ஒரு இலட்சம் மூலிகை செடிகளை விநியோகிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை » Sri Lanka Muslim

ஒரு இலட்சம் மூலிகை செடிகளை விநியோகிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இலங்கை ஆயுர்வேத ஔடதக் கூட்டுத்தாபனமும் இலங்கை இராணுவமும் இணைந்து ஏற்பாடு செய்த ஒரு இலட்சம் மூலிகை செடிகளை விநியோகிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை…. 2018.08.09 (விகாரமகாதேவி பூங்கா)

ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையின் கீழ் இலங்கை இராணுவத்தினருடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு இலட்சம் மூலிகைச் செடிகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளக்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நிகழ்வை நான் ஒரு மறுமலர்ச்சியாகவே கருதுகிறேன். இந்த மறுமலர்ச்சி யாருக்காக? இது தேசத்தின் எதிர்காலத்திற்கான மறுமலர்ச்சி. இந்த மறுமலர்ச்சியை ஒருவரால் உருவாக்க முடியாது. இன்று உலக நாடுகளால் பெரிதும் பேசப்படும் பேண்தகு அபிவிருத்தியின் மற்றுமொரு முக்கிய துறையாகவே மூலிகைச் செடி வளர்ப்பு கருதப்படுகிறது. இலங்கையின் வன அடர்த்தி 28 – 29 சதவீதமாகும். வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்குடன் மரக் கன்றுகளை நடும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இரண்டு வருடங்களுக்கு முன்பே அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஆயுர்வேத, சிங்கள மருத்துவ முறைகள் உள்ளிட்ட சுதேச மருத்துவ துறைகள் பிரதிபலிக்கும் வகையிலான செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அன்றைய அரசர்களின் காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்திற்கு பாரிய மதிப்பளிக்கப்பட்டிருந்தது. எமது வரலாறு ஆயுர்வேதத் மருத்துவத்துடனேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்திற்காக பயன்படுத்தும் செடிகளின் சாறு மற்றும் ஏனைய பகுதிகளை கொண்டே மேல் நாட்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதை நீங்களும் அறிவீர்கள். இவ்வாறான மூலிகைச் செடிகளை வளர்த்தல் காலத்தின் தேவையாகும். 28 – 29 சதவீதமாக காணப்படும் வன அடர்த்தியை எதிர்வரும் 03 வருடங்களுக்குள் 32 சதவீதமாக அதிகரிப்பதற்கு எண்ணியுள்ளோம்.

தற்போது காணப்படும் 20 வீதமான காடுகளுக்கு என்ன நேர்கின்றது? வருடந்தோறும் 1.4 மற்றும் 1.5 சதவீதமான காடுகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு காடுகள் அழிந்துவிட்டால் இன்னும் 10 வருடங்களில் எமது வன அடரத்தி 19 சதவீதமாகிவிடும். நாம் பாலைவனத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூலிகைச் செடிகள் போலவே ஏனைய மரக்கன்றுகளை நடுவதும் அவசியமாகும். முப்படைகள் தேசத்தின் மறுமலர்ச்சிக்காக செயலாற்றுகின்றனர். தீவிரவாதத்தை அழித்து மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்த முப்படையினருக்கு தேசத்தின் நன்மதிப்பு உரித்தாகட்டும். ஆனால் தற்போது எமது நாட்டின் எதிர்காலத்திற்காக இரண்டு யுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. முதலாவது போதைப்பொருளை ஒழிப்பதாகும். போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கமும் மக்களும் இணைந்து செயற்படாவிட்டால் நாடு இருண்ட யுகத்தை நோக்கிப் பயணிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் சகல மதத் தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.

எமது அயல் நாடொன்றில் அந்நாட்டு மக்கள் தொகையின் 50 சதவீனமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. அவ்வாறான நாடுகளால் அந்நிலையிலிருந்து மீண்டுவருவது சாத்தியமான ஒரு விடயமல்ல. எமது நாடு பௌத்த நாடாக இருந்தாலும் ஏனைய மதங்களையும் சுதந்திரமாக பின்பற்ற முடியும். இலங்கையின் சூழல், சமூக கட்டுப்பாடு, பொருளாதாரம், ஒழுக்கப் பண்பாடுகள், பண்பு கலாசாரம் ஆகியவற்றை அழிக்கும் நோக்குடன் போதைப்பொருளை இலவசமாக வழங்குகின்றார்களா என்ற சந்தேகமும் எழும்புகிறது. பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே சென்று அதிக நச்சுத்தன்மையுள்ள போதைப்பொருட்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தும் திறன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இல்லை. அதனாலேயே போதைப்பொருள் ஒழிப்பை யுத்தம் என்று குறிப்பிட்டேன்.

மரக் கன்றுகளை நடுகை செய்வதை ஒரு போர் நடவடிக்கையாக கருதி முன்னெடுக்க வேண்டும். காலநிலை மாற்றத்தினால் நாம் முகங்கொடுக்க நேர்ந்துள்ள அசௌரியங்களை நீங்கள் அறிவீர்கள். தென்னிந்தியாவின் ஓர் பகுதி பாலைவனமாகவே மாறிவிட்டது. பாகிஸ்தானில் கராச்சி பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அது பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது. இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தின் மூன்றில் இரண்டு வீதமான பிரதேசங்களில் வரட்சி நிலவுகின்றது. நேற்றைய தினம் அமைச்சர் ராஜிதவுடன் களுத்துறைக்கு சென்றிருந்தேன். அங்கு சென்ற சில மணிநேரங்களில் மழை பொழியத் தொடங்கிவிட்டது. களுத்துறை, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்கள் விரைவில் வெள்ள அனர்த்தத்தை எதிர்நோக்கும் அபாயம் அதிகமாகவே
உள்ளது. இவ்வகையான பிரச்சினைகளுக்கு உலக தலைவர்கள் அனைவரும் முகங்கொடுத்துள்ளனர். பேண்தகு அபிவிருத்தியின் முக்கியத்துவம் வறுமையிலிருந்து விடுபடுவது, உணவு உற்பத்தி, இலவச மருத்துவம், இலவசக் கல்வியுடனான சமூக அபிவிருத்தி என்பவையாகும். சுற்றாடலை பாதுகாப்பதற்கு மேற்குறிப்பிட்ட அனைத்து துறைகளும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. அரசியல் அரங்கில் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஒரு சில தவறுகள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அவை என்னாலோ தற்போதைய அரசாங்கத்தாலோ ஏற்பட்டவையல்ல. தேசத்தின் மறுமலர்ச்சியை உருவாக்கும் முயற்சிகள் பராக்கிரமபாகு மன்னரின் காலகட்டத்தில் இருந்தே பேசப்பட்டு வருகின்றன. பொருளாதார அபிவிருத்தி, புத்தாயிரமாம் ஆண்டு வளர்ச்சி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் முன்நோக்கி கொண்டு செல்வது எமது இலக்காக இருக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடுகள் தற்போதைய வளர்ச்சியை கடந்து அதிநவீன வளர்ச்சியுடன் கூடிய எதிர்காலத்தை நோக்கி பயணித்தாலும் 1000 வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அனுராதபுர, பொலன்னறுவை காலகட்டத்தின் வளர்ச்சிக்கு அது நிகராகாது.

மேற்குலக நாடுகளினதும் அபிவிருத்தியடைந்த நாடுகளினதும் அதிநவீன தொழில்நுட்ப யுகத்தில் உள்ள நாடுகளினது இலக்கும் எமது இலக்கும் வேறு வேறானது. நாம் எவ்வாறு அந்த நிலையை அடைய முடியுமென கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது தொழில்நுட்பத்தையும் அறிவையும் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மேற்குலக அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆயிரம் வருடங்கள் பழைமையான கீர்த்திமிக்க வரலாற்றினை கொண்டிருந்த சிரேஷ்ட நாடு என்ற வகையில் மீண்டும் நாம் எவ்வாறு அந்த நாமத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என சிந்திக்க வேண்டும். எம்மிடமுள்ள சோம்பல், தவறுகள், ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம், நேர்மையற்ற தன்மை, அர்ப்பணிப்பின்மை போன்ற குணங்களை இல்லாதொழிக்க வேண்டும். அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் தனியார்துறையினரும் வர்த்தக துறையினரும் சாதாரண பொதுமக்களும் யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எமது குறைபாடுகள், பலவீனங்கள் என்ன? எமது சவால்கள் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தில் முக்கிய அம்சமாக இலங்கை ஆயுர்வேத ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் காணப்படுகின்றது. கௌரவ அமைச்சர், கூட்டுத்தாபன தலைவர் உள்ளிட்ட அமைச்சிள் ஆளனியினருக்கும் இவ்வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கும் இராணுவத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். எமக்கு எத்தகைய சவால்களை எதிர்நோக்க நேரிடினும் எத்தனை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும். கூட்டுத்தாபன தலைவரின் உரையில் குறிப்பிடப்பட்டதைபோன்று நேற்று இடம்பெற்ற புகையிரத வேலை நிறுத்தத்தினால் பரீட்சை முடிவடைந்து வீடுகளுக்கு செல்லும் பிள்ளைகள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்? மனிதாபிமானத்தின் உண்மையான தன்மை இதுவா? அடிக்கடி வேலைநிறுத்தங்களில் ஈடுபடும் புகையிரத பணியாளர்கள், மருத்துவர்கள், யாரேனும் எமது செயற்பாட்டால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமென எண்ணுவார்களாயின் அது அர்த்தமற்றதாகும். இவற்றால் அப்பாவி ஏழை மக்களே பாதிக்கப்படுகின்றனர். தயவு செய்து மருத்துவர்கள் நோயாளிகளின் உரிமைகளுக்காக போராடுங்கள். நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் காணப்படவில்லையாயின் போராடுங்கள். பொதுமான மருந்துகள் இல்லையாயின், மருத்துவ உபகரணங்கள் இல்லையாயின் போராடலாம். இலவச சுகாதார சேவையை பலப்படுத்த அரசாங்கத்தில் குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றை சுட்டிக்காட்ட பணி பகிஸ்கரிப்பு செய்யுங்கள். அரச மருத்துவமனைகளுக்கு செல்வந்தர்கள் வருவதில்லை. அதேபோன்று செல்வந்தர்கள் புகையிரதத்தில் செல்வதில்லை. சாதாரண பொதுமக்களே செல்கின்றனர். நானும் தொடர்ச்சியாக பல வருடங்கள் கொழும்பில் இருந்து கம்பஹாவிற்கு புகையிரதத்தில் சென்றவன் என்ற வகையில் புகையிரதத்தில் வரும் பயணிகள், பாடசாலை மாணவர்கள் சிலரிடம் புகையிரத பருவச்சீட்டு மட்டுமே காணப்படும். அவர்களிடம் பணம் காணப்படுவதில்லை.

தாகம் எடுக்கையில் தெருவோரத்திலுள்ள அல்லது புகையிரத நிலையத்தில் உள்ள நீர்க்குழாய்களிலேயே நீர் அருந்துகின்றனர். குடிநீர் போத்தல்களை வாங்குவதற்குக்கூட அவர்களிடம் பணம் இருப்பதில்லை. ஆயினும் இவ்வனைத்தும் வேலைநிறுத்தங்களில் ஈடுபடுபவர்கள் தமது மனசாட்சியை கேட்க வேண்டிய கேள்விகள் அல்லவா? நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த இத்தகைய செயல்களால் முடியுமா? என நான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். பிரச்சினைகளை தீர்க்கவே அரசாங்கம் காணப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் என்ற வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. சைட்டம் பிரச்சினையுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நாம் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என பலர் எதிர்பார்த்தனர். சைட்டம் பிரச்சினையின்போது பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு பாதைகளில் போராட்டம் செய்து வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த போதெல்லாம் காலையிலேயே நான் பொலிஸ்மா அதிபருக்கு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென ஆலோசனை வழங்கினேன். அந்த மாணவர்கள் மீது ஆயுதங்களை பிரயோகிக்கக்கூடாது. ஏனெனில் அவர்களை ஏதோவொரு குழுவினரே வழிப்படுத்துகின்றனர். அதனால் அவர்கள் கூச்சலிட்டுவிட்டு கலைந்து செல்லட்டும் என நான் கூறினேன். அவை மாணவர்களது போராட்டமல்ல. அவர்கள் அரசியல்வாதிகளின் அம்புகள் மாத்திரமே. இதனால் அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தக்கூடாதென நான் கூறினேன். நாம் மூன்று வருடங்களாக இந்த சவால்களை எதிர்கொண்டோம். கொழும்பு மக்களும் சாரதிகளும் எம்மை தூற்றினார்கள். நாம் அந்த பிரச்சினைக்கும் தீர்வு கண்டோம். தொழில் உரிமைகள் காணப்படுகின்றன. அரசாங்கம் என்ற வகையில் அது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம். அவர்களது கருத்துக்களை செவிமடுக்கின்றோம். நாம் ஜனநாயகத்தை உறுதி செய்துள்ளோம். இலவசம் என்பதன் கருத்தை சிலர் மறந்துவிட்டார்கள்.

ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் காணப்படுகின்றன. நாட்டின் ஜனாதிபதியையே அசாதாரண வார்த்தைகளால் வர்ணித்து உருவங்களை விகாரம் செய்பவர்களுக்கும் அந்த சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று எனக்கு சமூக வலைத்தளங்களில் செய்யும் விடயங்களை அன்று செய்திருந்தால் அந்த மக்களை மீண்டும் காணவே முடியாது. அவர்களது இருப்பிடத்தையும் கண்டறிய முடியாது. இன்று அந்த நிலை மாறியுள்ளது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அவற்றை புரிந்துகொள்ள வேண்டும். அதனால் நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த சகல துறைகளிலும் சகலரும் அர்ப்பணிப்பு, நேர்மையுடன் செயற்படுதல் அவசியமாகும். சில அரசியல்வாதிகளின் நேர்மை தொடர்பில் பிரச்சினை இருக்கின்றது. சகலரும் அவ்வாறில்லை. அதேபோல சகல அரச ஊழியர்களும் மோசமானவர்களல்ல, பெரும்பாலும் நல்லவர்களே. ஒரு சிலரே அனைவரினதும் பெருமையையும் இல்லாது செய்கின்றனர்.

இங்கு மறுமலர்ச்சி என்ற சொற்பதத்தை கண்ணுற்றதாலேயே நான் இவற்றை எல்லாம் கூறினேன். ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணி தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். பொலிசார், முப்படையினர், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்த இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்த போதைப்பொருட்களை இல்லாதொழிக்க ஒன்றிணையுங்கள். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியைப் போல என்னால் செய்ய முடியாது. ஆயினும் அவற்றை சட்ட ரீதியாக மேற்கொள்ள நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். நேற்றும் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை உரிய பிரிவினருடன் நான் மேற்கொண்டேன். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பில் மூன்று வகையான அறிக்கைகள் தேவையென நான் அறிவித்துள்ளேன். சட்டமா அதிபரின் அறிக்கை, நீதி அமைச்சரின் அறிக்கை, உரிய தண்டனையை விதித்த நீதிபதியின் அறிக்கை ஆகியனவே அவையாகும். மறுமலர்ச்சியை ஏற்படுத்த இவ்வனைத்து விடயங்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். எமது அண்டை நாடான இந்தியாவிலும் வருடத்திற்கு இரண்டு மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. அமெரிக்காவிலும் இந்த தண்டனை காணப்படுகின்றது. மறுமலர்ச்சியை ஏற்படுத்த இவற்றை செயற்படுத்த வேண்டியுள்ளதென கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.08.09

Web Design by The Design Lanka