மலைப் பாம்பின் உருவில் ராட்சத பெருங்குடல் -நுட்பமான சத்திரசிகிச்சை மூலம் நோயாளி உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார். - Sri Lanka Muslim

மலைப் பாம்பின் உருவில் ராட்சத பெருங்குடல் -நுட்பமான சத்திரசிகிச்சை மூலம் நோயாளி உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Contributors

(பி.எம்.எம்.ஏ.காதர்)

நோயாளி ஒருவரின் வயிற்றில் மலைப் பாம்பின் உருவில் சுருண்டு காணப்பட்ட பெருங்குடல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அந்நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த அதிசய நிகழ்வு சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் இந்த அபூர்வ சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குறித்த நோயாளியின் வயிற்றினுள் இருந்த பெருங்குடல் மலைப் பாம்பின் உருவில் ராட்சதமாக மாறி ஆபத்தான கட்டத்தில் இருப்பதை அவதானித்து வியப்படைந்தோம் எனத் தெரிவித்த சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம்; நாம் விரைந்து செயற்பட்டு மிகவும் நுட்பமாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அதனை முற்றாக அகற்றினோம் எனக் குறிப்பிட்டார்.  இந்த செயற்பாடு மேலும் ஒரு மணி நேரம் தாமதமடைந்திருக்குமானால் நோயாளியின் உயிருக்கு ஆது ஆபத்தாக அமைந்திருக்கும்.

எனினும் நாம் மேற்கொண்ட அவசர நடவடிக்கை காரணமாக சுமார் நான்கு மணித்தியாலம் சத்திர சிகிச்சை மேற்கொண்டு அந்த மலைப் பாம்பின் உருவில் காட்சியளித்த ராட்சத பெருங்குடலை இறைவனின் உதவியால் வெற்றிகரமாக அகற்றி அவரை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளோம் என்று டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் மேலும் தெரிவித்தார்.

தற்போது அந்த நோயாளி நலமுடன் இருப்பதாகவும் அவர் சுகமடைந்து வருகின்றார் எனவும் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் மேலும் குறிப்பிட்டார்.வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்ற சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் மிகவும் அசௌகரியமான நிலையில் இவ்வாறான சில அபூர்வ சத்திர சிகிச்சைகள் இதற்கு முன்னரும் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் அவர்களினால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team