PTA இன் கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்களை என்னால் சுட்டுக்கொல்லவும் முடியும் - ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரங்களையும் வழங்கியுள்ளார் என ரத்வத்தை தெரிவித்தார்..! - Sri Lanka Muslim

PTA இன் கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்களை என்னால் சுட்டுக்கொல்லவும் முடியும் – ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரங்களையும் வழங்கியுள்ளார் என ரத்வத்தை தெரிவித்தார்..!

Contributors

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரங்களையும் வழங்கியுள்ளார் என்னால் அவர்களை சுட்டுக்கொல்லவும் முடியும் என ரத்வத்தை தெரிவித்தார் – அடிப்படை உரிமை மீறல் மனுவில் கைதிகள் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி தனக்கு அனைத்து அதிகாரங்களையும வழங்கியுள்ளார் – அவர்களை தன்னால் விடுதலை செய்யமுடியும் சுட்டுக்கொல்லவும் முடியும் என இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை அனுராதபுரம் சிறைச்சாலையில் எச்சரித்தார் என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்டு அரசியல் கைதிகள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

12ம்திகதி மாலை 6.05 மணியளவில் பத்துகைதிகளையும் சிறைச்சாலையின் முற்றப்பகுதிக்கு வருமாறு அழைத்தார்கள். அங்கு முதலாவது பிரதிவாதி லொகான் ரத்வத்தையும், அவரது செயலாளர் போல காணப்பட்ட ஒருவரும் மெய்பாதுகாவலர் போல காணப்பட்டவர்களும் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளும் காணப்பட்டனர்.

அதன் பின்னர் ரத்வத்தை சிறைக்கைதிகளை அரைவட்டமாக நிற்குமாறும் முழங்காலில் நிற்குமாறும் உத்தரவிட்டார். அதன் பின்னர் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி தனக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினார் என தெரிவித்து சிங்களத்தில் ஏசத்தொடங்கினார். எங்களை அவரால் விடுதலை செய்ய முடியும் சுட்டுக்கொல்ல முடியும் என தெரிவித்தார் எனவும் ரத்வத்தை ஏசினார் என அரசியல் கைதிகள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

அவர் கையில் கைத்துப்பாக்கி காணப்பட்டது அவர் மதுபோதையிலிருந்தவர் போல காணப்பட்டார் எனவும் அரசியல் கைதிகள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ரத்வத்தை அவர்கள் செய்த குற்றங்கள் என்னவென அறியவிரும்புவதாக தெரிவித்தார் முதலாவது மனுதாரர் தனக்கு சிங்களம் தெரியாது என தெரிவித்தவேளை முதலாவது பிரதிவாதி அவரை நோக்கி சத்தமிட தொடங்கினார், இதனை தொடர்ந்து இரண்டாவது மனுதாரர் தலையிட்டு மொழிபெயர்த்தார் என அரசியல் கைதிகள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

முதலாவது மனுதாரர் அதே கேள்வியை மீண்டும் கேட்டார் முதலாவது பிரதிவாதி தொடர்ந்தும் கைதிகளை நோக்கி சத்தமிட்டார் அதன் பின்னர் முதலாவது இரண்டாவது மனுதாரர்களை அங்கே நிற்குமாறும் ஏனைய கைதிகளை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் என தமிழ் அரசியல் கைதிகள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் ரத்வத்தை முதலாவது மனுதாரரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து அவரை சுட்டுக்கொல்லப்போவதாக தெரிவித்தார் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறைச்சாலை பாதுகாவலர்களும் அவருடன் வந்தவர்களும் தலையிட்டு முதலாவது பிரதிவாதியை அமைதிப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசமைப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்ட தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என தமிழ் அரசியல்கைதிகள் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team