"முஸ்லீம் சட்டம்" புத்தக ஆசிரியர் ஜனாதிபதி சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் 2021/3/31 அன்று அனுராதபுரத்தில் காலமானார். - Sri Lanka Muslim

“முஸ்லீம் சட்டம்” புத்தக ஆசிரியர் ஜனாதிபதி சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் 2021/3/31 அன்று அனுராதபுரத்தில் காலமானார்.

Contributors

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை அனுராதபுர தனது கிராம பாடசாலையிலும் உயர்தர கல்வியை மாகோ மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் மனித உரிமைகள் (2009) அதிகார பரவல் மற்றும் மாகாண சபைகள் (2009) அரச காணிகள் (2010) முஸ்லிம் நீத்திய (2013) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். முன்னணி சிங்களப் பத்திரிகைகளில் இவர் தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைகளை எழுதி வருகின்றார்.

சமகாலத்தில் முஸ்லிம் சமூகமும் இஸ்லாமிய சட்டமும் பாரிய சவால்களுக்கும் பல விமர்சனங்களுக்கும் உட்பட்டு வருகின்ற நிலையில் இஸ்லாமிய சட்டம் தொடர்பில் இவர் வெளியிட்டுள்ள நூலானது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் குறித்த நூலை வெளியிடுவதற்கான காரணம் தொடர்பிலும் சமகால முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்த அவரது பார்வையை அறியும் நோக்கிலும் விடிவெள்ளி மேற்கொண்ட நேர்காணலின் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.

நேர்காணல் எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்

விடிவெள்ளி:- நீங்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட ‘‘முஸ்லிம் நீத்திய (முஸ்லிம் சட்டம்) என்ற நூலை எழுத உங்களை தூண்டிய காரணம் என்ன?

கருணாரத்னஹேரத்:- சட்டத்தரணி என்ற வகையில் மக்களுக்கு சட்டத்தைச் சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ரஜரட்ட எப்.எம். ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் சுமார் 25 வருடங்கள் நான் மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியை வானொலியில் செய்து வந்தேன். மேலும் இலங்கையின் பிரதான சிங்கள பத்திரிகைகளில் சமகால அரசியல் பற்றிய கட்டுரைகளையும் எழுதி வந்தேன்.

சட்டத்துறை சார்ந்த நூல்கள் சட்டத்தரணிகளாலும் நீதிபதிகளாலும் மாத்திரம் விளங்கிக் கொள்ளும் வகையான மொழி நடையிலேயே அமைக்கப்பட்டிருந்தன. எனவே பொதுமக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் இலகு நடையில் இத்துறையில் அரிதாக எழுதப்பட்ட தலைப்புக்களில் நூல் எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டேன். எனது முதலாவது நூல் மனித உரிமைகள் பற்றியதாகவும் (2009) அதிகாரப் பரவலாக்கமும் மாகாண சபைகளும் (2009) அரச காணிகள் தொடர்பான (2011) மூன்றாவது நூலையும் எழுதினேன். எனது அடுத்த படைப்பாக தனியார் சட்டங்கள் பற்றிய ஒரு நூலை எழுத யோசித்தேன். முதலில் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் விசாலத்தை அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் நான் அல்குர்ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ் போன்ற இஸ்லாமிய சட்ட மூலங்களை ஆழமாக படிக்க வேண்டி ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 – 3 மாதங்களில் இந்த ஆய்வை முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது இரண்டு வருட தேடலின் பின்னரே சுமார் ஆயிரம் பக்கங்களை கொண்ட இந்த நூலை ஆக்க முடிந்தது.

விடிவெள்ளி:- இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தையும் ஏனைய சட்டங்களையும் நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்?

கருணாரத்னஹேரத்:- உலகில் அனைத்துச் சட்டங்களும் குற்றங்களைத் தடுப்பதற்கான வழி வகைகளை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

எல்லா மதங்களும் செய்யக் கூடாதது என தடுத்த விடயங்கள் ஒன்றாகவே உள்ளது. பெரும்பாலும் எல்லா மதங்களின் சட்டங்களும் ஒன்றாகவே உள்ளது. அந்த வகையில் இஸ்லாம் ஆகுமாக்கிய விடயங்களை ஹலால் எனவும் தடுத்த விடயங்களை ஹராம் எனவும் பிரித்துக் காட்டுகின்றது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பது சிங்களச் சட்டமல்ல, உரோம டச்சு சட்டமும், ஆங்கிலச் சட்டமும் இணைந்த ஒரு கலப்புச் சட்டமேயாகும். ஆனால் ஷரீஆ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. முஸ்லிம்கள் எல்லாக் கால சூழலுக்கும் பொருத்தமான சட்டமாகவே இச்சட்டத்தை பார்க்கின்றனர். எனவே அதில் எந்த மாற்றமும் ஏற்படாது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது. ஷரீஆ சட்டத்தில் குற்றங்களுக்கான தண்டனை கூறப்பட்டுள்ளது. மறுமையில் இறைவனின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மனிதனால் கொண்டு வரப்பட்ட சட்டங்களில் காலத்திற்கு காலம் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றது. கொண்டுவர வேண்டியும் உள்ளது. இறைவனால் அருளப்பட்ட இச்சட்டத்திற்கு திருத்தங்கள் தேவையில்லை என முஸ்லிம்கள் நினைக்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்கள் தண்டனைக்கு பயந்தே குற்றத்தில் இருந்து தவிர்ந்திருக்கின்றனர். முஸ்லிம்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவன் கண்காணிக்கிறான் என்ற நோக்கில் பார்க்கின்றனர். அதனால் அவர்கள் பாவம் செய்வதில் இருந்து இயல்பாகவே தவிர்ந்திருக்கின்றனர். எனவே சிறந்த சமூகத்திற்கு மிகப் பொருத்தமான சட்டமாக இஸ்லாமிய சட்டம் அமையும் என்று நான் எண்ணுகின்றேன்.

விடிவெள்ளி:- முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் ஒன்று தேவையில்லை. அனைவரும் பொதுச் சட்டத்தின் கீழ் ஆளப்பட வேண்டும் என்று ஒரு கருத்து அண்மைக் காலமாக சில அமைப்புகளினூடாக பரப்பப்பட்டு வருகின்றது. அவ்வாறு பொதுச்சட்டத்தின் கீழ் அனைவரும் ஆளப்பட்டால் எவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்?

கருணாரத்னஹேரத்:- பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் இப்படியான ஒரு முறையை நடைமுறைப்படுத்த முடியாது. அனைவரையும் ஒரு மதத்தை பின்பற்றுமாறு கூற முடியுமா?ஒவ்வொரு மனிதனும் மதம், கலாசாரம், பண்பாடு என்பவற்றுக்கு அடுத்த படியாகத்தான் சட்டத்தை பார்க்கின்றான். எனவே இவ்வாறான கருத்தை முன்வைப்போர் மிகப் பெரிய மடத்தனமானவர்கள் என்றுதான் கூற வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனும் தான் விரும்பும் மதத்தை, நம்பிக்கையை பின்பற்ற முடியும் என்பது சர்வதேச சட்டம் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம். எனவே இவ்வாறானதோர் சட்டத்தை கொண்டு வருவது எந்த வகையிலும் சாத்தியமற்ற விடயம். அதனையும் தாண்டி ஒரு நாடு அவ்வாறான சட்டத்தை கொண்டு வந்தால் அது அடிப்படை மனித உரிமைமீறலாகவே கருதப்படும்.

எனவே இப்படியான கருத்துக்களை முன் வைப்போர் மிகப் பெரிய முட்டாள்கள் என்றே நான் கருதுகின்றேன். 1770 ஆம் ஆண்டு லந்தேசி ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம்களுக்கான சட்டம் அமுலுக்கு வந்தது. அதற்கு முன்னரும் முஸ்லிம்கள் தமது மத அடிப்படையிலேயே விவாக, விவாகரத்து என அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தனர்.

எனவே அப்படி ஒரு நிலை வந்தாலும் கூட முஸ்லிம்கள் தமது பண்பாடு, கலாசாரங்களை தொடர்ந்தும் செய்வதில் எந்தத் தடையும் வரப்போவதுமில்லை. அதனை யாராலும் தடுக்கவும் முடியாது.

முஹம்மது பகிஹுத்தீன்

Web Design by Srilanka Muslims Web Team