மனிதன் ஆகிய அஷ்ரஃப் - 18 » Sri Lanka Muslim

மனிதன் ஆகிய அஷ்ரஃப் – 18

MHM 2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Basheer Cegu Dawood


23 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 1998 இல் அஷ்ரஃப் அவர்களுடைய கொழும்பு 7, ஸடென்மோர் கிறஸன்ட் வீதி உத்தியோகபூர்வ இல்லத்தின் மேல் மாடியில் இருந்த அவரது வீட்டு அலுவலகத்துக்குள் சென்றேன். அங்கு கோவைகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடி அலுமாரியில் கிறுக்கல் கையெழுத்தில் ” I am 18 years old today with 32 years experiences ” 32 வருட அனுபவங்களுடன் எனக்கு இன்று 18 வயதாகிறது என்று எழுதியிருந்தது. அன்று அவருக்கு 50 ஆவது பிறந்த நாளாகும்.(இந்த வாசகத்தை முன்னரும் வாசித்தது போல் ஓருணர்வு எனக்கு.)

அஷ்ரஃப் அமைச்சராகிய புதிதில் அம்பாறைக் கரையோரத் தமிழ்பேசும் அரச உயர் அலுவலர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார்.அக்கூட்டத்தில் நானும் பேச அழைக்கப்பட்டிருந்தேன்.

” இலங்கையில் பெரும்பான்மை வாதம் என்பது ஓர் ஒற்றை உணர்வல்ல.இதற்கு மூன்று வெவ்வேறு வடிவங்கள் இருக்கின்றன. முழு இலங்கையிலும் சிங்களவர் பெரும்பான்மையினர். அவர்கள் தமது மையவாதத்தைப் பேணும் அதேநேரம் அதிகாரத்தை தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் மீது ஏவி விடுகின்றனர். வடகிழக்கில் தமிழர் பெரும்பான்மையினராகும், இவர்களின் அரசியல் சக்திகளுக்கும் மையவாத ஆதிக்க உணர்வு உண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் என்பதனால் இங்குள்ள முஸ்லிம் அரசியல் சக்திகளுக்கும் மையவாத ஆதிக்க உணர்வு உண்டு. இவ்வுணர்வுக்கு ஆட்பட்டிருப்பதில் அரசாங்க அதிகாரிகளும் விதிவிலக்கல்ல. இலங்கையில் பெரும்பான்மை வாதமும் இதனால் எழும் மற்ற இனங்கள் மீதான அடக்குமுறைச் செயற்பாடுகளும் ஒழிக்கப்படாமல் இலங்கைக்கு விமோசனம் எப்போதும் கிடைக்கப்போவதில்லை ” என்று சுருக்கமாகப் பேசினேன். இறுதியில் பேச எழுந்த அஷ்ரஃப் எனது பேச்சை வழிமொழிந்து உரையாற்றினார்.அவரின் இவ்வுரையைக் கேட்டபின் அவர்மீதான எனது மதிப்பு மேலும் உயர்ந்தது.

1995 இல் சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் இராணுவத்தால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டது. இந்த வெற்றியைக் கொழும்பில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து பல இடங்களில் கட்சிக்கொடியுடன் தேசியக்கொடியையும் இணைத்து பெருக்கல் அடையாளம் போல் கட்டிக் கொண்டாடினார்.

நான் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து ஒரு வருடமே ஆகியிருந்த அன்று அமைச்சரின் அலுவலகத்துக்குள் நுழைந்து “முஸ்லிம் காங்கிரஸ், தமிழரின் கலாச்சாரத் தலை நகர் பைப்பற்றப்பட்டதைக் கொழும்பில் கொண்டாடுவது நியாயமா? தமிழ் நமதும் தாய் மொழி என்பதனால் யாழ் நகர் நமக்கும் உறவுடைய நகரல்லவா? வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டமை முஸ்லிம்களை வேதனைப்படுத்தியது உண்மைதான் ஆனாலும், சாதாரண தமிழ் மக்களின் அவலத்தை நாம் கொண்டாட முடியாதல்லவா? இரண்டு இராணுவத் தரப்புகள் வெற்றி தோல்விகளைச் சந்திக்கட்டும், அது அத்தரப்புகளின் அநுபவிப்பு ஆகும். நாம் இராணுவக் கட்டமைப்பு இல்லாத சமூகம் என்பதனால் இராணுவ வெற்றிக் கொண்டாட்டத்தை செய்யவேண்டிய தேவை இல்லை அல்லவா?” என்ற கேள்விகளை அஷ்ரஃப் முன்னிலையில் அடுக்கினேன்.நமது கட்சிக்காரர்களின் இந்தப் போக்கைப் பார்த்து “நாகரீகமாக வெட்கப்படுகிறேன்” என்றும், ஒரு கட்சியின் தளம் பலமடைவது என்பது வேறு அது தளம்பலடைவது என்பது வேறு, இப்போது நடந்திருப்பது தளம்பலடைதலாகும் என்றும் கூறினேன்.

எனது உணர்ச்சி வசப்பட்ட முறையீட்டைச் செவிமடுத்த அஷ்ரஃப், மேசையில் ஓங்கி அறைந்தார். இந்தப் புழுகுக் கொண்டாட்டம் எனக்கு அறவே தெரியாது பஷீர் என்று கூறிய அஷ்ரஃப், தனது கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தொலை பேசியில் பேசினார். உடனடியாகக் கொழும்பில் கட்டப்பட்டிருக்கும் கொடிகளை அகற்றுமாறு அவருக்குக் கட்டளையிட்டார். அன்று மதியம் அத்தனை கொடிகளும் அகற்றப்பட்டன. அஷ்ரஃப் மீதான எனது மதிப்பு மென்மேலும் உயர்ந்தது.

இவை போல் எத்தனை கதைகள்தானுண்டு அஷ்ரஃப் பற்றிச் சொல்ல என்னிடம்..

நான் எனும் நீ என்ற அவரது கவிதை நூல் வெளியீட்டில் உரையாற்றும் போது “மனிதனாகிவிட்டால்” மரணமில்லை என்கிறார் அஷ்ரஃப். கற்பிக்கும்,புலமை தரும் மற்றும் தண்டிக்கும் தகுதியுடைய வாழ்வுதனை மேவி மனிதராகிவிட்டால் மரணமில்லை. அஷ்ரஃப் இந்தத் தகுதிக்கு உரித்துடையவராய் இருக்கிறார்.

அஷ்ரஃப் உயிரோடிருந்த போதே தேசிய அரசியலில் இருந்தும் ஏனைய இன மக்களிடமிருந்தும் முஸ்லிம்களைத் ‘துருவமயமாக்குதல்’ தொடங்கிவிட்டது. இதனைத் தலைவர் திடமாக எதிர்கொண்டார். அவரின் அரசியல் திடகாத்திரம்தான் அவரது உயிரையும் பறித்தது.அவர் மரணமடைந்து ஒன்பது ஆண்டுகளின் பின்னர் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இதன் பின்பு இலங்கை அரசியலில் இருந்தும், ஏனைய இரு இன மக்களிடமிருந்தும் முஸ்லிம்களை ‘அருவமயப்படுத்தும்’ நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு அது வெற்றிக் கம்பத்தை நெருங்கிவிட்டது. இச்சூழலில் இன்றைய முஸ்லிம் தலைவர்கள் முதுகெலும்பைப் பறிகொடுத்து முழங்கால் பலத்தில் தாழிட்டு நிற்கிறார்கள்.

Web Design by The Design Lanka