T20: பங்களாதேஷிற்கு எதிராக நியூசிலாந்திற்கு வெற்றி - Sri Lanka Muslim

T20: பங்களாதேஷிற்கு எதிராக நியூசிலாந்திற்கு வெற்றி

Contributors

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரி-ருவென்டி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

ஷேரே பங்களா மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்ளைக் குவித்தது.

முதலாவது விக்கெட்டுக்காக 7.1 ஓவர்களில் 73 ஓட்டங்களைக் குவித்த அவ்வணி, தொடர்ந்தும் ஓட்டங்களைக் குவித்திருந்தது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக கொலின் முன்ரோ 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும், அன்ரன் டேவ்சிச் 31 பந்துகளில் 59 ஓட்டங்களையும், றொஸ் ரெய்லர் 25 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக அல் அமின் ஹொசைன் 2 விக்கெட்டுக்களையும், சொஹக் கஸி, அப்துர் ரஸாக், ஷியவூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

205 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

மோசமான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்ட பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 19 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால் 4ஆவது விக்கெட்டுக்காக 43 ஓட்டங்கள் பகிரப்பட்டன. அதன் பின்னர் அவ்வணி 6 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. எனினும் இறுதி நேரத்தில் அவ்வணியின் வீரர்கள் அதிரடியாக ஆடியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிக்கூர் ரஹீம் 29 பந்துகளில் 50 ஓட்டங்களையும், மகமதுல்லா 25 பந்துகளில் 34 ஓட்டங்களையும், நசீர் ஹொசைன் 20 பந்துகளில் 28 ஓட்டங்களையும், சொஹக் கஸி 15 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சௌதி 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும்,கொரே அன்டர்சன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மிற்சல் மக்லநகன், கைல் மில்ஸ், நேதன் மக்கலம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக கொலின் முன்ரோ தெரிவானார்.

Web Design by Srilanka Muslims Web Team