2021 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை..! - Sri Lanka Muslim

2021 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை..!

Contributors

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் தேர்வு ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் க.பொ.த. உயர் தரப் பரீட்சை ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 31 வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மாணவர்கள் பலவிதமான மன உளைச்சல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் இந்த இரண்டு பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. பல மாணவர்கள் இதுவரை பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை.

பாடசாலைக் கல்வியும் தனியார் போதனைக் கல்வியும் கிட்டத்தட்ட முற்றிலும் சரிந்துவிட்டதால் மாணவர்கள் முழு குழப்ப நிலையில் உள்ளனர். இணைய வழிக் கல்வி முறை நாட்டின் பல பகுதிகளுக்கு இன்னும் அறிமுகமில்லாதது மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் இல்லை.

மறுபுறம், இணைய வழிக் கல்வியை மேம்படுத்துவதற்கான நடைமுறை திட்டத்தை வகுக்கக் கூட அரசாங்கம் இதுவரை தவறிவிட்டது.

கொரோனா பேரழிவு நாட்டைச் சூழ்ந்திருந்தாலும், அரசாங்கமோ கல்வி அமைச்சோ மாணவர்களின் கல்வியில் சிறிதளவும் கவனம் செலுத்தவில்லை.

நாடாளுமன்றத்திலும் அதற்கு அப்பாலும் எங்கள் குரல்களை தொடர்ந்து எழுப்பியுள்ள நாங்கள், இவற்றை அற்பமேனும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாது இந்த நாட்டின் சிறுவர்களின் வாழ்க்கையை இருளில் மூழ்கடித்துள்ளது.

இந்த சூழலில், கல்வி நிபுணர்களின் நேர்மறையான மற்றும் நடைமுறை ஆலோசனையின் அடிப்படையில் க.பொ.த.உயர் தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை இரண்டு தேர்வுகளையும் போதுமான காலத்திற்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கத்தை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாட்டில் எதிர்கால தலைமுறையினருக்காக நேர்மறையான மற்றும் தேசிய நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team