45 வருடங்களாக பல நூறு ஜனாஸாக்களுக்காக கப்று வெட்டிய செயிலான் காக்கா » Sri Lanka Muslim

45 வருடங்களாக பல நூறு ஜனாஸாக்களுக்காக கப்று வெட்டிய செயிலான் காக்கா

seyilan

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்
காத்தான்குடி


45 வருடங்களாக பல நூறு ஜனாஸாக்களுக்காக கப்று வெட்டிய செயிலான் காக்கா

கப்று வெட்டும் போது பல அற்புதங்களையும் காண்கின்றேன். என்கின்றார்.

19ம் வட்டாரம் மஞ்சந்தொடுவாயில் வசிக்கும் செயிலான் என அழைக்கப்படும் கச்சிமுகம்மது செய்யது அகமது இவருக்கு வயது 64 ஆகும்.

காத்தான்குடியில் 45 வருடங்களாக ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக கப்றுகளை வெட்டி வருகின்றார்.

அவருடைய கப்று வெட்டும் உயர்ந்த பணி 18வயதிலிருந்து ஆரம்பமாகியதாக குறிப்பிடுகின்றார்.

காத்தான்குடியிலுள்ள அனைத்து மைய்ய வாடிகளிலும் இவர் கப்று வெட்டுவதுடன் குறிப்பாக முகைதீன் மெத்தை ஜும்ஆப்பள்ளிவாயல் மைய்யவாடி, முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளி வாயல் மைய்ய வாடி அதே போன்று இதர வேறு மைய்ய வாடிகளுக்கும் சென்று யார் அழைத்தாலும் கப்றுகளை வெட்டி அந்தப் பணியினை செய்து வருகின்றார்.

கப்று வெட்டுவதற்காக கூலியை பேசி கப்று வெட்டுவதில்லை. பணத்திற்காக கப்று வெட்டுவது நோக்கமல்ல ஆனால் கப்று வெட்டியதன் பின்னர் அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக் கொள்வேன் எனவும் கூறுகின்றார்.

சிலர் 500 ரூபாவும் தருவார்கள் சிலர் 1000 ரூபாவும் தருவார்கள் சில வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் எதுவும் தராமலும் போவார்கள். ஆனால் நான் பணம் கேட்பதில்லை என்கிறார்.

கப்று ஒன்றை வெட்டுவதற்காக நான் மைய்ய வாடிக்குள் நுழைவதற்கு முன்னர் பள்ளிவாயலில் 2 ரக்அத் சுன்னத் தொழுது விட்டு மைய்யாடியில் நின்று துஆ ஓதி விட்டே கப்று வெட்ட ஆரம்பிப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

தான் கப்றுகளை வெட்டிய அனுபவத்தில் பல அற்புதங்களை கண்டுள்ளேன்.

அதில் சில கப்றுகளை வெட்டும் போது பல வருடங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா புதிதாக அடக்கம் செய்யப்பட்ட ஜனஸா இருப்பது போன்று எந்த சிதைவுமில்லாமல் இருப்பதை கண்டுள்ளேன்.

அது முகைதீன் மெத்தை ஜும்ஆப்பள்ளிவாயல் மைய்யவாடி, முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளி வாயல் மைய்ய வாடிகளில் இந்த அற்புதங்களை கண்டுள்ளேன் என்கிறார். கபன் பிடவையான வெள்ளைப் பிடவை கூட பழுதடையாத நிலையில் சில ஜனாஸாக்களையும் கண்டு அதை அப்படியே மூடி விட்டு வேறு இடத்தில் கப்றுகளை வெட்டிய சந்தாப்பங்களும உண்டு எனவும் தெரிவிக்கின்றார்.

சில நேரங்களில் சில ஜனாஸாக்களுக்காக கப்றுகளை வெட்டும் போது ஒரு வகையான இதமான நறுமனம் வீசும் அந்த வாசத்தை நான் வெளியில் எங்கும் நுகர்ந்ததில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.

அதே போன்று சில கப்றுகளை வெட்டுப் போது மண் மிகவும் கறுப்பாக இருந்ததையும் அவதானித்துள்ளேன் என்றகின்றார்.

ஷுஹதாக்களுக்காக மற்றும் சுனாமி அனர்தத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் யுத்தத்தினால் ஷஹீதானவர்களுக்காகவும் தான் கப்றுகளை வெட்டியுள்ளதாகவும் செயிலான் காக்கா குறிப்பிடுகின்றார்.

யார் கப்று வெட்டுவதற்கு என்னை அழைத்தாலும் நான் அங்கு உடனே சென்று விடுவேன் என்றகின்றார்.

இவ்வாறெல்லாம் பல நூறு கப்றுகளை வெட்டிய செயிலான் காக்காவுக்கு ஆறு பிள்ளைகளாகும். அத்தனை பிள்ளைகளுக்கம் திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

வறிய நிலையில் வாழும் அவரை தேடிச் சென்று யாரும் அவருக்கு உதவி செய்தது கிடையாது எனவும் குறிப்பிடுகின்றார்.

இப்போதும் ஒரு பழுதடைந்த துவிச்சக்கர வண்டியிலே செயிலான் காக்கா நடமாடுகின்றார்.

முடியுமானவர்கள் அவருக்கு ஒரு புதிய துவிச்சக்கர வண்டியை வாங்கி அன்பளிப்பு செய்தால் உதவியாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். அவர் துவிச்சக்கர வண்டியை கேட்க வில்லை இது என்னுடைய வேண்டுகோளாகும்.

இப்படியான பணிகளை செய்வோர் சமூகத்தில் என்றும் மதிக்கப்படல் வேண்டும்.

seyilan

Web Design by The Design Lanka