நாட்டை நடத்த பணம் இல்லை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை » Sri Lanka Muslim

நாட்டை நடத்த பணம் இல்லை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை

201809151711302987_No-money-to-run-country-says--Pakistan--PM-Imran-Khan_SECVPF

Contributors
author image

Editorial Team

முந்தைய ஆட்சி வைத்து சென்ற கடன் சுமையினால் பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தை நடத்த முடியாத அளவுக்கு கஜானா காலியாக கிடப்பதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல் தனது சொந்த வருமானத்தில் கட்டிய வீட்டில் வாழ்ந்துவரும் இம்ரான் கான், மந்திரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்களை விற்று அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கார்கள், செல்போன் மற்றும் அழகு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் அப்பாசியின் தவறான திட்டங்களாலும் வைத்துச் சென்ற கடன் சுமையாலும் அரசு நிர்வாகத்தை நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இம்ரான் கான், அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நம்மால் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் நகரில் உயரதிகாரிகளிடையே பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் கடன் சுமையில் மூழ்கி கிடப்பதாக தெரிவித்தார். நமது அரசியல்வாதிகள் மாற வேண்டும். அதிகாரிகள் மற்றும் மக்களின் மனப்போக்கும் மாற வேண்டும். மிக இக்கட்டான காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ள நாம் இனியும் மாறாமல் போனால் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

சமீபத்தில் தனக்கு தெரிவிக்கப்பட்ட நாட்டின் நிதி நிலவரம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறிய அவர், வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய் சென்று கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக கூறிய அவர், இவர்கள் எண்ணிக்கை தினந்தோறும் வேலை தேடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. ஆனால், வேலைதான் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

Web Design by The Design Lanka