20 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த பெட்டியை திறந்தபோது குண்டுவெடிப்பு: பாலஸ்தீனிய தூதர் பலி - Sri Lanka Muslim

20 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த பெட்டியை திறந்தபோது குண்டுவெடிப்பு: பாலஸ்தீனிய தூதர் பலி

Contributors

செக் குடியரசுக்கான பாலஸ்தீனிய தூதரின் வீட்டில் குண்டு வெடித்ததில் அவர் பலியானார். செக் குடியரசுக்கான பாலஸ்தீனிய தூதராக கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டவர் ஜமால் அல் ஜமால்(56). அவரது வீடு பிராக்கில் உள்ள சச்டோலில் உள்ளது.

 

அவரும், அவரது 52 வயது மனைவியும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த புதிய வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் பழைய தூதரக கட்டிடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு பெட்டியை ஜமால் நேற்று திறக்க முயன்றுள்ளார். அந்த பெட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்காமல் இருந்துள்ளது.

 

இந்நிலையில் ஜமால் பெட்டியை திறக்க முயன்றுள்ளார். அவர் பெட்டியை திறந்தபோது குண்டு வெடித்து அவரது வயிறு, தலை, மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் அவரது வீட்டில் அவரும், அவரது மனைவியும் மட்டுமே இருந்தனர். அவரது மனைவி குண்டு வெடித்த உடன் தூதரக ஊழியர்களை அணுகி தகவல் தெரிவித்தார்.

 

உடனே ஜமால் பிராக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஜமால் திறக்க முயன்ற பெட்டி 1980களில் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் செயல்பட்ட கட்டிடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.

 

இத்தனை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த அந்த பெட்டியில் அப்படி என்னதான் உள்ளது என்பதை அறியவே ஜமால் அதை திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team