இந்தியாவில் முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் » Sri Lanka Muslim

இந்தியாவில் முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

india66

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

இந்தியாவில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது.
ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம், முத்தலாக்கில் கணவன், மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும், முத்தலாக் வழங்கியபின் கணவன்-மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் ஆகிய மூன்று முக்கிய திருத்தங்களுடன் இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

முத்தலாக் முறைய தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:முத்தலாக் முறையை உலகில் உள்ள 22 நாடுகள் ஒழுங்குப்படுத்தி, திருத்தியுள்ளன. ஆனால், இந்த பாலின சமத்துவத்தை இந்தியாவில் உள்ளவர்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காக கடைபிடிக்க மறுக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் மரியாதைக்குரிய பெண் தலைவராக இருந்த சோனியா காந்தி காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற முத்தலாக் ஒழிப்புக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார். முத்தலாக் ஒழிப்பு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஓட்டுவங்கி அரசியலுக்காகவே காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்து விட்டது. சோனியா காந்தி, மாயாவதி, மம்த பானர்ஜி ஆகியோர் பாலின சமூகநீதிக்காக இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முறை தொடர்ந்து பெருகி வருவதால் இதை தடுப்பதற்காக அவசர சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டத்தில் பாதிக்கப்பட்ட மனைவியோ, அவரது மிக நெருங்கிய உறவினர்களோ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பாதிக்கப்பட்ட அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவரது குழந்தையை வளர்க்கும் உரிமையும், உள்ளூர் மாஜிஸ்திரேட்டின் உத்தரவுப்படி தனக்கும் தனது குழந்தைக்கும் ஜீவனாம்சம் பெறும் உரிமையையும் இந்த அவசர சட்டம் பெற்றுதரும் இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Web Design by The Design Lanka