800 ஆண்டுகளுக்கு பின் ஐஸ்லாந்தில் வெடித்தது எரிமலை - 40 ஆயிரம் நில நடுக்கங்கள் பதிவு - விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பில்லை - Sri Lanka Muslim

800 ஆண்டுகளுக்கு பின் ஐஸ்லாந்தில் வெடித்தது எரிமலை – 40 ஆயிரம் நில நடுக்கங்கள் பதிவு – விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பில்லை

Contributors

ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேக்யூவீக்கின் தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடித்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள இந்த பேக்ரதால்ஸ்ப்யாட்ல் (Fagradalsfjall) எரிமலையின் தீப் பிழம்பு 500 முதல் 700 மீட்டர் நீளமுள்ளது எனவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. 800 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த எரிமலை வெடித்துள்ளது.

இது தவிர, ஐஸ்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் 40 ஆயிரம் நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

2010ஆம் ஆண்டு இந்நாட்டில் உள்ள ஏயுப்யாட்யோகுட் (Eyjafjallajokull) எரிமலை வெடித்தபோது, ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்தமடைந்தது.

ஆனால் தற்போது வெடித்துள்ள பேக்ரதால்ஸ்ப்யாட்ல் எரிமலை சாம்பலையும், புகையையும் அவ்வளவாக உமிழாது என்றும் அதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படாது என்றும் நம்பப்படுகிறது.

கடலோரக் காவல் படை ஹெலிகொப்டர் ஒன்று இந்தப் பகுதியை ஆய்வு செய்து, எரிமலை வெடித்து லாவா (எரிமலைக் குழம்பு) வழியும் காட்சியைப் படம் பிடித்து அனுப்பியது.

எரிமலை வெடிப்பதற்குப் பல மணி நேரம் முன்பாக அந்த எரிமலையில் இருந்து 1.2 கிலோ மீட்டர் தொலைவில், 3.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.

எதிரெதிர் திசையில் மோதிக் கொள்ளும் இரு புவியத் தட்டுகளுக்கு (டெக்டானிக் பிளேட்டுகள்) இடையில் சிக்கிக் கொண்டிருப்பதால் ஐஸ்லாந்தில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது.

அந்திலாந்திக் பகுதியில் கடற்பரப்புக்கு மேலே தெரியும் நாடு உலகிலேயே ஐஸ்லாந்து மட்டுமே.

Web Design by Srilanka Muslims Web Team