20க்கு ஆதரித்தவர்கள் அமைச்சுக்களை ஏற்பது பொருத்தமானதா….? - Sri Lanka Muslim

20க்கு ஆதரித்தவர்கள் அமைச்சுக்களை ஏற்பது பொருத்தமானதா….?

Contributors

இலங்கை அரசியலில் நாளாந்தம் புதுமைகள் பல அரங்கேறி கொண்டிருக்கின்றன. யார் எந்த பக்கம் உள்ளார்கள் என்பதே பெரும் சிக்கலாக உள்ளது. இந்த குழப்பம் முஸ்லிம் அரசியல் வாதிகளிடேயும் இல்லாமலில்லை. முஸ்லிம் கட்சி தலைவர்கள் ஒரு பக்கமும், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமொரு பக்கமும் உள்ளனர். முஸ்லிம் பா.உறுப்பினர்கள் அரசை ஆதரிப்பார்கள், அதற்கு ஏதாவது ஒரு நியாயத்தையும் கூறுவார்கள். இதனால் யாருக்கும் எந்த இலாபமும் இல்லை என்பதே உண்மை.

தற்போது அமைச்சரவை மாற்றம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது. அதில் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்வாங்கப்படுவார்களா என்ற கதையாடல்கள் ஆரம்பித்துள்ளன. அமைச்சொன்று தந்தேயாக வேண்டும் என்று அலி சப்றியும், அமைச்சை ஏற்குமாறு கோரிக்கை வந்தால் கட்சியோடு பேசி, முடிவெடுப்பேன் என பைசால் காசிமும் கருத்து தெரிவித்துள்ளனர். 20க்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை தோணியில் கால் வைத்தவர்களின் நிலையிலேயே உள்ளனர்.

முஸ்லிம் கட்சிகளின் பா.உறுப்பினர்கள் 20க்கு ஆதரவளித்தமை பிழையான செயற்பாடு என்பதை யாரும் மறுத்திட முடியாது. அவர்கள் அதற்கு ஆதரவளித்து, சமூக உரிமைகளையோ அல்லது பாதகங்களையோ பெறவுமில்லை, குறைக்கவுமில்லை, பெறப்போவதுமில்லை, குறைக்கப்போவதுமில்லை என்ற விடயங்களையும் உறுதியாக பதிவு செய்ய விரும்புகிறேன். இவர்களால் சமூக விடயங்களில் எதனையும் சாதிக்க முடியவில்லை. அவர்கள் இதனை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றேயாக வேண்டும். இருந்த போதும் இவர்கள் மொட்டு கட்சியின் ஒரு உறுப்பினர் போன்றே செயற்பட்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களை ஒரு மொட்டு ஆதரவாளனாக வெளிக்காட்டினால், எங்கே மக்கள், தங்களை விமர்சிப்பார்கள் என அஞ்சி, மொட்டு காரர்களாக செயற்பட தயங்குகின்றனர். அதே நேரம் எதிர்க்கட்சியோடு இணைந்து அரசின் பிழைகளை சுட்டிக்காட்டவும், எதிர்வினையாற்றவும் மறுக்கின்றனர். இவர்களின் இந்த இரட்டை தோணியில் கால் வைத்துள்ள நிலையானது யாருக்கும் எந்த பயனுமற்றது. மொட்டு பக்கம் இருந்தால், ஒரு ஆளும் கட்சி உறுப்பினராக தீவிரமாக செயற்பட முடியும். மலையை பிளந்து சேவை செய்யாவிட்டாலும், ஏதோ தனக்கு இயன்றதை செய்ய முடியுமல்லவா? ஒரு அமைச்சை பெற்றால் அதனூடாக, தங்களுக்கு இயலுமானதை செய்ய முடியும். குறைந்தது நாலு பேருக்கு தொழிலையாவது வழங்க முடியும்.

தற்போது 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மொட்டுக்கு சார்பானவர்களாகவே செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. அரசின் பிழைகளை கூட தட்டிக் கேட்கும் திராணியற்றவர்களாக உள்ளனர். இது ஒன்றும் இரகசியமானதுமல்ல. இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் அறிந்ததே! இது தான் உங்கள் நிலைப்பாடு என்றால், அமைச்சொன்றையும் பெற்று மக்களுக்கு இயலுமான சேவைகளை செய்யுங்கள். அதுவாவது இவர்கள் மொட்டை ஆதரித்ததற்கான பயனாக எஞ்சட்டும். அமைச்சையும் பெறாது, மொட்டையும் ஆதரிப்பதானது, மொட்டு அணிக்கே மிகவும் சாதகமானது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team