மாமனிதர் அஷ்ரஃபின் அகால மரணம் குறித்து அன்னாரின் அபிமானிகளிடம் 17 வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட உறுதிமொழிகள்! » Sri Lanka Muslim

மாமனிதர் அஷ்ரஃபின் அகால மரணம் குறித்து அன்னாரின் அபிமானிகளிடம் 17 வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட உறுதிமொழிகள்!

MAKKAL VIRUPPAM409

Contributors

ஏ.எல்.ஜுனைதீன்


முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினரால் பெருந்தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முஸ்லிம் மக்களுக்கு அரசியல் முகவரி பெற்றுத்தந்த சரித்திர நாயகன் அன்னார் மறைந்த நாளிலோ அன்றி பிறந்த நாளிலோ மட்டுமன்றி வருடத்தின் எல்லா நாட்களிலும் நினைவுகூரப்படவேண்டியவர்.

அன்னார் அகால மரணமடைந்து நாளை செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி சரியாக 18 ஆண்டுகளாகின்றன. இன்னும் அவருடைய அகால மரணம் பற்றிய மர்மம் சரியாகத் துலக்கப்படவில்லை. மக்களிடையே உள்ள சந்தேகங்கள் விலக்கப்படவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்துவரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மாமனிதர் அஷ்ரஃப் அகால மரணமான ஆரம்பத்தில் ஆவேசமாகப் பேசிவந்தார். தற்போது 18 ஆண்டுகள் கடந்தும் அன்னாரின் மரணம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து மெளனம் சாதித்தே வருகின்றார்.

மர்ஹும் அஷ்ரஃபினால் வளர்க்கப்பட்டவர்கள்.அன்னாரின்மீது நம்பிக்கை கொண்டவர்கள், அவர்மீது விசுவாசம் கொண்டவர்கள், அன்னாரை உண்மையாக நேசிப்பவர்கள், அவருடைய பெயரால் அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் மாமனிதர் அஷ்ரஃபின் மரணத்தின் மர்மத்தை துலக்கவும் சந்தேகங்களை நீக்கவும் உண்மைகளை வெளிக்கொணரவும் பகிரங்கமாக நடவடிக்கை எடுக்க வில்லையே என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மாமனிதர் அஷ்ரஃபின் மரணம் தொடர்பான மர்மம் இன்னும் மக்களுக்கு வெளிப்படுத்தாத நிலையிலேயே அன்னாரின் வாழ்வியல் தடயங்களை வைத்து பலரும் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை மக்கள் கவலையோடு ஆவேசம் தெரிவிக்கின்றனர்.

மாமனிதர் அஷ்ரஃபின் மரணம் தொடர்பாக கடந்த 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்முனை நகர மண்டபத்திற்கு முன்னால் (அமானா வங்கி) இடம்பெற்ற ‘மக்கள் நீதிமன்றத்திற்கு முன் முறையீடு” என்னும் தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிகழ்த்திய உரையை மர்ஹும் அஷ்ரஃபின் விசுவாசிகள் பலரும் இன்றும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அக்கூட்டத்தில் என்ன பேசினார்?
“தலைவர் அஷ்ரஃபின் மரணத்தின் பின்னணியிலே நடந்த பல விடயங்கள் இன்னும் பகிரங்கமாகச் சொல்லப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. அப்படியான பல விடயங்கள் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் நேரில் வந்தும் எங்களிடம் சொல்கிறார்கள். எழுதியும் தருகிறார்கள். கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது ஒரு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மறைந்த தலைவருக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கவேண்டும். மறைந்த தலைவரோடு கடைசி மணித்தியாலங்களில் இருந்த பலர் உள்ளனர். பலவிதமான திடுக்கிடும் தகவல்களை அவர்கள் சொல்லுகிறார்கள்.

விசாரணைக்கு முன்வரும்வரை பொறுமையாக இருந்து இந்த விடயங்களை வெளியிடலாம் என உத்தேசித்திருக்கிறேன்.“ இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட்டத்தில் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசுகையில் 17 வருடங்களுக்கு முன் கூறியிருந்தார்.

அன்னாரின் மரணம் சம்பவித்து பதினெட்டு ஆண்டுகளாகியும் இன்னும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொறுமையாகவே இருக்கின்றார். ஆனாலும் அவருடைய பெயரால் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என ஆரம்ப கால கட்சிப் போராளிகள் பலர் கவலையோடும் கரிசனையோடும் ஆவேசமாகக் கூறுகின்றார்கள்.

இதேவேளை, ஆணைக்குழு நியமித்து விசாரணை நடத்தப்பட்டு அன்னாரின் மரணம் பற்றிய உண்மைகள் வெளிக்கொணரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சியில் இருந்தபோது கடந்த 2000.10.04 ஆம் திகதி சாய்ந்தமருது தாமரை மைதானத்தில் (தற்போது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அமைந்துள்ள இடம்) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு வாக்குறுதி ஒன்றை அளித்திருந்ததையும் மக்கள் நினைவு கூர்ந்து அந்த வாக்குறுதியும் காற்றில் பறந்துவிட்டதே என்று கவலை தெரிவிக்கிறார்கள்.

மாமனிதர் அஷ்ரஃபின் அகால மர்ணம் குறித்து பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் சமூகத்திற்கு அன்று என்ன வாக்குறுதி வழங்கினார்?
“இந்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்த பின் மர்ஹும் அஷ்ரஃபின் அகால மரணம் குறித்து நாங்கள் ஒரு பூரண விசாரணை நடத்துவோம். இதற்கென அமைக்கப்படும் விசாரணைக் குழுவில் மர்ஹும் அஷ்ரஃபின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் நியமிப்போம்.

அமைச்சர் அஷ்ரஃபின் மரணத்தில் சந்தேகம் எழும்போது இம்மரணத்தின் காரணம் என்ன? இதன் பின்னணி என்ன? இவற்றையெல்லாம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நானும் அஷ்ரஃபும் அரசியலில் வேறுபட்டிருந்தாலும் அன்னாரும் நானும் நல்ல நண்பர்கள். குறைந்தபட்சம் ஒரு நண்பர் என்ற முறையிலாவது விசாரணைக்குழுவை நியமித்து உண்மையைக் கண்டறியவேண்டிய கடப்பாடு எனக்குண்டு.

அமைச்சர் அஷ்ரஃபின் மரணம் தொடர்பாக எமது விமானப் படையினர் மீது குற்றத்தை சுமத்திவிட்டு எவரும் விலகிச் சென்றுவிட முடியாது.“ இவ்வாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க 17 1/2 வருடங்களுக்கு முன் உறுதி மொழி ஒன்றை வழங்கியிருந்தார்.

இவர்களின் பேச்சுகளுக்கும் உறுதி மொழிகளுக்கும் என்ன நடந்துவிட்டது? எல்லாம் காற்றில் பறந்துவிட்டனவா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படியான நிலையில், மாமனிதர் அஷ்ரஃபின் மரணம் தொடர்பான மர்மம் இன்னும் மக்களுக்கு சரியான முறையில் வெளிப்படுத்தாத நிலையிலேயே அன்னாரின் வாழ்வியல் தடயங்களை வைத்து பலரும் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை மக்கள் கவலையோடு நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.

மாமனிதர் அஷ்ரஃப் அவர்களின் அரசியல் வாழ்க்கையென்பது வெறும் 10 வருடங்கள்தான் 1989 இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர் 2000 ஆம் ஆண்டு வபாத்தானார் . இந்த காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு பலமான சக்தியாக ஒரு கட்சியின் கீழ் ஒன்று திரட்டியது மட்டுமன்றி பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டதுடன் இளைஞர்,யுவதிகளுக்கு வேலவாய்ப்புக்களையும் ஆச்சிரியப்படும் வகையில் தேடிக்கொடுத்து புரட்சியை ஏற்படுத்தினார்.

ஆனால், அன்னாரின் மரணத்திற்குப் பின்னர் இன்று அன்னாரின் வாழ்வியல் தடயங்களை வைத்து பலரும் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதுடன் வாக்குறுதிகள் வழங்குவதும் அடிக்கல் நடுவதிலுமே காலத்தை கடத்திக்கொண்டிருப்பதாகத் தெரிவித்து மக்கள் ஆவேசம் தெரிவிக்கின்றனர்.

MAKKAL VIRUPPAM409

Web Design by The Design Lanka