260 கிலோ ஹெரோயின் இறக்குமதியுடன் பிரதமருக்கு தொடர்பு எப்படி? அநுரகுமார திஸாநாயக்க - Sri Lanka Muslim

260 கிலோ ஹெரோயின் இறக்குமதியுடன் பிரதமருக்கு தொடர்பு எப்படி? அநுரகுமார திஸாநாயக்க

Contributors

இலங்கையில் அண்மையில் மீட்கப்பட்ட அதிக ஹெரோயின் தொகையுடன் நாட்டின் இரண்டாம் நிலை பிரஜையான பிரதமர் சம்பந்தப்படுத்தப்பட்டது எப்படி என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (02) பாராளுன்றில் கேள்வி எழுப்பினார்.

260 கிலோ கிராம் ஹெரோயின் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விசாரணை மேற்கொள்ளப்படுவது நாட்டிற்கு உகந்ததல்ல என அவர் குறிப்பிட்டார்.

கராச்சியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 260 கிலோ கிராம் ஹெரோயின் மாளிகாவத்தை ரி-30 ரயில் வீதி முகவரியில் ரொஹான் இம்பெக்ஸ் என்ற நிறுவன பெயருக்கு குறித்த ஹெரோயின் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அநுரகுமார தெரிவித்தார்.

ஆனால் குறித்த நிறுவனம் ஹெரோயின் இறக்குமதி செய்யப்பட்ட ஜூன் 22ம் திகதிக்குப் பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

சிறு வியாபாரி ஒருவரால் இவ்வாறு பாரிய தொகை ஹெரோயின் இறக்குமதி செய்ய முடியாது எனவும் அரசியல் பக்கபலமுள்ள பெரிய வியாபாரியாலேயே இதனை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அநுரகுமார குறிப்பிட்டார்.

குறித்த ஹெரோயின் அடங்கிய கொள்கலன்களை சலுகை வரி அடிப்படையில் விடுவிக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதன் ஊழியர் ஒருவரால் ஒகஸ்ட் 23ம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென நவம்பர் 10ம் திகதி ´சன்டே ரைம்ஸ்´ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாக அநுரகுமார கூறியுள்ளார்.

புதிய நிறுவனம் என்பதால் அதிக கட்டணம் செலுத்த முடியாது. ஆகவே அவர்களுக்கு கட்டண சலுகையும் துறைமுக கட்டண நிவாரணமும் வழங்கும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

எனவே இது குறித்து எழும் கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என அநுராகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் இன்று கேட்டுக் கொண்டார்.

01.கொள்கலனின் இருந்து மீட்கப்பட்ட திரவியம் மற்றும் அதன் அளவு எவ்வளவு?

02.கொள்கலனை விடுவித்துக் கொள்ள நிறுவனத்திற்கு உதவும் வகையில் கடிதங்கள் எதுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவா?

03.அவ்வாறு கடிதம் அனுப்பியவருக்கு ஆலோசனை வழங்கியது யார்?

04.போதைப் பொருள் தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்துடன் தொடர்புடைய நபர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?

05.இதன் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளதா?

06.முழு விசாரணையின் தற்போதை நிலைமை என்ன?

அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.(j)

Web Design by Srilanka Muslims Web Team