176 எம்.பி.க்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பிரதமராக தேர்வானார் இம்ரான் கான் » Sri Lanka Muslim

176 எம்.பி.க்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்

201808171818023448_Imran-Khan-elected-Pakistan-PrimeMinister-with-176-votes_SECVPF

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


பாகிஸ்தானின் பிரதமராக நாளை பதவியேற்க உள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார்.

பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன.

பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.

ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

இதற்கிடையே கடந்த திங்கள் அன்று பாராளுமன்றம் கூடியது. இம்ரான் கான் உள்பட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். கூட்டணி அமைக்கும் வேலைகள் முடிந்த நிலையில், இம்ரான் கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வரும் நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடந்தது.

பாராளுமன்றத்தின் உள்ளே வந்த இம்ரான் கானுக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வாக்கெடுப்பை புறக்கணிக்கப்போவதாக முதலில் அறிவித்தது. இதனை அடுத்து, அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அவரை பாக். முஸ்லிம் லீக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே, பல தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சில பாக். முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் நிலவியது.

ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கான் கூட்டணி வசம் 151 எம்.பி.க்கள் இருந்தனர். ஆட்சியமைப்பதற்கான உரிமை மசோதாவை பிடிஐ கட்சி தாக்கல் செய்தது. 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

பாக். முஸ்லிம் லீக் கட்சிக்கு 96 வாக்குகள் கிடைத்தன. பூட்டோவின் பாக். முஸ்லிம் லீக் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதன் மூலம் அவர் ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான்  பதவியேற்க உள்ளார்.

Web Design by The Design Lanka