4 ஆயிரம் ஓட்டங்களை கடந்து உலகசாதனை படைத்த ஆம்லா - Sri Lanka Muslim

4 ஆயிரம் ஓட்டங்களை கடந்து உலகசாதனை படைத்த ஆம்லா

Contributors

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றதுடன் சில சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.

டர்பனில் நேற்று நடந்த இந்த கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியைச் சேர்ந்த 31 வயதான ஹாசிம் அம்லா 100 ஓட்டங்கள் குவித்தார். அவர் 59 ஓட்டங்களை எட்டிய போது ஒருநாள் தொடரில் அவரது ஒட்டுமொத்த ஓட்ட எண்ணிக்கை 4 ஆயிரத்தை தொட்டது.

இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அம்லா அதில் 81வது இன்னிங்சில் களமிறங்கி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம் 42 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தனது 88வது இன்னிங்சில் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அவர் இச்சாதனையை 1985ம் ஆண்டு படைத்திருந்தார்.

அவரது 28 ஆண்டு கால சாதனை தற்போது அம்லாவிடம் போய் சேர்ந்துள்ளது.

* அம்லா இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12 சதம், 23 அரைசதம் உட்பட 4041 ஓட்டங்கள் (சராசரி 53.88) சேர்த்துள்ளார். அத்துடன் வேகமாக 2 ஆயிரம் ஓட்டங்களை (40 இன்னிங்ஸ்) கடந்தவர், துரிதமாக 3 ஆயிரம் ஓட்டங்களை (57 இன்னிங்ஸ்) கடந்தவர் ஆகிய சாதனைகளும் அவரது வசமே இருக்கின்றன.

* 4 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக எடுத்தவர்களின் சாதனை பட்டியலில் 3வது இடத்தில் இந்தியாவின் வீராட் கோஹ்லி உள்ளார். அவர் தனது 93வது இன்னிங்சில் 4 ஆயிரம் ஓட்டங்களை தாண்டியிருந்தார்.

இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட மேலும் சில சாதனைகள் விவரம்:

* தென் ஆப்ரிக்க வீரர் 20 வயதான குயின்டான் டி காக் இந்த ஆட்டத்திலும் சதம் (106 ஓட்டங்கள்) அடித்தார். ஏற்கனவே முதலாவது ஒரு நாள் போட்டியிலும் சதம்(135 ஓட்டங்கள்) கண்டிருந்தார்.

இதன் மூலம் தொடர்ந்து இரு ஆட்டங்களில் சதம் விளாசிய 3வது தென் ஆப்ரிக்க தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை டி காக் பெற்றுள்ளார்.

2002ல் கிப்சும் (வங்கதேசம், இந்தியா, கென்யாவுக்கெதிராக தொடர்ந்து 3 சதம்) 2010ம் ஆண்டில் அம்லாவும் (ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 2 சதம்) இதற்கு முன்பு அடுத்தடுத்து சதம் அடித்த தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் ஆவர்.

* இந்த ஆட்டத்தில் அம்லாவும், குயின்டான் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 194 ஓட்டங்கள் சேகரித்தனர். டர்பன் மைதானத்தில் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதற்கு முன்பு 2002ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கெதிராக அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்-மேத்யூ ஹைடன் இணை 170 ஓட்டங்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோராக இருந்தது.

* இந்த மோதலில் தென் ஆப்ரிக்க தொடக்க வீரர்கள் டி காக், அம்லா இருவரும் சதத்தை பதிவு செய்தனர். ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதத்தை ருசிப்பது இது 27வது நிகழ்வாகும். அதே சமயம் தென் ஆப்ரிக்க தரப்பில் தொடக்க ஜோடி சதம் காண்பது இது 2வது முறையாகும்.

இதற்கு முன்பு 2000ம் ஆண்டு கொச்சியில் நடந்த இந்தியாவுக்கெதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் கேரி கிர்ஸ்டனும் (115 ஓட்டங்கள்), கிப்சும் (111 ஓட்டங்கள்) சதம் எடுத்திருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team