நவாஸ் ஷெரீஃபை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு » Sri Lanka Muslim

நவாஸ் ஷெரீஃபை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

_102723937_2dc0184f-debe-4418-a364-6f51fa349f3e

Contributors
author image

Editorial Team

BBC


ஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.

நவாசுடன் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள அவரது மகள் மரியமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாசின் மனைவி குல்சூம் நவாஸ் கடந்த வாரம் லண்டனில் இறந்த நிலையில் இவர்களின் விடுதலைக்கான உத்தரவு வந்துள்ளது.

தங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் செய்த மேல்முறையீட்டில் இந்தத் தீர்ப்பு வெளியானது.

முன்னர், கடந்த ஜூலை மாதம், நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம், மரியத்துக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது லட்சம் பவுண்ட் அபராதமும் விதித்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் குடும்பத்தினருக்கு நான்கு வீடுகள் இருப்பதாக கூறப்படும் லண்டன் அவென்ஃபீல்ட் குடியிருப்பு வளாகம்
Image captionபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் குடும்பத்தினருக்கு நான்கு வீடுகள் இருப்பதாக கூறப்படும் லண்டன் அவென்ஃபீல்ட் குடியிருப்பு வளாகம்

அத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவித்தது. மரியம் நவாசின் கணவர் கேப்டன் சஃப்தர் அவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி மஹ்மூத் பஷீர் ஒன்பதரை மாதங்களாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். கடந்த ஜுலை மூன்றாம் தேதியன்று விசாரணையை முடித்துக் கொண்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

இந்த வழக்கில் நவாஜ்ச ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ், ஹசன் நவாஸ், ஹுசைன் நவாஸ் மற்றும் கேப்டன் ஷஃப்தர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ் ஆகிய இருவரையும் ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்துவிட்டது.

அப்போது, இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று நவாஸ் ஷெரீஃப் கூறியிருந்தார். லண்டனில் உள்ள பல சொத்துக்களையும், எவன்ஃபீல்ட் அடுக்குமாடி குடியிருப்பையும் பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka