இலங்கை - கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடல்…! - Sri Lanka Muslim

இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடல்…!

Contributors

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் கென்யா ஜனாதிபதி உஹுரு முயிகயி கென்யாட்டா (Uhuru Muigai Kenyatta) அவர்களுக்கும் இடையில், இன்று (03) காலை, தொலைபேசி ஊடாக சுமூகக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பலமாகியுள்ளமை தொடர்பில் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்ட இரு நாடுகளின் தலைவர்களும், இவ்வொற்றுமையை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவதானம் செலுத்தினர்.

கொவிட் தொற்றொழிப்பு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டங்களின் வெற்றி தொடர்பில், கென்யா ஜனாதிபதி அவர்கள் தமது பாராட்டுகளை, ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்தார்.

நாட்டின் 70 சதவீதமான மக்களுக்குத் தடுப்பூசி ஏற்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த முறைமையான வேலைத்திட்டமானது, ஏனைய நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றது எனவும், கென்யா ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, கொவிட் நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யக்கிடைத்த போதிலும், இவ்வாண்டின் இடைப்பட்ட காலப்பகுதியில், நாட்டுக்குள் புதிய கொவிட் திரிபுகள் உருவானதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எடுத்துரைத்தார். வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளதென்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அவ்வாறே இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென்றும் கூறினார்.

இரு தலைவர்களும், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் தாம் நெருங்கியத் தொடர்புகளைப் பேணியதாக எடுத்துரைத்த கென்யா ஜனாதிபதி அவர்கள், இரு நாட்டு மக்களின் நலனுக்காக, இலங்கை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணத் தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கு ஆபிரிக்காவின் மிக முக்கிய நாடாக விளங்கும் கென்யா, இலங்கையுடன் சிறந்த நட்புறவைப் பேணும் நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகத் தொடர்புகளின் 50 வருடப் பூர்த்தி, 2020இல் முழுமையடைந்ததோடு, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகள், இரு தரப்புக்கும் இடையில் புதிய உயர் நிலையை எட்டியுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.09.03

Web Design by Srilanka Muslims Web Team