மாகாணசபைத் தேர்தல் மாற்றுத் தீர்வு » Sri Lanka Muslim

மாகாணசபைத் தேர்தல் மாற்றுத் தீர்வு

votes

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

புதிய மாகாணசபைத் தேர்தல் ஏன் முஸ்லிம்களுக்குப்ஐ பாதகமானது- பாகம் 5
============================
வை எல் எஸ் ஹமீட்


எல்லைநிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டு மீளாய்வுக்குழுவும் நியமிக்கப்பட்டு எதிர்வரும் 21ம் திகதி கூடவிருக்கின்றது. எத்தனை மீளாய்வுக்குழு அமைத்தாலும் முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கேற்ப தொகுதிகளை உருவாக்கவே முடியாது; என்பது ஒருபுறம். அடுத்த 50% ஐப் பொறுத்தவரை கிழக்கிற்கு வெளியே ஆசனங்களைப் பெறுவது கடினம். எனவே, தீர்வு ஒன்றில் பழையமுறை. அல்லது ஏதாவது மாற்றுத் தீர்வு.

பழையமுறையில் தேர்தல் நடாத்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுமா? என்பதில் இன்னும் தெளிவில்லை. நாட்கள் கரைந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதற்கான மாற்றுத் தீர்வு தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும்.

இரட்டைவாக்கு
———————-
கலப்புத் தேர்தல்முறை இருக்கின்ற பெரும்பாலான நாடுகளில் இரட்டைவாக்கே அமுலில் உள்ளது. இரட்டை வாக்குத்தான் கலப்புத்தேர்தல் முறையின் அடிப்படையாகும். இது தொடர்பாக முன்னைய ஒரு ஆக்கத்தில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.

இங்கு கட்சிக்கு ஒரு வாக்கு. வேட்பாளருக்கு ஒரு வாக்கு. கட்சி பெறுகின்ற வாக்குகளின் விகிதாரத்திற்கேற்ப கட்சிகளுக்குரிய ஆசனங்கள் பங்கிடப்படுகின்றன. அவற்றில் ஐம்பது வீதத்தை கட்சி தெரிவுசெய்ய அடுத்த ஐம்பது வீதத்தை மக்கள் தொகுதி வேட்பாளர்களில் இருந்து தெரிவு செய்வார்கள். நமது நாட்டில் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை வேட்பாளருக்குரிய வாக்காகவும் கட்சிக்குரிய வாக்காகவும் கணிப்பிடுவதால்தான் பிரச்சினையாகின்றது. அதாவது வாக்கு ஒன்று: தொழில் இரண்டு. ஏனைய நாடுகளில் வாக்கு இரண்டு: தொழில்களும் இரண்டு.

இதனால் முஸ்லிம்களது பிரச்சினை தீருமா?
———————————————————-
இன்ஷாஅல்லாஹ் தீரும்; என்பது மாத்திரமல்ல. சிலவேளை இப்பொழுது இருக்கின்ற விகிதாசாரமுறையைவிடவும் சிலவேளை சிறந்ததாக அமையலாம்.

இதனை விளக்குவதற்கு குருநாகலை மாவட்டத்தை மீண்டும் உதாரணமாக கொள்வோம்.

குருநாகல் மாவட்டத்தில் அண்ணளவாக ஒரு இலட்சம் வாக்குகள் இருந்தும் புதிய முறையின்கீழ் ஒரு ஆசனமும் பெறமுடியாது; என்று முன்னைய ஆக்கங்களில் பார்த்தோம். காரணம் முஸ்லிம் பெரும்பான்மைத்தொகுதி ஒன்றைக்கூட அங்கு உருவாக்க முடியாது.

இரட்டை வாக்காகும்போது
————————————-
இரட்டை வாக்காகும்போது வேட்பாளருக்குரிய வாக்கை அங்கு போட்டியிடுகின்ற ஒரு பெரும்பான்மை சமூகத்தவருக்கு அளிப்பார்கள். அதன் மூலம் இனசௌஜன்யம், மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றல் இலகுவாகும். ( விரிவான விபரத்திற்கு முன்னைய ஆக்கங்களைப் பார்க்கவும்)

கட்சி வாக்கை அங்கு போட்டியிடுகின்ற ஒரு முஸ்லிம் கட்சிக்கு வழங்கலாம். அங்கு போட்டியிடுகின்ற பெரும்பான்மை சமூக வேட்பாளர் கட்சியின் வாக்கில் அதீத அக்கறை காட்டமாட்டார். ஏனெனில் அவருக்கு அவரது வெற்றிதான் முக்கியம். அவருடைய வெற்றிக்கும் கட்சியின் வாக்கிற்கும் சம்பந்தமில்லை.

இந்த வகையில் முஸ்லிம்கள் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தலாம்.

இதிலுள்ள பிரச்சினை
——————————
எடுகோள் ரீதியாக ஒரு பிரச்சினையை கற்பனைசெய்து ஒரு அச்சத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.

அதாவது, A என்ற ஒரு தேசியக்கட்சி போட்டியிடுகின்றது. அது X என்ற ஒரு டம்மி கட்சியையும் ( proxy party) தேர்தலில் நிறுத்துகின்றது. இப்பொழுது A தனது வேட்பாளர்களை தனது கட்சியில் நிறுத்தி X இல் டம்மி வேட்பாளர்களைப் பெயரிடலாம் அல்லது மாறியும் செய்யலாம்.

அதன்பின் மக்களிடம் வேட்பாளருக்குரிய வாக்கை தனது கட்சியில் ( மாறிப்போட்டிருந்தால் அதற்கேற்றதாக) போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு அளிக்கும்படியும் கட்சி வாக்கை டம்மி கட்சிக்கு போடும்படியும் கூறலாம்.

உதாரணமாக, வாக்குகள் ஒரு கோடி என்றும் தெரிவுசெய்யப்படுகின்ற அங்கத்தவர்கள் 100 என்றும் வைத்துக்கொள்வோம். இப்பொழுது தொகுதிகள் ஐம்பதில் 25 தொகுதியை A வெல்கின்றது; எனக்கொள்வோம். A பெற்ற வாக்குகள் ஐம்பது லட்சம் எனவும் கொள்ளவோம். ( அளிக்கப்பட்ட வாக்குகள், செல்லுபடியான வாக்குகள் என்ற கேள்விகளைக் கொண்டுவராதீர்கள். இது இலகு புரிதலுக்காக மட்டும்)

அதேநேரம் கட்சிக்குரிய ஐம்பது லட்சம் வாக்குகளையும் டம்மி கட்சிக்கு அளிக்கச் சொல்கிறார்கள். இப்பொழுது X இற்கு பட்டியில் இருந்து 50 ஆசனங்கள் கிடைக்கும்.

இப்பொழுது எஞ்சியிருக்கின்ற 25 தொகுதிகளை ஏனைய கட்சிகள் வெல்கின்றன. எனவே 100 ஆசனங்கள் பங்கிடப்பட்டுவிட்டன. அதேநேரம் ஏனைய கட்சிகள் தொகுதியில் ஐம்பது லட்சம் வாக்குகள் பெற்ற அதேவேளை கட்சிக்கும் ஐம்பது லட்சம் வாக்குகள் பெற்றிருப்பார்கள். அந்த ஐம்பது லட்சம் வாக்கிற்கும் பட்டியலிலிருந்து 25 ஆசனம் வழங்கியே ஆகவேண்டும்.

இப்பொழுது மொத்த ஆசனம் 125. இவற்றில் overhang 25. அதேநேரம் ஐம்பது லட்சம் கட்சிக்குரிய வாக்கை டம்மியினூடாக பெற்ற கட்சி A இற்கு 75 அங்கத்தவர்கள். அடுத்த ஐம்பது லட்சம் வாக்குகளைப்பெற்ற கட்சிகளுக்கு ஐம்பது ஆசனங்கள். இவ்வாறு வருவதற்கு காரணம் இரட்டை வாக்கு.

எனவே இரட்டை வாக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. அல்லது வெட்டிப்புள்ளி உட்பட கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவேண்டும்; என்பது அரச சிந்தனை. அவ்வாறு கடுமையான நிபந்தனைக் கொண்டுவந்தால் நாம் பாதிக்கப்படுவோமே! எனவே எவ்வாறு இரட்டை வாக்கைக் கோருவது; என்பது சில முஸ்லிம் கட்சிகளின் சிந்தனை.

நானறிந்தவரையில் கலப்புத் தேர்தல்முறை இருக்கின்ற பிரதான நாடுகளான ஜர்மனி, நியூசீலாந்து ஆகிய நாடுகளில் இவ்வாறான பாரதூரமான நிகழ்வுகள் இடம்பெறவில்லை. இது அதீத கற்பனை. கோட்பாட்டு ரீதியாக சாத்தியமானபோதும் நடைமுறையில் சாத்தியமா? என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இங்கு வந்த வெளிநாட்டு நிபுணர்களும் கோட்பாட்டுரீதியான இச்சாத்தியப்பாடுபளைக் கூறி சில தீர்வுகளையும் கூறிவிட்டுச் சென்றார்கள்.

தேவைப்பட்டால் இந்த முஸ்லிம் கட்சிகள் மேலும் நிபுணர்கள்களை நாட்டுக்கு அழைத்து கலந்தாலோசிக்கலாம். அல்லது அந்த நாடுகளுக்கு விஜயம் செய்து இவற்றை ஆராயலாம். எதையும் செய்யாது ‘ பழையமுறையில் தேர்தலை நடாத்துங்கள்; என்று கூறிவிட்டு அமைதியாக இருக்க மீளாய்வுக்குழு அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். அல்லது இம்முறை பழைய முறையில் தேர்தலை நடாத்தினாலும் அடுத்தமுறை, அல்லது பொதுத்தேர்தலுக்கு பிரச்சினை வரலாம்.

எனவே, முஸ்லிம் கட்சிகள் வந்தபின் காக்க புறப்படாமல் வரமுன் காக்கப் புறப்படுங்கள். வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து வருவதற்கோ அல்லது வெளிநாடுகளுக்கு சென்று இதனை ஆய்வு செய்வதற்கோ பொருளாதார வசதியில்லாமல் நீங்கள் இருக்கவில்லை.

தூங்கியது போதும்! துகிலெழுங்கள்!! விடிந்தால் பஸ் போய்விடும். அதன்பின் வெறும் ரோட்டிற்கு கைகாட்டிவிட்டு நாம் கை காட்டினோம்; பஸ் நிற்கவில்லை என்று சமூகத்திடம் கூறாமல் விழித்துக்கொள்ளுங்கள் விடியமுன். ஏறி விடுங்கள் அதிகாலை பஸ்ஸில். பாவம் சமுதாயம்.

உங்களையே நம்பியிருக்கிறது.
நீங்கள் அவர்களை நம்பியிருக்கவில்லை.

முற்றும்

Web Design by The Design Lanka