239 பேருடன் மாயமான மலேசிய விமானம் - தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு » Sri Lanka Muslim

239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு

flight

Contributors
author image

Editorial Team

239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத்தை தேடும் பணி அடுத்த வாரத்திற்கு பிறகு நிறுத்தப்படும் என மலேசிய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்தது

இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்தன.

கடந்த ஆண்டு ‘ஓசியன் இன்பினிட்டி’ எனும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் – இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் விமானம் அல்லது விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் 70 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என மலேசிய முன்னாள் போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்த பணிக்காக ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சோனார் மற்றும் அதிநவின கேமராக்கள் பொருத்தப்பட்ட எட்டு ஆழ்கடல் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹாதிர் முகமது ‘ஓசியன் இன்பினிட்டி’ நிறுவனத்துடன் விமானத்தை கண்டுபிடிக்க ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, இன்று பேசிய மலேசியாவின் புதிய போக்குவரத்து மந்திரி அந்தோனி லோக், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இம்மாதம் 29-ம் தேதி வரை மட்டுமே நடைபெறும். அதன் பின்னர்,தேடும் பணி கைவிடப்படும் என தெரிவித்தார்.

Web Design by The Design Lanka