3ஆவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்தது - பிரேசிலில் கண்டுபிடிப்பு - Sri Lanka Muslim

3ஆவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்தது – பிரேசிலில் கண்டுபிடிப்பு

Contributors

3ஆவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது கண்டறியப்பட்டது. அதன் பின் உலகம் முழுவதும் 180 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது.

இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அனைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தின. மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தென்கிழக்கு இங்கிலாந்தின் பகுதியில் மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் பரவியது.

அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும் மற்றொரு வகையில் கொரோனா உருமாற்றம் அடைந்து பரவியது தெரிய வந்தது.

இங்கிலாந்தில் பரவும் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா முன்பிருந்த வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இதனால் அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மரபணு மாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் பலன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னொரு வகையில் 3ஆவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது பிரேசிலிலும் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டில் ஏற்கனவே வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் மரபணு மாற்றம் அடைந்துள்ளதால் 3ஆவது அலை தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய வைரஸ் 50 நாடுகளுக்கும், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய வைரஸ் 32 நாடுகளுக்கும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒரு வைரஸ் மரபணு மாற்றம் அடைவது புதிதல்ல என்றும் ஆனால் மேலும் வீரியமிக்கதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team