2023 - பட்ஜெட்டின் இறுதி வாக்கெடுப்பு இன்று! - Sri Lanka Muslim

2023 – பட்ஜெட்டின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

Contributors

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சரென்ற வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சபையில் சமர்ப்பித்து வரவு செலவுத் திட்டம் மீதான உரையை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான 07 நாட்கள் நடைபெற்றன.

அதனையடுத்து 22 ஆம் திகதி மாலை 6.00மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அந்த வாக்கெடுப்பில். ஆளும் கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்.பி.க்களான ஜீவன் தொண்டமான், ராமேஸ்வரன் ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த துமிந்த திசாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன ஆகியோரும் வாக்களித்தனர்.

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , ஜே வி.பி.,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி டளஸ் அழகப்பெரும , விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான அணியினரும் வாக்களித்தனர். அதேபோன்று எதிரணியிலுள்ள அதாவுல்லா எம்.பி. அலி சப்ரி ரஹீம் எம்.பி. ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமகமளிக்கவில்லை. அதேவேளை தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் சபையில் சமுகமளித்திருந்த போதும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அந்த வகையில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 உறுப்பினர்களும் எதிராக 84 உறுப்பினர்களும் வாக்களித்தபோதும் 18 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Web Design by Srilanka Muslims Web Team