பிறையினில் பிளவினைத் தராதே இறைவா » Sri Lanka Muslim

பிறையினில் பிளவினைத் தராதே இறைவா

moon6

Contributors
author image

கலைமகன் பைரூஸ்

பண்ணவ னருள்சுமந் ததிரு நாட்கள்
புண்ணியம் பலபெற பிடித்தோம் நோன்பு
எண்ணி மனம்மகிழ்ந் தின்று பெருநாள்
எடுத்தோம் எல்லோ ருடனும் இணைந்தோம்!

பண்ணிய பவங்கட்கு கதறியே யழுதோம்
புத்தொளி கிடைத்திட பாங்காய்த் தொழுதோம்
எண்ணியே மனம்மகிழ்ந் தோமின்று உறவினர்
எலோரதும் இல்லமும் சென்று வருவோம்!

தஹஜ்ஜத் தராவீஹ் தஸ்பீஹ் தொழுதோம்
தயாளன் அருள்பெற வீந்தோம் ஸக்காத்
முஹத்துதி யிலாமல் எல்லாம் அல்லாஹ்
முகம்பார்க்க வேவம்மை நல்லன செய்தோம்!

ஏழைகட்கு முடியுமாப் போலே ஸதகா
ஏற்றம் பெற நாமீந்தோம் புனித மாதம்
ஏழைகளின் பசிப்பிணி அறியவே விரதம்
ஏந்தினோம் ஏந்தினோம் கரங்கள் மேலே!

அல்லல் படுவார் களிகொள்ள துஆவிரந்து
அவர்கள் துன்பத் தினிலே நாமிணைந்து
நல்லனவே நாளும் நாம் செய்தோம்
நாயனே ஏற்றிடு வாயெம் நற்கருமங்கள்!

தலைப்பிறை யெதுவென அறிபவன் நீயே
தலைகள் கனக்கா திருந்தமல் புரிந்திட
மேலும் அருள்புரி மேலவனே அல்லாஹ்
மேலாய் கொண்டு பிடித்தநல் நோன்பேற்று!

இன்றும் மகிழ்ந்தோம் உன்னருள் கண்டு
இறையே பிறையினில் பிளவினைத் தராதே
என்றும் ஒற்றுமைக் கயிற்றினைப் பிடித்திட
ஏற்றம் கொள்ளின்று அருள்புரி அஹதவனே!

 

Web Design by The Design Lanka