கருணாநிதியின் திட்டங்கள் உண்மையில் பயன்தந்ததா? » Sri Lanka Muslim

கருணாநிதியின் திட்டங்கள் உண்மையில் பயன்தந்ததா?

_102897226_6a8148e9-76fb-4d85-b7b1-bae88526ca41

Contributors
author image

BBC


உங்களிடம் உள்ள சமூக நீதி தொடர்பான பிரக்ஞை அடுத்த தலைமுறை திமுகவினரிடமும் இருக்கிறதா என்ற கேள்விக்கு கருணாநிதி இவ்வாறாக பதில் அளித்தார், “இன்றைக்கு ஊற்றப்படுகின்ற தண்ணீரும், தொடர்ந்து இடப்படுகின்ற உரமும் எதிர்காலத்தில் நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

அந்த நம்பிக்கையை பொய்க்கவிட மாட்டோம் என்கிறார்கள் திராவிட சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்ட ஜென் z இளைஞர்கள்.

தமிழக சமூக அரசியலை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும் தேர்தல் அரசியலையெல்லாம் தாண்டி கடந்த ஒரு தசாப்தமாக எப்போதும் இல்லாத அளவுக்கு ஓராண்டாக திராவிட சித்தாந்தம், சமூக நீதி குறித்தெல்லாம் அதிகம் உரையாடப்படுகிறது. அது தொடர்பான கூட்டங்களும், பயிற்சி பட்டறைகளும் அதிகளவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சமூக ஊடகத்திலும் இது குறித்த காத்திரமான உரையாடல்களை இளைஞர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

தத்துவநோக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அணுகுபவர்களிடம், அவரின் சமூக பங்களிப்பு பற்றி பேசினோம். அவர்கள் அனைவரும் கருணாநிதியை நேசிக்க காரணமாக சொல்வது, அவரின் மக்கள் நலத் திட்டங்களில் இயல்பாக இருந்த சமூக நீதி கொள்கைகளைதான்.

‘சமூக நீதிக் கொள்கை’

மென்பொறியாளர் ஜெயன் நாதன், “கருணாநிதி கொண்டுவந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு மேற்படிப்பு இலவசம் என்பது மேம்போக்காகப் பார்த்தால், ஏதோ அரசு நலத் திட்டமாக தெரியலாம். ஆனால், அதற்குள் ஆழமாக சமூக நீதி கொள்கை இருக்கிறது. சமூக நீதியின் மீது பிடிப்பு கொண்டவரால்தான் இப்படியாக யோசித்திருக்க முடியும்.” என்கிறார்.

ஜெயன் நாதன் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும், பயிற்சி பட்டறைகளிலும் திராவிடம் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து வருபவர்.

சிங்கப்பூரில் இப்போது வசிக்கும் தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் ராஜராஜனும் இது போன்ற கருத்தைதான் முன்வைக்கிறார்.

அவர், “நான் பள்ளி பயிலும் போது நான் பயணிக்க இலவச பஸ் பாஸ் தந்தவர் கருணாநிதி. இதை மேம்போக்காக பார்த்தால் சாதாரணமாக தெரியலாம். ஆனால், தொலை கிராமங்களில் இருந்து புறப்பட்டு வந்த இளைஞர்களிடம் பேசி பாருங்கள். பொது புத்தியில் சாதாரணமாக தெரியும் ஒரு விஷயம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்றும், தங்கள் வாழ்வை எப்படி மாற்றியது என்றும் விளக்குவார்கள்” என்கிறார்.

தனியுடமை உச்சத்தில் இருக்கும் காலக்கட்டத்தில் பெண்களுக்கான சொத்து உரிமையை உறுதிபடுத்தியதை கருணாநிதியின் முக்கியமான நகர்வாக பார்ப்பதாக கூறுகிறார் ராஜராஜன்.

‘வெளியே பயணித்து பாருங்கள்’

மருத்துவரான யாழினி, “தமிழகத்திற்கு வெளியே கொஞ்சம் பயணித்து பாருங்கள் கலைஞர் நமக்கெல்லாம் என்ன செய்தார் என்று தெரியும். மற்ற மாநிலங்களைவிட நாம் எந்தளவுக்கு முற்போக்காக இருக்கிறோம் என்று புரியும்” என்கிறார்.

கருணாநிதி

“நான் மருத்துவர் என் துறையிலிருந்து அவரை அணுகும் போது ஒன்று தெளிவாக புரிகிறது, அவர் வகுத்த சுகாதார கொள்கைகள் நிச்சயம் வாக்கு அரசியலுக்கானது அல்ல. மக்கள் மீதும் அக்கறையும், கொள்கை பிடிப்பும் உள்ள ஒருவரால்தான் இதனை சாத்தியப்படுத்த முடியும். பத்து கி.மீ-க்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமங்கள் தோறும் துணை சுகாதார நிலையம், பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் என இப்படியான உள்கட்டமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. இதனை உருவாக்கியதில் கலைஞரின் பங்கு மகத்தானது” என்று விவரிக்கிறார் யாழினி.

‘உலகமயமாக்கல்`

அதே நேரம் கருணாநிதியின் ஆட்சி எந்த தவறும் நேராத உன்னத ஆட்சி இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் அவர்கள்.

“எந்த பிழையும் இல்லாத அரசு என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அதற்கு கலைஞரின் ஆட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால், அவரது கொள்கை கொள்கை முடிவுகளை, திட்டங்களை விமர்சிப்பவர்கள். அது எதுமாதிரியான சூழலில் தீட்டப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பதையும் பகுத்து புரிந்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் ஜெயன் நாதன்.

இது குறித்து மேலும் அவர், “உலகமயமாக்கலுக்குப் பின் முன்னுரிமைகளாக நாம் கருதுவது அனைத்தும் மாறியது. உலக சூழல் மாற்றமடைந்தது. இதன் காரணமாக புது புது எதிர்பாராத சிக்கல்கலும் முளைத்தன. இப்படியான சூழலில் ஒருவர் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார், எது மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அந்த வகையில் கருணாநிதி, உலகமயமாக்கலை சரியாக புரிந்து, அணுகி இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.” என்று விவரிக்கிறார் ஜெயன் நாதன்.

‘மீள்வாசிப்பு’

சமூக நீதி குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டுமென்றால், கருணாநிதொயின் மக்கள் நலத் திட்டங்களை மீள்வாசிப்பு செய்ய வேண்டும். அறிவுபுலத்தில் இருப்பவர்கள் இதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என்கிறார் ஜெயன்.

Web Design by The Design Lanka