தேசிய பேண்தகு கருத்தாய்வு தொடர்பான வரைவை மேலும் வளப்படுத்துவது குறித்து கல்விமான்கள் ஆர்வம் » Sri Lanka Muslim

தேசிய பேண்தகு கருத்தாய்வு தொடர்பான வரைவை மேலும் வளப்படுத்துவது குறித்து கல்விமான்கள் ஆர்வம்

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

பேண்தகு தொலைநோக்கு கருத்தாய்வின் ஊடாக அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள கல்விமான்கள், இதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளனர்.

2030ஆம் ஆண்டாகும்போது இலங்கை பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் இலங்கையின் சிந்தனைகளையும் இயலுமைகளையும் எடுத்துக்காட்டி அடுத்துவரும் 12 வருடங்களில் நாட்டின் நீண்டகால பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் நோக்கங்களை தீர்மானிக்கும் திட்டமொன்றை தயாரிப்பதற்கான முயற்சிகள் பேண்தகு கருத்தாய்வின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேண்தகு கருத்தாய்வின் முதலாவது வரைவு அண்மையில் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இவ்வரைவை மேலும் வளப்படுத்துவது குறித்து தொடர்ந்தும் கல்விமான்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல்கள் கடந்த சில நாட்களாக பல்கலைக்கழகங்களை மையப்படுத்தி இடம்பெற்று வருகின்றன.

பல்கலைக்கழக உபவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விமான்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்த கலந்துரையாடல் தொடர் கொழும்பு, களனி, ஊவா, சபரகமுவ, பேராதனை, திறந்த பல்கலைக்கழகம், கட்புல மற்றும் அரங்க கலைகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த அனைத்து கலந்துரையாடல்களிலும் பேண்தகு கருத்தாய்வுக்கான பயனுள்ள பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேண்தகு அபிவிருத்திக்கான ஜனாதிபதி நிபுணர் குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல்களில், பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கும் முதலாவது சந்தரப்பம் இதுவாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட பேராசிரியர்கள் இது வெற்றிகரமானதொரு பயணத்தின் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். பல்வேறு துறைகளின் ஊடாக பேண்தகு தொலைநோக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விதம் குறித்து விரிவான கருத்துக்கள் இந்த கலந்துரையாடல்களில் இடம்பெற்றதுடன், கல்வித்துறை தொடர்பாகவும் பல்வேறு விரிவுரையாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். பேண்தகு கருத்தாய்வின் மூலம் அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்படும் இலக்குகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் பெறுபேறுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இந்த பணித்திட்டம் தொடர்பில் தனியார் துறையினதும் சர்வதேச அமைப்புகளினதும் உதவிகளை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என்றும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பம், சுற்றுலா கைத்தொழில், நீர்ப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள் தொடர்பாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், விவசாயத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது. நாடு என்ற வகையில் அதன் முன்னேற்றத்திற்கு தேசிய பேண்தகு கருத்தாய்வு நிகழ்ச்சித் திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் பேண்தகு அபிவிருத்தி பற்றிய ஜனாதிபதி நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

பேண்தகு தொலைநோக்கு பிரிவினால் நடத்தப்படும் தேசிய பேண்தகு கருத்தாய்வுடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் கலந்துரையாடல் தொடரின் மற்றுமொரு கட்டமாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்துடனான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பேண்தகு தொலைநோக்கு தொடர்பான பேண்தகு கருத்தாய்வில் ஈடுபடுகின்றபோது நாட்டில் உள்ள அடிப்படைத் துறைகளில் கவனம் செலுத்தி அவற்றிற்கு பொருத்தமான வகையில் நாட்டில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தற்போது நாட்டில் நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் அமைக்கப் பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மக்களின் வறுமையை ஒழித்து அவர்களை முன்னேற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டின் வர்த்தக சமூகத்தை வலுவூட்டி முன்னேற்றமான பொருளாதாரத்துடன் சூழல் நட்புடைய சுற்றுச்சூழலை அமைப்பதற்கு பேண்தகு தொலைநோக்கினால் முடியும் என்றும் இதற்காக நாட்டில் இடம்பெறும் வீ்ண்விரயங்கள் குறைந்து பேண்தகு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை பின்பற்ற வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி அலுவகத்தின் கீழ் உள்ள பேண்தகு தொலைநோக்கு பிரிவு எதிர்பார்க்கின்றது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-09-11

Web Design by The Design Lanka