5ம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஏன் கட்டித் தொங்க விடுகின்றீர்கள்..?? » Sri Lanka Muslim

5ம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஏன் கட்டித் தொங்க விடுகின்றீர்கள்..??

scholer

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்.


பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், வலையக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பெற்றோர்கள் என அத்தனை பேரிடமும் தலைப்போடு ஒட்டிய சில விடயங்களை சுருக்கமாக சொல்லலாம் என நினைக்கின்றேன்.

தற்போது இலங்கையில் 5ம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகி வீடுகள், பாடசாலைகள், வலையக் கல்வி அலுவலகங்கள் என அத்தனை இடங்களிலும் பரீட்சை முடிவுகள் சம்பந்தமான பேச்சுக்களே அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் ஊடகங்களாலும், சமூக வலையத்தளங்கள் வாயிலாகவும் மற்றும் பாடசாலைகளினாலும் போற்றிப் புகழப்படுகின்றார்கள் அதே சமயம் சித்தியடையத் தவறிய மாணவர்கள் சில பெற்றோர்களால் அடித்துத் துவைக்கவும் படுகின்றார்கள்.

இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக் கல்வியின் தந்தையாகப் போற்றப்படும் கலாநிதி CWW கன்னங்கரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவசக் கல்வியின் தொடரில் வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்கும், திறமையான மாணவர்களை இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் அனுமதிப்பதற்குமாகவே 1952ம் ஆண்டு 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முறை அறிமுகம் செய்யபட்டது.

இப் பரீட்சையில் சித்தியடையும் வறிய மாணவர்களுக்கு உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு 5000 ரூபா என சுமார் 15000 மாணவர்களுக்கு இவ் உதவித் தொகை வழங்கப்படுகின்றது அத்தோடு கல்வியமைச்சினால் நிர்ணயிக்கப்படும் பாடசாலைக்குரிய வெட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ப 15 ஆயிரம் மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் 6ம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் இப் பரீட்சையின் நோக்கம் ஆரோக்கியமானதாகவிருந்தது ஆனால் இன்று அந்த நோக்கம் திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

பரீட்சையை எழுதி விட்டு மாணவன் அவனது நண்பர்களோடு விளையாடச் சென்று விடுகின்றான் அவனுக்கு அந்தப் பரீட்சையின் முக்கியத்துவம் தெரியாது, அவனுக்கு பரீட்சைப் பயம் கிடையாது, றிசேல்ட் வரப் போகின்றது என்ற பதட்டம் கிடையாது ஆனால் இவை அத்தனையும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்குமே அதிகமதிகமிருக்கும் காரணம் இது அவர்களுக்குரிய பரீட்சைதானே அவர்கள் தங்களை பெருமைப்படுத்திக் கொள்ளும் பரீட்சைதானே அதனால்த்தான் பிள்ளைகளை ஓய்வெடுத்து விளையாட விடாமல் பெற்றோர்கள் டியூசன் வகுப்புக்களுக்கு துரத்தி துரத்தி அனுப்பி காசைக் கரியாக்குகின்றார்கள், அதனால்த்தான் ஆசிரியர்களும் சந்திக்கு சந்தி, தெருவுக்குத் தெரு என தனியார் வகுப்பு நிலையங்களை அமைத்து மாணவர்களை இயந்திரங்களாக மாற்றுகின்றார்கள்.

பரீட்சையின் முடிவுகள் வெளியாகிய பின்னர் சில பாடசாலையினர் சித்தியடைந்த மாணவர்களின் புகைப்படங்களை பேனரில் அச்சிட்டு அதனை பாடசாலையின் நுழைவாயிலில் கட்டித் தொங்க விட்டுக் காட்சிப்படுத்துகின்றார்கள் அது அந்த வருடம் முழுக்க முழுக்க அங்கேயே தொங்கிக் கிடக்கும் மேலும் சித்தியடைந்த மாணவர்களை பாடசாலைக் கூட்டங்களில் மாலை மரியாதையென கௌரவித்து போற்றிப் புகழ்வர் இவைகள் எல்லாம் ஏனைய மாணவர்கள் மத்தியில் உளவியல் ரீதியில் எவ்வாறான தாக்கங்களை உண்டு பண்னும் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லையா…???

பாடசாலையின் நுழைவாயிலில் உயர தொங்கவிடப்பட்டுள்ள பேனர்களை அன்னார்ந்து பார்த்து பார்த்து அந்தப் பிஞ்சி மனதுகள் ஏங்காதா…??? பரீட்சையில் சித்தியடைந்து தன்னாலும் இப்படி உயரப் பறக்க முடியவில்லையே என ஏங்காதா…??? அவர்கள் மன ரீதியாக துன்பப்படமாட்டார்களா…??? இப்படிக் கட்டித் தொங்க விடும் செயற்பாடுகளால் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் மாத்திரமல்ல சித்தியடைந்த மாணவர்கள் கூட உளவியல் ரீதியாக பாதிப்புக்களையே அடைகின்றார்கள்.

அவர்களுக்குல் பெருமைத்தனம் குடி கொள்ள ஆரம்பிக்கின்றது, தன்னுடைய புகைப்படம் உயர பறக்கிறது என பெருமை கொள்கிறார்கள், கல்வியில் இன்னும் பயணிக்க வேண்டிய துாரத்தை மறந்து தன்னால் பெரிதாக சாதனை புரியப்பட்டதாக எண்னுகிறார்கள் இதனால் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்த மறந்து ஈற்றில் நஷ்டமடைகின்றார்கள்.

பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு பாடசாலைகளில்தான் இந்தக் மன உளைச்சல் என்றால் வீடுகளில் சொல்ல முடியாத அளவுக்கு மன உளைச்சல்கள் கொட்டிக் கிடக்கிறது பக்கத்து வீட்டுப் பையன் பரீட்சையில் சி்த்தியடைந்து விட்டான் உன்னால் ஏன் சித்தியடைய முடியவில்லை என அவனை தினமும் பெற்றோர் நச்சரிக்கின்றார்கள், பிற மாணவர்களோடு ஒப்பிட்டு குறை பேசுகின்றார்கள், எத்தனை டியூசன் வகுப்புக்களுக்கு உன்னை அனுப்பினேன், எவ்வளவோ காசை கொட்டிக் கரைத்தேன் என அவர்களைப் பார்த்து பெற்றோர் புலம்புகின்றார்கள் இவை அனைத்தும் அவர்களுக்கு மனரீதியாக பாரிய எதிர்மறை தாக்கத்தை உண்டு பண்னும் என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் மறந்து விடக் கூடாது.

தங்களது பாடசாலையில் இத்தனை மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் என பாடசாலைகள் பெருமைப்பட்டுக் கொள்ளவும், தான் கற்பித்ததனால் இத்தனை மாணவர்கள் சித்தியடைந்திருக்கின்றார்கள் என ஆசிரியர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளவும், தனது பிள்ளை பரீட்சையில் சித்தியடைந்து விட்டான் அவனை பகுதிநேர வகுப்புக்களுக்கு அனுப்பியதில் பயண் பெற்றேன் என பெற்றோர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளவும் நீங்கள் செய்யும் செயல்கள் சித்தியடைந்த மாணவர்களையும்-சித்தியடையாத மாணவர்களையும் மனரீதியாக வெகுவாகப் பாதிப்படையச் செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆகவே பெற்றோர்களும்-ஆசிரியர்களும் இப்பரீட்சை தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக எதிர்மறையான தாக்கங்களை உண்டு பண்னும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தால் பெருமைப்பட்டுக் கொள்ளவோ சித்தியடையாவிட்டால் சிறுமைப் பட்டுக் கொள்ளவோ எதுவுமில்லை என அவர்களுக்குப் புரிய வையுங்கள், அறிவுரை கூறுங்கள், மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள், கல்வியில் கடந்து செல்ல வேண்டிய துாரம் இன்னும் நிறையவே இருக்கின்றது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள், 5ம் தர புலமைப் பரீட்சை மாத்திரம் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை விளங்கப்படுத்துங்கள்.

தற்போது நம்நாட்டில் புலமைப் பரிசில் பரீட்சை வேறு திசை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த சிவில் அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள், உளவியல் மையங்கள் மற்றும் அரசியல் தரப்புக்கள் என அத்தனை பேரும் இப் பரீட்சையானது 5ம் தர மாணவர்களுக்கு தேவையில்லாத ஒன்று இதனை 8ம் தரத்தில் ஏற்படுத்த வேண்டும் என நாடுபூராகவும் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Web Design by The Design Lanka