'1915: கண்டி கலவரம்' நூல் வெளிவந்து விட்டது: இன்றே வாங்கிப் படியுங்கள் » Sri Lanka Muslim

‘1915: கண்டி கலவரம்’ நூல் வெளிவந்து விட்டது: இன்றே வாங்கிப் படியுங்கள்

kandy kalavaram 1915

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கையின் சரித்திரம் சிங்களத் தேசியவாதிகளால் தமக்கேற்றவாறு திரிவுபடுத்தப்பட்டுவரும் ஒரு நிலையில் சரவணன் எழுதியுள்ள ‘கண்டிக் கலவரம்’ என்ற இந்த நூல் முக்கியத்தும் பெறுகின்றது. இது ஒரு வரலாற்று ஆவணமாக மட்டுமன்றி, வரலாற்றை ஆய்வு செய்ய முற்படுவோருக்கும் மாணவர்களுக்கும் தேவையான தகவல்களை ஆதாரபூர்வமாகத் தரத்தக்க ஒரு நூலாகவும் இது அமைந்திருக்கின்றது.

பத்திரிகையாளர் என்.சரவணன், ஒரு அரசியல் – வரலாற்று ஆய்வாளர். இலங்கையின் இனவாத வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து பல கட்டுரைகளையும், கட்டுரைத் தொடர்களையும் அவர் எழுதியிருக்கின்றார். பௌத்த – சிங்கள தேசியவாதம் இந்த நாட்டில் எவ்வாறு வேரூன்றியுள்ளது, எவ்வாறு அது வளர்ந்திருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எழுதிவருபவர்களில் சரவணன் முதன்மையானவர். இதற்காக கடுமையாக உழைப்பவர் அவர்.

இலங்கையின் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது இனக்கலவரமான 1915 ஆம் ஆண்டின் கண்டிக் கலவரம் குறித்த இந்த நூல் ஞாயிறு தினக்குரலில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. கண்டிக்கலவரம் இடம்பெற்ற நூற்றாண்டை முன்னிட்டு 2015 இல் சரவணனால் இந்தத் தொடர் ஞாயிறு தினக்குரலில் எழுதப்பட்டது. பத்திரிகையில் தொடராக வந்துகொண்டிருந்த போது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

கண்டிக்கலவரம் தொடர்பில் வாசகர்கள் அறிந்திருந்தாலும் கூட, இந்தக் கலவரம் ஏன் ஏற்பட்டது? அதன் அரசியல் பின்னணி என்ன? கலவரத்தின் விளைவுகள் எவ்வாறிருந்தன என்பவற்றையிட்டு விரிவான தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய நூல்கள் எதுவும் இருக்கவில்லை. பத்திரிகைகளில் வெளிவந்திருந்த சில செய்திகளும், கட்டுரைகளும் மட்டுமே இது குறித்த தகவல்களைத் தந்திருந்தன. அந்த நிலையில் முழு அளவிலான தகவல்களை உள்ளடக்கிய சரவணனின் தொடர் கட்டுரை வாசகர்கள்- ஆய்வாளர்களின் தேடலுக்குக் கிடைத்த சிறந்த பரிசாக அமைந்திருந்தது.

கண்டிக்கலவரம் குறித்த முழுமையான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைத் தொடரை ஞாயிறு தினக்குரலில் சரவணன் ஆரம்பித்த போது மாணவர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தமைக்கு இதுதான் காரணம். இது நூலாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வாசகர்கள் பலரும் அப்போதே முன்வைத்திருந்தார்கள். இப்போது அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதன்மூலம் ஒரு வரலாற்றுப்பொக்கிஷம் வாசகர்கள் கைகளில் தவழ்கின்றது.

இலங்கையின் வரலாறு என்பது இனவாதத்தின் வரலாறாகவே பார்க்கப்படும் நிலை உள்ளது. இந்த வரலாற்றைச் சொல்லும் நூல்கள் பலரும் திரிவுபடுத்தப்பட்டவையாகவே உள்ளன. சிங்கள – பௌத்த நிலைப்பாட்டிலிருந்துகொண்டு – இந்த நாடு அவர்களுக்கே சொந்தமானது என வரலாற்றைத் திரிவுபடுத்துவதுதான் சிங்கள ஆய்வாளர்களின் பணியாக இருந்துவருகின்றது. இதற்கு அரசினதும், அரச நிறுவனங்களினதும் ஆதரவு கிடைக்கின்றது.

இந்த நிலையில் சரவணன் போன்றவர்களின் ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கண்டிக் கலவரம் தொடர்பான இந்த நூலை உரிய ஆதாரங்களுடன் உள்ளதை உள்ளபடி சரவணன் எழுதியிருக்கின்றார். கடுமையான உழைப்பின் மூலம் இதற்குத் தேவையான ஆதாரங்களை அவர் முன்வைத்திருக்கின்றார். தமிழ் மொழியில் வெளிவந்திருக்கும் இந்த நூல், சிங்கள, ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும். அதன் மூலமாகவே வரலாற்றைத் திரிவுபடுத்துபவர்களுக்கு உரிய பதிலைக்கொடுக்க முடியும்.

பாரதி இராஜநாயகம்,
ஆசிரியர்,
ஞாயிறு தினக்குரல்.

Note :

(இலங்கையின் முதலாவது இனக்கலவரமான “1915: கண்டி கலவரம்” நூல் 400 பக்கங்களில் பல விரிவான ஆதாரங்களுடன் நூலாக வெளிவந்திருக்கிறது நண்பர்களே.

இலங்கையில் பூபாலசிங்கத்தில் நூல் கிடைக்கிறது.

நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் நண்பருமான பாரதி அவர்கள் எழுதிய வாழ்த்துரை இது –

நூலை பெற விரும்புபவர்கள் மோகனின் கைத்தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுங்கள். – ‎0714441234)

kandy kalavaram 1915

Web Design by The Design Lanka