4 வடகொரிய கப்பல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை » Sri Lanka Muslim

4 வடகொரிய கப்பல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை

north6

Contributors
author image

Editorial Team

 எந்த நாடும் தங்களது துறைமுகங்களில் நுழைய அனுமதி அளிக்கக்கூடாது என்று 4 வடகொரிய சரக்கு கப்பல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக அணுகுண்டு, அணுஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். தடையை மீறி இச்சோதனைகளை வடகொரியா நடத்துவதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டின் மீது விதித்து உள்ளது.

கடந்த மாதம் 29–ந் தேதி ஹவாசாங்–15 என்னும் அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியது. இதன் மீது அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக கடந்த 22–ந் தேதி சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 5–ந் தேதி வடகொரியா மீதான இரும்பு, நிலக்கரி மற்றும் மீன்பிடி தொழில் சாதனங்கள் தொடர்பான ஏற்றுமதியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்படுத்தியது. இதேபோல் செப்டம்பர் 11–ந் தேதி ஜவுளி மற்றும் எண்ணெய் வினியோகத்துக்கு தடை விதித்தது.

இந்த நிலையில் வடகொரியாவின் உல் ஜி போங் 6, ருங் ரா 2, சாம் ஜோங் 2 மற்றும் ரியி சோங் காங்–1 ஆகிய 4 சரக்கு கப்பல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று அதிரடியாக தடை விதித்தது. இந்த 4 கப்பல்களுக்கும் எந்த நாடும் தங்களது துறைமுகங்களில் நிறுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அந்த தடை உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிச் சென்றதற்காக காமரோஸ், செயின்ட் கிட்டிஸ் மற்றும் நெவிஸ், கம்போடியா மற்றும் வடகொரியா நாடுகளை சேர்ந்த 4 கப்பல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில் இருந்து வடகொரிய கடல்பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பிய லைட்ஹவுஸ் வின்மோர் என்ற எண்ணெய் கப்பலை தென்கொரியா தனது கடல் பகுதியில் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தது.

அந்த கப்பல் பெட்ரோலிய பொருட்களை ஹாங்காங் நகரில் இருந்து ஏற்றிச் சென்று வடகொரியா அருகே சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் வடகொரியாவின் சரக்கு கப்பல்களில் எண்ணெயை பரிமாற்றம் செய்துவிட்டு, சர்வதேச கடல் பகுதியில் வந்தபோது பிடிபட்டு உள்ளதாக தென்கொரியா தெரிவித்தது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 30–க்கும் மேற்பட்ட முறை சீன சரக்கு கப்பல்கள் இதுபோல் பெட்ரோலிய பொருட்களை ஹாங்காங் கொடியை பறக்கவிட்டு எண்ணெயை வடகொரியாவிற்கு கொண்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

Web Design by The Design Lanka