baheej

Contributors
author image

M.J.M.சஜீத்

அம்பாரை மாவட்டத்திலே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் யானை சின்னத்திற்கு வாக்களிப்பது ஒலுவில், பாலமுனை மற்றும் அஷ்ரப் நகர் கிரமாங்களை உள்ளடக்கிய ஒரு தீகவாபி பிரதேச சபையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என தேசிய காங்கிரசிஸ் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.எம்.பஹீஜ் தெரிவித்தார்.

தேசிய காங்கிரசின் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் ஜே.பியை ஆதரித்து அட்டாளைச்சேனை இக்ரஃ வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அம்பாரை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிராந்தியத்திலே இருக்கின்ற சுமார் 12500 ஏக்கர் காணிகள் தீகவாபி பன்சலைக்கு சொந்தமானது என அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக இருக்கின்ற தயா கமகே கூறுகின்றார்.

இவ்வாறான சூழ்நிலையில் அம்பாரை மாவட்டத்திலே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் யானைக்கு அளிக்கின்ற வாக்குகள் ஒலுவில், பாலமுனை மற்றும் அஷ்ரப் நகர் கிரமாங்களை உள்ளடக்கிய ஒரு தீகவாபி பிரதேச சபையை உருவாக்குவதற்கு கால்கோளாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. ஆகவே எமது மண்ணை நாம் பாதுகாப்பதாக இருந்தால் முஸ்லிம் மக்கள் யானைக்கு ஒருபோதும் வாக்களிக்கக்கூடாது.

மயில் கட்சியினுடைய தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அம்பாறையில் சொல்கிறார் முஸ்லிம்கள் யானைக்கு வாக்குப்போடுவது கூடாது அது முஸ்லிம் சமூகத்தை அடகு வைக்கும் செயலாகும் எனக்கூறுகிறார். அவர் ஓரிடத்தில் யானையிலும், இன்னுமொரு இடத்தில் மயில் சின்னத்திலும் தேர்தல் கேட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமாக பேசுவது வேடிக்கையாகவுள்ளது.

இப்போது ரணிலோடு யார் இருக்குறார்கள். ஜனாதிபதியோடு யார் இருக்கின்றார் என்று முஸ்லிம் சமூகத்திற்கு நன்கு தெரியும். முஸ்லிம் அரசியல் கட்சிகளில் ஜனாதிபதிக்கு நம்பிக்கையாகவும், நெருக்கமாகவும் ஒரு கட்சியாக இருந்தால் அது தேசிய காங்கிரஸ் மாத்திரம்தான் என்பது வெளிப்படையான உண்மையாகும். அவர்கள் ஜனாதிபதியுடைய ஆட்களாக இருந்தால் இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அப்படி வரவில்லை வரவும் மாட்டாளர்கள். அவர்களுடைய எஜமான் ரணில் விக்ரமசிங்கே தான். அதனாலே அவர்கள் ரணிலோடு கூட்டுச்சேர்ந்துள்ளார்கள். இந்த விடயத்தில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேணடும். இப்போது நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்ல, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்று சொல்லுகிறார்கள். இது கூட்டமைப்பல்ல ஒரு கூத்தமைப்பாகும். இந்த கூத்தமைப்பு தொடர்பில் அவதானமாக இருந்துகொள்ள வேண்டும்.

ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கு தேசியப்பட்டியல் வழங்ப்படவில்லை என்பதற்காக அவர்கள் இன்று பிரிந்துவந்து ஒப்பாரி வைக்கிறார்கள். ரவூப் ஹக்கீம் பிழை செய்கின்றார் என்கின்றார்கள். சுமார் 17வருடங்களுக்கு முன்னர் அதாஉல்லா ஹக்கீமை நம்ப முடியாது என என்ன காரணங்களை முன்வைத்தாரோ அந்த காரணங்களையே இப்போது பஷீரும், ஹசன் அலியும் சொல்கின்றனர்.

இப்போது பஷீர் சேகுதாவுதும், ஹசன் அலியும் சொல்கின்ற குற்றச்சாட்டுக்களையும், அதாஉல்லா முன்வைத்த குற்றச்சாட்டுக்களையும் இப்போது ஒப்பீட்டுப் பாருங்கள் அத்தனையும் சரி என்றால் தேசிய காங்கிரசினுடைய தலைவர் அதாஉல்லா தூர நோக்கோடு இந்த சமூகத்தை சரியான பாதையில் எப்போதே வழிநடாத்தியிருக்கிறார் என்பதனை சிந்தித்துதப்பாருங்கள்.

இப்போது அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக யானைக்கூட்டடில் இருந்துகொண்டு யானைச்சின்னத்திலும், மயில் சின்னத்திலும் என வெவ்வேறு வேடங்களில் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் சதிவலைக்குள் சிக்குண்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை தாரை வார்ப்பதற்கு முனைகின்றனர். இதுதொடர்பாக அவதானத்துடன் இருப்பது காலத்தின் தேவையாகும்.

எனவே முஸ்லிம் சமூகத்தினுடைய தேசிய ரீதியான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்கின்ற விடயத்திலும், எமது பிராந்தியத்தின் உரிமை என்ற அடிப்படையிலும் நாங்கள் இந்த மண்ணில் சுதந்திரமாகவும், ஐக்கியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

Web Design by The Design Lanka