மாகாண சபை தற்போதுதான் பிறந்த ஒரு குழந்தை -இரா.சம்பந்தன் - Sri Lanka Muslim

மாகாண சபை தற்போதுதான் பிறந்த ஒரு குழந்தை -இரா.சம்பந்தன்

Contributors

(BBC)

461801324TNA

போருக்கு பிந்தைய சமூகத்தில் தமிழ் மக்களுக்கு உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பல தேவைகள் இருக்கும் நிலையில், அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரு அரசியல் தீர்வு அவசியம், இதை அடைய இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு நல்லுறவும் அவசியம்.

எனவே தான் ஒரு சுமுகமான சமிக்ஞையைத் தரும் வண்ணம், இலங்கையின் வட மாகாண முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் , ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இருந்த சர்ச்சை பற்றி குறிப்பிட்ட சம்பந்தன்,

முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஜனாதிபதியிடம் பதவி பிரமாணம் ஏற்பதில் பெரிய உள்ளர்த்தம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் பதவிப்பிரமாணத்தை எங்கு செய்து கொண்டாலும், இதே வாசகத்தைத் தான் பயன்படுத்த வேண்டும் என்றார்.

இலங்கையில் மத்திய அரசுடன் மோதி மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும், ஏனென்றால், மாகாண சபை தற்போதுதான் பிறந்த ஒரு குழந்தை, அது வளரவேண்டும் என்று கூறிய சம்பந்தன், மாகாண சபையை நடத்துவதற்கு ஒரு அலுவலகக் கட்டடம் கூட இல்லாத யதார்த்தத்தை நினைத்துப் பார்க்கவேண்டும் என்றார்.

ஆனால் இந்த நல்லெண்ண சமிக்ஞையை சிங்கள அரசியல் தலைமை சரியாக ஏற்றுக்கொண்டு, தமிழர்களுக்கு சரியான தீர்வைத் தராவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு என்றார் சம்பந்தன்.

 

Web Design by Srilanka Muslims Web Team