SLMC யின் அதிகாரத்திலுள்ள கல்முனை மாநகர சபையில் மீண்டும் சலசலப்பு; - Sri Lanka Muslim

SLMC யின் அதிகாரத்திலுள்ள கல்முனை மாநகர சபையில் மீண்டும் சலசலப்பு;

Contributors

கட்சிக் கட்டுப்பாட்டை மீறவேண்டாமென மலேசியாவிலிருந்து ஹக்கீம் பணிப்பு

* தன்பக்க நியாயங்களை விபரிக்கிறார் மேயர் நிசாம்

* அதிருப்தியாளர் குழு தொடர்ந்தும் விரக்தியில்

* அவமானம் என்கிறார் முன்னாள் மேயர் சிராஸ்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப் பாட்டின் கீழுள்ள கல் முனை மாநகர சபை பட்ஜட் விவகா ரம் முஸ்லிம் காங்கிரஸ் வட்டா ரங்களிலும் அரசி யல் வட்டாரங்களிலும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனை மாநகர சபை மேயர் சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டு சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேயராகப் பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த முதலாவது வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் முயற்சியில் ஆளுங்கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் தீவிரமாக இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மேயர் நிசாம் காரியப்பரால் சமர்ப்பிக்கப்பட விருந்த போதும் அது மீண்டும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜட் முன்மொழிவுகளை உறுப்பினர்கள் வாசிப்பதற்கு காலக்கெடு வழங்கும் நோக்கிலேயே விவாதமும் வாக்கெடுப்பும் ஒத்திவைக்கப்பட்டதாக நிசாம் காரியப்பர் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.

இதேவேளை பட்ஜட் வாக்கெடுப்பை ஒத்தி வைத்தமை தங்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விவாதத்தில் பங்கேற்க வந்திருந்த உறுப்பினர்களுக்கு இது ஏமாற்றமளித்ததாகவும் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

பட்ஜட் பிற்போடப்பட்டமை குறித்து மேயர் நிசாம் காரியப்பரிடம் நாம் வினவினோம். அவர் தெரிவித்ததாவது:

இவ்வாண்டுக்கான பட்ஜட்டின் மொத்தத் தொகை ரூபா 17 கோடி 70 இலட்சம். அரசாங்கம், மற்றும் வேறு கொடுப்பனவுகளால் பெறப்பட்ட தொகையை விட மாநகர சபை ஊழியர்களின் சுய உழைப்பில் 6 1/2 கோடி ரூபா கிடைத்தது. மாநகர சபைக்கென அரசாங்கம் அமர்த்திய ஊழியர்களுக்கு மேலதிகமாக மாநகர சபையினாலும் ஊழியர்கள் வேலைக்கமர்த்தப்பட்டனர். கல்முனை மாநகர சபையில் குப்பை கூளங்கள் பிரச்சினை மற்றும் வடிகான் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலேயே இவ்வாறு மேலதிகமாக ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் அரசியல்வாதிகள் தமது சொந்தக்காரர்களையும், வேண்டியவர் களையும் நியமித்துவிட்டு அவர்களை வீட் டில் ஏ.சி அறையில் ஓய்வாக இருக்கவிட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றனர். மக்களின் வரிப் பணத்திலேயே இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. இந்த அநியாயமான நடவடிக்கையை முறியடித் துள்ளோம். இம்முறை 9 மில்லியன் அபி விருத்திக்கு செலவிட வகை செய்யப்பட் டுள்ளது. 38 சதவீதம் அபிவிருத்தி பணிக் கென செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த மாநகர சபை நிர்வாகம் 3 சதவீத மே அபிவிருத்திப் பணிக்கு செலவிட்டது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டவிரும்பு கின்றேன். பட்ஜட் ஒத்திவைப்பில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. எதிர்வரும் 31 ஆம் திகதி திட்டமிட்டபடி பட்ஜட் நிறைவேற்றப்படும் என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகின்றேன் என்றார்.

மாநகர சபைக் குழுக்கூட்டம் இடம்பெற்ற போது அதில் பங்கேற்றவர்கள் யாருமே பட்ஜட் தொடர்பில் எதிர்க்கவில்லை. கூட்டத்துக்கு 7 பேர் சமூகமளித்திருந்தனர். உறுப்பினர் மருதமுனை அமீர் கூட்டத்துக்கு வரமுடியாமை பற்றி ஏற்கனவே எனக்கு அறிவித்திருந்தார். 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

உறுப்பினர்களின் கோரிக்கைக்கிணங்கவே பட்ஜட்டை ஒத்திவைத்தோம். எனினும் மாநகர சபை உறுப்பினர்களில் சிலர் பட்ஜட் முன்மொழிவுகளை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஊடகங்களி லேயே கண்ணுற்றேன் என்றார்.

இதேவேளை பிரதி மேயர் சிராஸ் மீரா சாஹிபிடம் இது தொடர்பில் கேட்டபோது:

பட்ஜட் ஒத்திவைப்பு ஒரு மிலேச்சத்தனமான செயல். எந்த வித முன்னறிவிதலுமின்றி திடீரென அதனை ஒத்திவைத்து எம்மை ஆத்திரமூட்டியுள்ளனர். உதவி மேயரான என்னிடம்கூட இதுவரை மேயர் இது தொடர்பில் எந்த விடயங்களையும் பேசவில்லை. என்னை மிகவும் மோசமான முறையில் அவமானப்படுத்தியுள்ளார். பிரதி மேயரான எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஒரு மேசையும் இரண்டு கதிரைகளையும் தவிர வேறு எதுவுமே இல்லை. கல்முனையில் எனக்கெதிராக சிலர் செயற்பட்டு என்னைத் தாக்க முற்பட்டனர். பிரதேசவாதத்தைக் கக்கினர். நான் பொலிசாரின் உதவியுடன் வீடு செல்ல நேர்ந்தது என்றார்.

இது இவ்வாறிருக்க கல்முனை மாநகர சபையில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவில் தற்போது தங்கியுள்ள கட்சியின் தலைவர் ஹக்கீம் மு. கா. செயலாளர் நாயகத்துடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். தலைவரின் பணிப்பையடுத்து மு. கா. செயலாளர் நாயகம் எம். ரி. ஹஸனலி எம்.பி., கல்முனை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மு. கா. உறுப்பினர்களுக்கு பதிவுத் தபால் மூலம் தனது கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

‘பட்ஜட் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் அறிவுறுத்தல்கள்’ என்ற தலைப்பிலான இந்தக் கடிதத்தில் கல்முனை மாநகர பட்ஜட் கூட்டத்தில் மு. கா. உறுப்பினர்கள் கட்டாயமாகப் பங்கேற்பதோடு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டியுள்ளார். தேசியத் தலைவர் ஹக்கீமினால் இந்த அறிவுறுத்தல்களை வழங்கத் தாம் பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஹஸனலி, சமூகமளிக்காதவர்களும் வாக்களிக்கத் தவறியவர்களும் கட்சியின் ஒழுக்கத்தை மீறியவர்களாகவும் கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்தவர் களாகவும் கருதப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கையையும் சட்ட நடவடிக் கையையும் எதிர்நோக்க வேண்டிவரும் என்று அழுத்தமான தொனியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இவ்வாறான கடிதம் ஒன்று தமக்குக் கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்திய மு. கா. அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர் பிர்தெளஸ் இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்ததாவது:

நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்த்தே வாக்களிப்போம். இதில் எந்த மாற்றமுமில்லை. கட்சிக் கட்டுப்பாட்டை மீறக்கூடாது என்ற தார்மீகக் கடமை ஒருபுறமிருக்க மேயரின் தன்னிச்சையான போக்கு, பழிவாங்கும் நடவடிக்கை, உதவி மேயர் சிராஷை நடத்தும் விதம் எங்களுக்கு அதிக கவலையை அளித் துள்ளது.

அதிருப்தியாளர் குழுவில் மு. கா. வைச் சேர்ந்த நால்வருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப் பினர்களும் கைகோர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதி கல்முனை பட்ஜட் விவகாரம் அரசியல் வட்டாரங்களில் ஒரு பேசுபொருளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.(thin)

Web Design by Srilanka Muslims Web Team