தென்கிழக்குப் பல்கலைக்கழக VC விவகாரம் ; சிறு பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது » Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழக VC விவகாரம் ; சிறு பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது

oluvil

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக வீசிய சூறாவளி இன்று தென்றலாக மாறியுள்ளது. மகிழ்ச்சி.

பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் மீண்டும் உப வேந்தராக அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள்.

இந்த விடயத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு நாஜிம் அவர்கள் நன்றி தெரிவிக்காவிட்டாலும் பல்கலையின் ஆசிரியர் சங்கத்துக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பவராக நாஜிம் அவர்கள் இருக்க வேண்டும்.

அவர்கள் உங்களுக்கு வெளிப்படையாக எதிரிகளாகத் தெரிந்தாலும் உள்ளார்த்தமாக உங்களை ஆதரிப்பவர்களாகவே இருந்து செயற்பட்டுள்ளனர் என்பது நீங்கள் மீண்டும் நீங்கள் உப வேந்தராக நியமிக்கப்பட்டதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஏனெனில், கொடிய பாம்புகள் விஷம் கொண்டனவாக இருந்தாலும். அந்த விஷமே நமது சில நோய்களுக்கு மருந்தாகிறது அல்லவா? நன்றி சொல்லத்தானே வேண்டும்? இந்த விடயத்தில் நாஜிம் அவர்கள் நன்றி மறந்தவராக மாறி விடக் கூடாது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தேர்தலில் உங்களுக்கு 13 வாக்குகள் கிடைத்து முதலிடத்தை நீங்கள் பெற்றமையும் நீங்கள் மீண்டும் உபவேந்தராக தெரிவு செய்வதற்கான பிரதான காரணமாக காணப்பட்டாலும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் உங்களுக்கு எதிராக அண்மையில் வெளியிட்ட கருத்துகள், இது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பி கடிதமும் உங்களை மீண்டும் உபவேந்தராகத் தெரிவு செய்ய வேண்டும் என்பதற்கான விசேட காரணமாக, அமைந்து விட்டது என்பதனையும் நன்றியோடு நீங்கள் நினைவு கூர வேண்டும்.

மேலும், ‘சிறு பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்பது போல் ஆசிரியர் சங்கத்தின் கடிதம் அமைந்திருந்தது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்ட விடயங்கள் ஆசிரியர் சங்கத்தில் அங்கம் பெறுவோர் சிலரின் அறியாமை, பாமரத்தன்மையை வெளிக்காட்டி நின்றது.

உப வேந்தர் ஒருவரைத் தெரிவு செய்யும் விடயத்தில் உள்ள நடைமுறைகள் தொடர்பில் அவர்கள் அறிந்திருந்தும் எதனையும் அறியாதவர்கள் போல் செயற்பட்டுள்ளனர். தாங்கள் சொல்வதனையும் தங்களது தீர்மானங்களையும் கடைப்பிடித்தே உபவேந்தர் தெரிவை மேற்கொள்ள வேண்டுமென்ற என்ற கருத்துப்பட்ட அந்தக் கடிதத்தின் ஊடாக அவர்களது வடிகட்டிய முட்டாள்தனத்தை ஜனாதிபதி முதல் அனைத்துத் தரப்பினர் புரிந்து, உறைப்பேறி மீண்டும் நீங்களே உப வேந்தராகத் தெரிவு செய்வதற்கான விசேட காரணமாக அந்தக் கடிதம் அமைந்து விடலாம் என நான் ஏலவே நம்பியிருந்தேன்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில் உறுப்புரிமை பெற்றுள்ள அனைவரையும் நான் இங்கு குற்றம் சொல்லவில்லை. அவர்களில் பலர் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கடிதத்தில் நாஜிமை ஆதரித்து கையொப்பம் இட்டவர்களில் தற்காலிக உதவி விரிவுரையாளர்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது உண்மைக்குப் புறம்பானது. ஜனாதிபதி உட்பட அனைவரையும் தவறாக வழிநடத்த முயற்சிக்கப்பட்ட இந்த விடயம் தொடர்பில், அது அப்படியல்ல என்பதனை ஆதாரபூர்வமாகவும் இலகுவாகவும் நிரூபிக்கக் கூடியதான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் உள்ளன.

எனவே, சில விடயங்களை நாங்கள் கையாளும் போது உண்மைக்கு அப்பால் சென்று எவர் மீதும் எவர்கள் மீதும் அநியாயமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. அது அவர்களையே திருப்பி அடித்து விடும். இதுவே இங்கும் நடந்துள்ளது என்பதற்காக சாட்சியங்களை எனது மேசை மீதுள்ள சில கோவைகள் காட்டி நிற்கின்றன.

சரி நடந்தவைகள் நடந்தவைகளாக, மறந்தவைகளாக இருக்கட்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சமூகத்தின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இனி எமது நோக்கமாக இருக்க வேண்டும்.

எமக்குள் ஏற்படக் கூடிய முரண்பாடுகள், பிரச்சினைகள் எம்மைப் பெரிதாகப் பாதிக்கப் போவதில்லை எம்மிடம் கல்வி பயிலும் முழு மாணவர் சமூகத்தின் கல்வி நடவடிக்கைகளையே அவவை புற்று நோய் போன்று பாதித்து விடும்.

எனவே, நாம் அனைவரும் நமது மாணவர்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களின் எதிர்கால மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்படுவோமாக!

Web Design by The Design Lanka