27ம் ஆண்டு நினைவில் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகள் » Sri Lanka Muslim

27ம் ஆண்டு நினைவில் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகள்

kattankudy

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

உவைஸ் முஹைதீன் – காத்தான்குடி


பாசிசவாதப் பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அவர்களது மட்டக்களப்பு முக்கியஸ்த்தர் ரஞ்சித் அப்பாவின் தலைமையில் அப்போதைய கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மானின் வழிகாட்டலில் 03.08.1990 அன்று இரவு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் ஹுசைனியா பள்ளிவாயலிலும் மக்கள் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது நிகழ்த்தப்பட்ட கொடூர மனிதப் படுகொலைகளை அறியாதவர்கள் அரிது.

27 வருட நினைவில் புரளும் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளின் இந்தக் கோழைத்தனமான கொடூரப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் இருந்த சூழ்நிலையை இப்போதைய இளைஞர் சமூகம் சரியாக அறிந்திருக்கவில்லை என்பது ஒரு முக்கிய குறைபாடாகும்.

தொண்ணூறுகளில் புலிகள் வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் மீது பகிரங்கமான இனச் சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

பல்லாயிரக் கணக்கான வடக்கு முஸ்லிம்களை அவர்களது பூர்வீக வாழிடங்களில் இருந்து சில மணித்தியால காலக்கெடு விதித்து, பின்னர் பெறுமதியான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள் என்று அறிவித்தனர். தமது சோதனைச் சாவடிகளில் அவற்றையும் களவெடுத்துக்கொண்டு வெறுங்கையோடு விரட்டினர் திருட்டுப் புலிகள்.

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் சரண்டைந்த நூற்றுக்கணக்கான பொலிசாரில் தமிழர்களை தெரிவுசெய்து வெளியேற்றிவிட்டு, சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசாரை புலிகள் கொன்றனர்.

அம்பிளாந்துறைச் சந்தியில் காத்தான்குடி வர்த்தகர்கள் தொண்ணூறுக்கும் மேற்பட்டோரை வாகனங்கள் மற்றும் வர்த்தகப் பொருட்களோடு கடத்திக் கொன்றனர் கபடப் புலிகள்.

இந்த வியாபாரிகள் உணவுப் பொருட்களுக்கு பெருந் தட்டுப்பாடு நிலவிய காலகட்டத்தில் அவற்றை வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக கல்முனைக்கு சென்றவர்கள். எங்கு புதைத்தார்கள் என்றுகூட தெரியாமல் 27 வருடங்கள் போய்விட்டன.

மின்சாரம் மாதக் கணக்காக தடைப்பட்டிருந்த அந்த வருடத்தில், புலிப் பயங்கரவாதிகள் காத்தான்குடி மீது இனப்படுகொலைத் தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற அச்சம் மிகுந்திருந்தது. இதனால் பயத்தை குறைக்க பல பகுதிகளிலும் விழிப்புக் குழுக்கள் இயங்கின. சில மாதங்களாக இவ்வாறு இருந்த போது வந்த ஒரு இருண்ட இரவில்தான் புலிகளின் பேடித்தனம் பள்ளிகள் மீது பாய்ந்தது.

இரண்டு பள்ளிவாயல்களிலுமாக 103 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் இஷா தொழுகையின் இறுதி சுஜூதின் போது பின்புறமிருந்து பாரிய துப்பாக்கிகளை பாவித்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ஹுசைனியா பள்ளிவாயலில் தொழுகைக்கு தயாரானோர் பள்ளியின் ஒரு மூலைக்கு துரத்தப்பட்டு சுடப்பட்டும் கைக்குண்டுகள் வீசப்பட்டும் கொல்லப்பட்டனர்.

மாத்திரமின்றி, மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் சிறிது நேர இடைவெளிவிட்டு தப்பியவர்கள் பேசுவது போல் பேசி, அதைக் கேட்டு எழுந்து பார்த்தவர்களை மீண்டும் சுட்டுக் கொன்றனர் வஞ்சகப் புலிகள்.

இதன்போது எதிர்த்து கதவுச் சலாகைகளை எடுத்து தாக்க முற்பட்ட டாக்டர். ராஜேந்திரா அன்வர் போன்ற பலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

ரஞ்சித் அப்பா தான் வழமையாக கப்பம் வாங்கி தின்ற ஜின்னா ஹாஜியாரின் வீட்டுக்குச் சென்று அங்கு அவரது மருமகனை சுட்டுக் கொன்றான். ஜின்னா ஹாஜியாரும் பள்ளியில் கொல்லப்பட்டார்.

இத்துடன் புலிகளின் கொலைவெறியாட்டம் முடியவில்லை.

11.08.1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்திற்குள் புகுந்து முஸ்லிம்களை வீதி வீதியாக விரட்டி வெட்டியும் சுட்டும் கோரமாக படுகொலை செய்தனர் இரத்தவெறிப் புலிகள்.

130க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதலில், கர்ப்பிணித் தாயின் வயிற்றை வெட்டி உள்ளிருந்த சிசுவை எடுத்து வெட்டி வீசிவிட்டுப் போயிருந்தனர். அந்தளவுக்கு அவர்களின் கொலைவெறி முற்றியிருந்தது.

இத்தாக்குதலில் அதிக எண்ணிக்கையில் பெண்களும் குழந்தைகளுமே கொல்லப்பட்டனர்.

இதிலிருந்து சில நாட்களின் பின்னர் பொலன்னறுவ – மட்டக்களப்பு எல்லைக் கிராமமான பள்ளித்திடலில் பல முஸ்லிம்களை புலிகள் கொன்றனர்.

ஏறாவூர் மற்றும் பள்ளித்திடல் படுகொலைகளின் போது காத்தான்குடியிலிருந்து மையத்துகளை அடக்குவதில் உதவிசெய்ய மக்கள் சென்றதை கவனித்து, பள்ளித்திடல் படுகொலைகள் நடந்து சில நாட்களின் பின்னர் வேறொரு இடத்தில் இவ்வாறான கொலைகள் நடந்ததாக வதந்தியை கிளப்பிவிட்டனர். உடனடியாக வெளிக்கிடத் தயாரான உதவிக் குழுக்களின் உயிர்கள் இறைவனின் நாட்டத்தால், சிலரது புத்தி சாதுரியமான நடவடிக்கைகள் காரணமாக இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்டன.

மேலே குறிப்பிடப்பட்டவை சில முக்கிய தாக்குதல்களே. இக்காலப்பகுதியில் சிறுகச் சிறுக ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். கோடிக் கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன.

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடியில் இருந்த முஸ்லிம்களது வணிக நிறுவனங்கள் உடைக்கப்பட்டு நாட்கணக்காக சூறையாடப்பட்டன.

இவ்வாறே சிங்களவர்கள் மீதும் அறந்தலாவ – அனுராதபுரம் முதல் தலதா மாளிகை வரை புலிப் பயங்கரவாதிகளால் இனவெறிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

அப்பாவிப் பொதுமக்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு புலிகள் முள்ளிவாய்க்காலில் புதைந்தழிந்து ஒன்பது ஆண்டுகளாகின்றன.

தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான சிறுவர்களை ஆயுத முனையில் பறித்துக் கொண்டு போய் சிறுவர் போராளிகளாக ஆக்கி, அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை மாட்டியும், பலரை தற்கொலை அங்கிகளை அணிவித்து மூளைச்சலவை செய்து வெடித்துச் சிதறவைத்தும் கொல்லக் கொடுத்த ‘மாவீரன்’ பிரபாகரனுக்கு கடைசிவரை தனது கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பியை கடித்து தற்கொலை செய்யும் தைரியம் இருக்கவில்லை. பிரபாகரன் சரண்டைந்து உயிர்தப்ப முற்பட்டதாக நம்பகமான தகவல்கள் உள்ளன.

விதி வலியது.

பாசிசப் புலிப் பயங்கரவாதிகளின் வீழ்ச்சியின் பின்னரும் முஸ்லிம்கள் மீதான நிர்வாகப் பயங்கரவாதம் அடங்கலான நெருக்குதல்கள் குறைந்தபாடில்லை.

வடக்கு முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை புலி-வாலான தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே தடுக்கிறது.

கூட்டமைப்போடு வடக்கில் அரசியல் தேனிலவு கொண்டாடிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியால் இந்த விடயத்தில் அறிக்கைகள் விடுவதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.

மாத்திரமன்றி கருணா – பிள்ளையான் போன்றோரோடு அரசியல் உறவுகளைக் கொண்டிருந்த ஹிஸ்புல்லாஹ்வினால், காத்தான்குடி நகர சபைக்குரிய ஆரையம்பதி பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு நகர சபை ஆகியவற்றால் யுத்த காலத்தில் அரச வர்த்தமானி அறிவித்தலை மீறி ஆக்கிரமிக்கப்பட்ட 400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் ஒரு சதுர அடியைக் கூட மீட்க முடியவில்லை.

ஹிஸ்புல்லாஹ் 1987-88 காலப்பகுதியில் வெளியிடப்பட்ட காத்தான்குடிப் பிரதேச சபைக்கான எல்லைகளை குறிப்பிட்டு வரையறுக்கும் வர்த்தமானியில் எல்லைகள் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கதைவிட்டுத் திரிந்தார்.

வெட்கம் மானம் சூடு சுரணையற்ற அவரது ஆதரவாளர்களோ, கருணா அம்மானை அவரது அலுவலகத்துக்கு கூட்டி வந்து பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது அவனை படுகொலை நிகழ்ந்த மீரா ஜும்ஆ பள்ளிவாயலுக்குள் கூட்டிவந்து கௌரவித்தனர்.

கூட்டமைப்போ, கருணாவோ, பிள்ளையானோ திருந்தவுமில்லை திருந்தப் போவதுமில்லை. அண்மைய அறிக்கையொன்றில் தமிழர்களை முஸ்லிம்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கருணா சொல்லியிருந்தான்.

அத்துடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வரும் என்ற அனுமானத்தில் சமூக வலைத்தளங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்பு துவேசப் பிரச்சாரங்களின் பின்னணியில் கருணா – பிள்ளையான் ஆகியோரது ஆதரவு சக்திகளே இயங்குகின்றன.

இவற்றை ஏன் இப்போது சொல்ல வேண்டும் என்று சிலர் கேட்கலாம்,

ஏனென்றால் புலிப் பயங்கரவாதிகள் எமக்கு பகிரங்க விரோதிகளாய் இருந்தனர். அவர்கள் எம்மை தாக்குவார்கள் / கொல்வார்கள் என்று எமக்குத் தெரிந்திருந்தது.

ஆனால் எமது அரசியல் வியாபாரிகள் குறுகிய சுயநல அரசியல் நோக்கங்களுக்காக புலிப் பயங்கரவாதிகளின் எச்சங்களோடு கைகோர்க்கின்றனர்.

உண்மையில் இவர்கள் புலிகளை விட ஆபத்தானவர்கள்.

இவர்கள் தொடர்பில் இளம் சமுதாயம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.

சுஹதாக்களின் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

Web Design by The Design Lanka