மஹிந்தவின் இந்திய விஜயம்- கிரீடம் கிறுகிக் கிடக்குது » Sri Lanka Muslim

மஹிந்தவின் இந்திய விஜயம்- கிரீடம் கிறுகிக் கிடக்குது

IMG_8474

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Basheer Cegu Dawood


சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் புது தில்லி சென்றுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற மஹிந்தவின் புதிய கட்சி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பின்னர் சீன இராஜதந்திரிகள் அவரைச் சந்தித்திருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே இந்தியப் பிரதமர் அவரது இலங்கை விஜயத்தின்போது திடீரென மஹிந்தவைச் சந்தித்தார். இச்சந்திப்பில் மோடி மஹிந்தவை “தில்லிக்கு” வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இவ்விஜயத்தின் போது மோடி, இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் இலங்கைத் தாயகமான மலையகத்துக்கும் உத்தியோக பூர்வமாகச் சென்றிருந்தார். இலங்கை தொடர்பான இந்தியாவின் பல்லாண்டு கால இராஜதந்திரத் “தடத்தை” அந்நாடு மாற்றத் தொடங்கிவிட்டதை மோடியின் இந்தப் புதிய ‘நடத்தை’ நமக்குக் காட்டுகிறது. இந்தியப் பிரதமரின் இவ்விஜயத்தின் போதான நிகழ்ச்சி நிரலில் மஹிந்தவுடனான சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் நேரடி அழைப்பு இருந்த போதும், மஹிந்த நீண்ட காலமாக தில்லி விஜயத்தை மேற்கொள்ளவில்லை. ஆகவே,மோடியினதும் மஹிந்தவினதும் நெருங்கிய நண்பரும் பாரதீய ஜனதாக் கட்சியின் உயர் மட்ட பிரமுகரும்,தீவிர இந்துத்துவா செயற்பாட்டாளருமான சுப்ரமணிய சுவாமிக்கு மஹிந்தவை அழைத்து வரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்கமைய சுவாமி அவரது அமைப்பின் நிகழ்வு ஒன்றுக்கு அழைப்பு விடுத்து தில்லிக்கு மஹிந்தவைக் ‘கூட்டிவரும்’ பொறுப்பைக் கச்சிதமாக நிறைவேற்றியதன் விளைவாக தற்போது மஹிந்த தில்லிச் சுற்றுலாவில் உள்ளார்.

மஹிந்தவை இந்தியாவும் இந்தியாவை மஹிந்தவும் தத்தமது அரசியல் மற்றும் இராஜதந்திர நலன்களுக்காகப் பரஸ்பரம் பாவித்துக்கொள்வது புரிந்துகொள்ளக்கூடியதே.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் மூன்று இந்திய நிறுவனங்கள் தொடர்புபடுகின்றன. அரசு, ஆர்.ஏ.டபிள்யூ என்கிற புலனாய்வுப் பிரிவு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பமைப்பு ஆகிய மூன்று தரப்புகளுமே அவையாகும். விசேடமாக இலங்கையுடன் நட்புப் பேணல், அரசியல் முடிவுகளில் தொடர்பு படல், இராஜதந்திர மார்க்கத்தில் நுழைதல் ஆகியன தொடர்பில் வரலாற்று ரீதியாக மற்றிரு நிறுவனங்களை விடவும் புலனாய்வு அமைப்புத்தான் முக்கிய பாத்திரம் வகித்து வந்துள்ளது. எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும், அணுகுமுறை வடிவங்களையும் இந்தப் புலனாய்வு அமைப்பே அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்து வந்துள்ளது. சுவாமிக்கூடாக மஹிந்தவைக் கையாளும் மோடியின் புதிய அணுகு முறையில் அவரது பீ.ஜே.பி கட்சி ஒரு திட்டமிட்ட பாத்திரத்தை வகிப்பது போல் தெரிகிது. இவ்வாறெனில் இது, இலங்கையையும், மஹிந்தவின் அரசியல் எதிர்காலத்தையும் மிக மோசமான நிலைக்கு இழுத்துச் செல்லும்.

இலங்கையின் பௌத்த தீவிரவாத தரப்புகளுக்கும் இந்தியாவின் இந்துத் தீவிரவாத தரப்புகளுக்கும் இடையில் ஏற்கனவே வளர்ந்து வரும் உறவு நிலை மேலும் பலம் பெற்று “நிலைபேறு” அடையுமானால் இலங்கையின் அமைதி சீர்குலையக்கூடும்.

மஹிந்த பற்றிய அபிப்பிராயம் சிறுபான்மை மக்களுக்குள் பொதுவாகவும் முஸ்லிம்களுக்குள் விசேடமாகவும் சாதகமான மாற்றத்தைக் கண்டு வருகிறது.(குறைந்தளவிலேனும்) இந்து பௌத்த தீவிரவாதிகளின் உறவு என்பது, மஹிந்த மோடி சுப்ரமணிய சுவாமி ஆகிய முத்தரப்பு தலைமைகளின் உறவாக சிறுபான்மையினரால் அடையாளம் காணப்படும் போது அல்லது SLPP , பி ஜே பி கட்சிகளுக்கிடையிலான மறைமுக ஒப்பந்தமாக எண்ணப்படுமானால் மஹிந்தவுக்கு சிறுபான்மையிருக்குள் ஏற்பட்டு வருகிற சிறு அளவிலான ஆனால்; மேலும் வளரக்கூடிய ஆதரவு நிலைப்பாடு தலைகீழாக மாறிவிடும்.

2015 ஆம் ஆண்டைய மாற்றத்தால் சிறுபான்மை இனங்களுக்கு அரசியலில் எவ்வித சாதகமும் ஏற்படவில்லை என்றும் சமூக ரீதியில் அதிக பாதகம் ஏற்பட்டிருப்பதாகவும் இவ்வினங்கள் முடிவெடுத்திருக்கின்றன.

2015 ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இனங்கள் சிங்கள பௌத்த வேட்பாளர்களில் எவரையும் தோற்கடிக்கவும் எவரையும் வெல்லவைக்கவும் முடியும் என்று நிரூபித்தனர். ஆனால் இந்த நிரூபிப்பால் அவர்களுக்கு எவ்வித அனுகூலங்களும் கிடைக்கவில்லை என்பது அநுபவமாக இருக்கிறது. எனவே, தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினர் எந்த சிங்களத் தலைவரையும் இனிமேல் நம்பிப் பயனில்லை என்ற உறுதியான முடிவுக்கு வருவதற்கு வாய்ப்புண்டு. இந்த முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக இந்திய பா.ஜ. கட்சிக்கும் மஹிந்தவுக்கும் இடையில் வளர்ந்து வரும் உறவும் அமையும்.

எனவே, சிறுபான்மையினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்ன முடிவெடுப்பார்கள் என்பது முக்கியமான கேள்வியாகிறது.அப்போது சிறுபான்மைக் கட்சிகள் சில மக்ளுக்குள் அம்பலப்பட்டு மேலும் செல்வாக்கை இழக்கக் கூடும்.தமிழ் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினர் ஒன்றிணைந்து தமக்குள் இருந்து ஒரு ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தி அவருக்கு அதிகமான வாக்குகளை அளித்து சிங்கள வேட்பாளர் எவரும் 50.1% வாக்குகளைப் பெற முடியாது செய்ய முயலவும் கூடும். சிறுபான்மையினர் தமக்குள் இருக்கும் சாதாரண முரண்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு பொது நோக்கத்துக்காக இணைய முடியுமானால் மாத்திரமே சிறுபான்மை சமூகங்கள் தத்தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ள முடியும். இவ்வாறு இலங்கையில் ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முடிந்தால் ஒட்டு மொத்த அரசியலமைப்பு மாற்றம் நடந்தே ஆகவேண்டும். அப்போது அனைத்து இன மக்களுக்குமான நலன்கள் கைகூடும் வாய்ப்புண்டு.

Web Design by The Design Lanka